பங்குச் சந்தைகளில் சரிவு

முதலீட்டாளர்களின் லாப நோக்கு விற்பனையால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவைக் கண்டது.

முதலீட்டாளர்களின் லாப நோக்கு விற்பனையால் இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சரிவைக் கண்டது.
அமெரிக்காவில் வெளியாகவிருந்த பணவீக்க புள்ளிவிவரம் அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்துவதற்கு காரணமாக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டால் ஆசிய முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டனர். இந்தியாவிலும் பங்கு வர்த்தகம் நாள் முழுவதும் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டது. 
விலை அதிகரிப்பை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை விற்று வெளியேறியதால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது.
மும்பை பங்குச் சந்தையில் தகவல் தொழில்நுட்பத் துறை குறியீட்டெண் 1.56 சதவீதமும், தொழில்நுட்பம் 1.06 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 0.01 சதவீதமும் குறைந்தன.
அதேசமயம், எண்ணெய்-எரிவாயுத் துறை குறியீட்டெண் 1.63 சதவீதமும், ரியல் எஸ்டேட் 1.56 சதவீதமும், பொதுத் துறை நிறுவனங்கள் 1.39 சதவீதமும், நுகர்வோர் சாதனங்கள் 1.32 சதவீதமும், மருந்து 1.04 சதவீதமும் அதிகரித்தன.
இந்திய தொழிலக உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்ததாக வெளியான புள்ளிவிவரத்தின் எதிரொலியாக மோட்டார் வாகன துறை குறியீட்டெண் 0.22 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் துறை குறியீட்டெண் 0.09 சதவீதமும் ஏற்றம் பெற்றன.
டாடா சன்ஸ் பங்கு விற்பனை மூலம் ரூ.8,200 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து டிசிஎஸ் பங்கின் விலை 5.22 சதவீதம் சரிந்து 
ரூ.2,892.45-ஆனது.
ஹெச்சிஎல், இன்ஃபோசிஸ், கோட்டக் மஹிந்திரா வங்கி, கோல் இந்தியா, என்டிபிசி, மாருதி சுஸுகி, எல்&டி, ஹெச்யுஎல், அதானி போர்ட்ஸ், இன்டஸ்இண்ட் வங்கி, ஓஎன்ஜிசி உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 1.46 சதவீதம் வரை குறைந்தன.
அதேசமயம், ஆக்ஸிஸ் வங்கி, ஸன் பார்மா, பார்தி ஏர்டெல், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 2.23 சதவீதம் வரையில் உயர்ந்து, பங்குச் சந்தையின் சரிவை மட்டுப்படுத்தின.
நிதி மோசடியில் ஈடுபட்ட கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனப் பங்குகள் விலை 5 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.14.30-ஆனது. அதேசமயம், பஞ்சாப் நேஷனல் வங்கி பங்கின் விலை 3.59 சதவீதம் அதிகரித்து ரூ.98-ஆனது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிந்து 33,856 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 5 புள்ளிகள் குறைந்து 10,426 புள்ளிகளில் நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com