Enable Javscript for better performance
பங்குச் சந்தை மூலம் நிறுவனங்கள் ரூ.1.77 லட்சம் கோடி திரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    பங்குச் சந்தை மூலம் நிறுவனங்கள் ரூ.1.77 லட்சம் கோடி திரட்டல்

    By DIN  |   Published on : 31st March 2018 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stock

    பங்குச் சந்தையிலிருந்து நிறுவனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் 2017-18 நிதி ஆண்டில் ரூ.1.77 லட்சம் கோடியை திரட்டியுள்ளன. 
    இதுகுறித்து பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: பங்குச் சந்தையிலிருந்து நிதி திரட்டும் நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டியதன் விளைவாக வரலாற்றில் முதல் முறையாக அதிக தொகையை அவை திரட்டியுள்ளன. குறிப்பாக, பொதுப் பங்கு வெளியீடு, தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கான பங்கு ஒதுக்கீட்டின் வாயிலாக நிறுவனங்கள் அதிக தொகையை திரட்டிக் கொண்டுள்ளன. 
    அதன்படி, 2017-18 நிதி ஆண்டில் நிறுவனங்கள் ரூ.1,77,116 கோடியை திரட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளன. கடந்த நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 3.46 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-17-இல் பங்குச் சந்தை வாயிலாக நிறுவனங்கள் ரூ.51,120 கோடியை மட்டுமே திரட்டியிருந்தன. இது, 2009-10-இல் ரூ.86,710 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பு நிதி ஆண்டில் 45 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டின் வாயிலாக மொத்தம் ரூ.82,109 கோடியை திரட்டியுள்ளன.
    முதலீட்டாளர்களிடமிருந்து பொது பங்கு வெளியீட்டுக்கு ஆதரவு பெருகியதையடுத்து, 17 நிறுவனங்களுக்கான பங்கு வெளியீட்டுக்கு 10 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் குவிந்தன. 
    மொத்தம் 38 நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்டதில் 17 நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 10 சதவீதத்துக்கும் அதிகமாக சிறப்பான வருவாயை அளித்துள்ளன. 
    தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு 52 நிறுவனங்கள் பங்குகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம் அவை ரூ.62,538 கோடியை திரட்டியுள்ளன. இது முன்னெப்போதும் காணப்படாத அளவாகும். 
    மேலும், மத்திய அரசு, பங்கு விற்பனையின் வாயிலாக ரூ.98,965 கோடியை திரட்டியுள்ளது. கடன் பத்திர சந்தையின் மூலம் எட்டு நிறுவனங்கள் ரூ.4,861 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இருப்பினும், 2016-17 நிதி ஆண்டில் 16 வெளியீடுகள் மூலம் திரட்டிய ரூ.29,547 கோடியுடன் ஒப்பிடுகையிலில் இது குறைவான அளவேயாகும். 
    2018-19-ஆம் நிதி ஆண்டைப் பொருத்தவரை பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இது, நிறுவனங்கள் சந்தையிலிருந்து நிதி திரட்டும் நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்று பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai