மின் வாகனங்கள் காலத்தின் கட்டாயம்

நமது அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது போக்குவரத்து. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால்,
மின் வாகனங்கள் காலத்தின் கட்டாயம்

நமது அன்றாட அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது போக்குவரத்து. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல வேண்டுமென்றால், நாம் ஏதோ ஒரு வகையான வாகனத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. கிராமப் பகுதிகளில் வசிப்பவராக இருந்தாலும் சரி, நகர்ப்புறங்களில் வசிப்பவராக இருந்தாலும் சரி, அன்றாடம் வாகனங்களைப் பயன்படுத்தி, கல்வி நிலையத்துக்கோ, பணியிடத்துக்கோ செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. சரக்குகளைக் கையாள்வதிலும் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு பகுதிக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு பேருந்து வரவில்லையென்றால், அப் பகுதியில் உடனே மறியல் போராட்டம் நடத்துகின்றனர். 
இப்படி, நம் வாழ்வில் ஓர் அங்கமாகிப் போன போக்குவரத்து வசதிகள் மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய அளவுக்கு உள்ளதா என்றால், இல்லை என்றே ஆணித்தரமாகச் சொல்ல முடியும். 
மாநில அரசுகள் மற்றும் தனியாரால் இயக்கப்படும் பேருந்துப் போக்குவரத்து மக்கள்தொகைக்கு ஏற்ப போதிய அளவுக்கு இயக்கப்படவில்லை என்பதே உண்மை. இதனால், கடன்பட்டாவது, மாதத் தவணையில் இரு சக்கர வாகனம் ஒன்றை வாங்கி, அதில் கணவனும் மனைவியும் பணிக்குச் செல்லும் நிலை உள்ளது. இத்தகைய போக்கு அதிகரித்து வருகிறது. இதனால், நாளுக்கு நாள், நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல், புறநகர்ப் பகுதிகளிலும் வாகன நெரிசல் என்பது சர்வ சகஜமாகிவிட்டது. 
1951-இல் 8.8 சதவீதமாக இருந்த இரு சக்கர வாகனப் பயன்பாடு, 2016-இல் 73.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில், 1951-இல் 10 சதவீதமாக இருந்த பேருந்துப் பயன்பாடு, 2016-இல் 0.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது, மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பொதுப் போக்குவரத்து வசதி அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. 
மத்தியதர மக்களின் பொருளாதார வசதி வளர்ச்சி பெற்றதனால், வாகன நுகர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் விரிவடைந்ததையடுத்து, வெளிநாட்டு வாகன நிறுவனங்களும் இந்தியாவுக்குப் படையெடுக்கத் தொடங்கின. ஆனால் இந்தப் படையெடுப்பு வரவேற்புக்குரிய படையெடுப்பாக உள்ளது! வாகன உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும், அவர்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தும் மாடல்களும் அதிகரித்து வருகின்றன.
இவற்றையெல்லாம் தொடர்ந்து, வாகனங்களுக்கான எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. பல்வேறு காரணங்களால், எரிபொருள்களான பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் வாகன விற்பனை மட்டும் குறைந்தபாடில்லை என்றே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தனி நபர் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
இது ஒருபுறமிருக்க, வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையானது, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. காற்று மாசு ஏற்படுவதற்கு முக்கியக் காரணியாக வாகனங்கள் உள்ளன. 
காற்று மாசானது, நம் உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதிக்கிறது. காற்று மாசை மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரி என்றே சொல்லலாம். வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், கருப்பையில் இருக்கும் சிசு கூட பாதிக்கப்படுகிறது.
வாகனப் புகையால் காற்றில் கலக்கும் நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்ûஸடு, சல்பர்-டை-ஆக்ûஸடு ஆகியவை மனித குலத்துக்குக் கேடு விளைவிக்கின்றன. 
இதையெல்லாம் பார்க்கும்போது, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தும், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் போன்ற சுற்றுச்சூழல் மாசை ஏற்படுத்தும் எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரித்தும், பல்வேறு நோய்களை விலைக்கு வாங்கத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.
இன்றைய நிலையில், தனி நபர் வாகனப் பயன்பாட்டைக் குறைத்து, பேருந்துப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களை இயக்க வேண்டிய நிர்பந்தத்துக்கும் ஆளாகியுள்ளோம்.
மேலும், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலையில், அதற்கு மாற்று எரிபொருள் கண்டறிந்தாக வேண்டும் என்ற நிலையில், தற்போது மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர், வேன், கார், பேருந்து ஆகியவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில் கொள்கைகளை வகுப்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது.
இதன் மூலம், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கலாம். சுற்றுச்சூழலைக் காக்கலாம். பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதிக்காகச் செலவிடும் அந்நியச் செலாவணியும் மிச்சமாகும். 2030-ஆம் ஆண்டுக்குள் மின் வாகனங்களின் புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இயற்கை எரிவாயுவால் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், மொத்த வாகன எண்ணிக்கையில் 15 சதவீத அளவுக்கு அதிகரித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறைவேறுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கி விட்டது என மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி அண்மையில் தெரிவித்துள்ளார்.
பேட்டரி (மின்) மற்றும் உயிரி எரிபொருளில் இயங்கும் வாகனங்களை அதிக அளவில் புழக்கத்துக்குக் கொண்டு வர வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதில் ஐயமே இல்லை. பேட்டரி வாகனங்கள் தொடர்பாக விரிவான அறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தயாரித்துள்ளது. பேட்டரி வாகனங்களின் விலை குறையும்போது, மக்கள் தாங்களாகவே முன்வந்து அந்த வாகனங்களை வாங்குவர். அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, குறைந்த விலையில் பேட்டரி கார்களை கொடுக்க முடியும். பேட்டரி வாகனங்களுக்கு இப்போது 12 சதவீதம்தான் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கப்படுகிறது.
தற்போது இந்தியாவில் 1000 பேரில் 18 பேரிடம் கார் உள்ளது. அதே சமயத்தில், அமெரிக்காவில் 1000 பேரில் சுமார் 900 பேரிடம் கார்கள் உள்ளன. அந்த அளவுக்கு நம்மால் உயர்த்திக் கொள்ள முடியாதுதான். எனவே, பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதியை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. 
இந்திய மக்கள்தொகைக்கு ஏற்ப, 30 லட்சம் பேருந்துகள் இருக்க வேண்டும். நாட்டில் தற்போது 19 லட்சம் பேருந்துகள் உள்ளன என்றாலும், அவற்றில் 2.8 லட்சம் பேருந்துகளே அரசு போக்குவரத்துக் கழகங்களின் கீழ் செயல்பட்டு வருகின்றன என அரசின் புள்ளிவிவரமே தெரிவிக்கிறது.
சீனாவில், 1000 பயணிகளுக்கு 6 பேருந்துகள் என்ற நிலை உள்ளது. இந்தியாவில் 10,000 பயணிகளுக்கு 4 பேருந்துகள் என்ற மோசமான நிலை. மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் அரசின் பொதுப் போக்குவரத்தையே நம்பி இருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் சொந்த வாகனங்கள் வாங்க இயலாதவர்கள். தேவைக்கும் பயன்பாட்டுக்கும் மிகப் பெரிய இடைவெளி. இயன்றவர்கள் சொந்த வாகனங்களை வாங்குகின்றனர். இந்த நிலையில்தான் வாகன உற்பத்தி வளர்ச்சியை நாம் கண்டு வருகிறோம்! 
நமது போக்குவரத்து வசதிகளை பிரச்னையின்றிப் பெற வேண்டுமானால், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது தனியார் பயன்பாட்டுக்காக மட்டுமல்லாமல், பேருந்து போன்ற பொதுப் பயன்பாட்டுக்காகவும் இருத்தல் வேண்டும். மிகப் பெரிய தேவையைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான இலக்குகளையும் நாம் மறந்துவிடக் கூடாது. அதற்காக, நமது கவனத்தை மின்சார வாகன உற்பத்தியில் செலுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள், போக்குவரத்துத் துறை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாகும்.

* முதல் மின்சார கார் 1884-ஆம் ஆண்டு லண்டனில்தாமஸ் பார்க்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
* இந்தியாவில் முதல் மின்சாரப் பேருந்து பெங்களூரில் 2014-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
* 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் சுமார் 30 லட்சம் மின்சார வாகனங்கள் புழக்கத்தில் உள்ளன.
* சுற்றுச்சூழலுக்கு உகந்தமின்சார வாகனத்தைஅசோக் லேலண்ட் நிறுவனம் 2016 அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.
* ரெனோ, டாடா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் இணைந்து 2020-ஆம் ஆண்டில் 5 மின்சார வாகன மாடல்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.
* இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்ய டொயோட்டா மற்றும் சுஸுகி நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. சுஸுகி நிறுவனத்தின் ஆலைகளில் தயாரிக்கப்படும் இந்தக் கார்கள் 2020-இல் இந்தியச் சாலைகளில் வலம் வரும் என எதிர்பார்க்கலாம்.
* சீன வாகனச் சந்தைக்கு ஏற்ப ஒரு மின்சார வாகனத்தை ரெனோ நிறுவனம் வடிவமைத்து வருகிறது. இது சீன வாடிக்கையாளர்களைக் கவரும்பட்சத்தில், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 2022-ஆம் ஆண்டு வாக்கில் ஏற்றுமதி செய்ய ரெனோ திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
- பா. ராஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com