இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 41,200 கோடி டாலரை எட்டியது

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 41,200 கோடி டாலரை (ரூ.28.84 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு மார்ச் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 41,200 கோடி டாலரை (ரூ.28.84 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
 கடந்த மார்ச் 29-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 500 கோடி டாலர் (ரூ. 35,000 கோடி) உயர்ந்து 41,190 கோடி டாலராகியுள்ளது. டாலர்-ரூபாய் "ஸ்வாப்' திட்டம் முதன் முதலாக நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து செலாவணி கையிருப்பு கணிசமான உயர்வைக் கண்டுள்ளது.
 இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 102.9 கோடி டாலர் உயர்ந்து 40, 690 கோடி டாலராக காணப்பட்டது.
 கணக்கீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 524 கோடி டாலர் அதிகரித்து 38,405 கோடி டாலராக காணப்பட்டது.
 தங்கத்தின் கையிருப்பில் மாற்றம் எதுவுமின்றி 2,340.8 கோடி டாலர் என்ற அளவிலேயே காணப்பட்டது.
 அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் இருப்பு 36 லட்சம் டாலர் குறைந்து 145 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு மதிப்பு 74 லட்சம் டாலர் சரிந்து 298 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
 கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாற்றில் முதல் முறையாக 42,603 கோடி டாலரை எட்டியிருந்தது.
 ஆனால், அதன்பிறகு காணப்பட்ட மோசமான பொருளாதார சூழல் காரணமாக மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் 2,000 கோடி டாலர் (சுமார் ரூ.2.17 லட்சம் கோடி) அளவுக்கு சரிவு ஏற்பட்டது.
 இந்த நிலையில், ரிசர்வ் வங்கி செலாவணி கையிருப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் டாலர் கையிருப்பு மீண்டும் 42,000 கோடி டாலரை நெருங்கி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com