ஏர்டெல் ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தல்

டாடா டெலிசர்வீசஸ் (டிடிஎஸ்எல்) நிறுவனத்தை பார்தி ஏர்டெல்லுடன் இணைப்பதற்கு அந்நிறுவனம் ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி
ஏர்டெல் ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தல்


டாடா டெலிசர்வீசஸ் (டிடிஎஸ்எல்) நிறுவனத்தை பார்தி ஏர்டெல்லுடன் இணைப்பதற்கு அந்நிறுவனம் ரூ.7,200 கோடிக்கு வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி கூறியதாவது:
பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் டிடிஎஸ்எல் நிறுவனத்தை இணைப்பதற்கு இந்திய தொலைத்தொடர்புத் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா நிபந்தனைகளின் பேரில்  இந்த இணைப்பு திட்டத்துக்கான அனுமதியை ஏப்ரல் 9-ஆம் தேதி வழங்கினார். அமைச்சர் ஒப்புதல் அளித்ததையடுத்து, ரூ.7,200 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை அளிக்குமாறு ஏர்டெல் நிறுவனத்திடம் தொலைத் தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.
ஏர்டெல் நிறுவனம் அளிக்கவுள்ள ரூ.7,200 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தில், ரூ.6,000 கோடி ஒரு முறை செலுத்தக்கூடிய அலைக்கற்றைக்கான கட்டணம் ஆகும். எஞ்சியுள்ள ரூ.1,200 கோடி டிடிஎஸ்எல் நிறுவனத்திடமிருந்து கையகப்படுத்தக்கூடிய அலைகற்றைக்கானது ஆகும்.
இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி, டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்துக்கு 19 தொலைத் தொடர்பு வட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைக்கப்படுவர். மொத்தமுள்ள 19 தொலைத்தொடர்பு வட்டங்களில் 17-இல் டிடிஎஸ்எல் நிறுவனமும், 2-இல் டாடா டெலிசர்வீசஸ் (மஹாராஷ்டிரா) நிறுவனமும் சேவையை மேற்கொண்டு வருகின்றன.
இந்த இணைப்பின் மூலம், ஏர்டெல் நிறுவனத்துக்கு கூடுதலாக 178.5 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை 1800, 2100 மற்றும் 850 அலைவரிசைகளில் கிடைக்கும். இது அந்நிறுவனத்தின் 4 ஜி சேவை பரவலாக்கத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com