சுடச்சுட

    
    mutualfund


    உணவுப் பொருள்களின் விலை அதிகரிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 2.86 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    இதுகுறித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
    நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்கம் மார்ச் மாதத்தில் 2.86 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு, எரிபொருள் மற்றும் உணவுப் பொருள் வாங்குவதற்கு நுகர்வோர்கள் அதிகம் செலவிட நேர்ந்ததே முக்கிய காரணம்.
    இப்பணவீக்கம் முந்தைய பிப்ரவரி மாதத்தில் 2.57 சதவீதமாகவும், கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 4.28 சதவீதமாகவும் இருந்தது.
    கடந்தாண்டு ஜூலையில் 4.17 சதவீதமாக காணப்பட்ட சில்லறைப் பணவீக்கம் தற்போது கடந்த எட்டு மாதங்களாக ரிசர்வ் வங்கி அனுமதித்த அளவான 4 சதவீதத்துக்குள்ளாகவே இருந்து வருகிறது.
    மதிப்பீட்டு மாதத்தில், ஒட்டுமொத்த உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் 0.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோன்று, எரிபொருள்களுக்கான பணவீக்கமும் 1.24 சதவீதத்திலிருந்து உயர்ந்து 2.42 சதவீதமாக காணப்பட்டது.
    பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் அவை முறையே மார்ச் மாதத்தில் மைனஸ் 5.88 சதவீதம் மற்றும் மைனஸ் 4.90 சதவீதமாக இருந்தது. 
    அதேபோன்று உணவு தானியங்களுக்கான விலையும் 1.32 சதவீதத்திலிருந்து 1.25 சதவீதமாக குறைந்துள்ளது என்று புள்ளிவிவரத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    நடப்பு நிதியாண்டில் முதல் அரையாண்டில் சில்லறை பணவீக்கம் 2.9-3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பீடு செய்துள்ளது. இதற்கு, எரிபொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பே முக்கிய காரணம். அதேசமயம், இரண்டாவது அரையாண்டில் சில்லறை பணவீக்கம் 3.5-3.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ரிசர்வ் வங்கி நிதி கொள்கை ஆய்வு முடிவுகளை மேற்கொள்வதற்கு சில்லறை பணவீக்கம் என்பது முக்கிய ஆதாரமாக உள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai