3-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு

பல்வேறு சாதகமற்ற சூழல்களை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்றும் பங்குச் சந்தைகள்
3-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் சரிவு

பல்வேறு சாதகமற்ற சூழல்களை கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 3-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையன்றும் பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை விவகாரத்தால் ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக , சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த நிதானத்துடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அடுத்த சில வாரங்களுக்கு பங்கு வர்த்தகத்தின் போக்கை தீர்மானிப்பதில், நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மற்றும் நடைபெற்று வரும் பொதுத் தேர்தல் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், வர்த்தகத்தின் இறுதிப் பகுதியில் முதலீட்டாளர்கள் சற்று ஆர்வத்துடன் முதலீடு மேற்கொண்டதையடுத்து பங்குச் சந்தைகள் பெரும் சரிவிலிருந்து தப்பின.
தொலைத்தொடர்பு மற்றும் மோட்டார் வாகன பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டதையடுத்து அத்துறைகளின் குறியீட்டெண்கள் 1.38 சதவீதம் வரை சரிந்தன.
அதிகபட்சமாக மாருதி சுஸýகி பங்கின் விலை 3.60 சதவீத வீழ்ச்சியைக் கண்டது. யெஸ் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் என்டிபிசி பங்குகளின் விலை 2.33 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், ஓஎன்ஜிசி, சன் பார்மா, பஜாஜ் பைனான்ஸ், கோல் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்சிஎல் டெக் மற்றும் ஹெச்யுஎல் பங்குகளின் விலை 3.93 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிந்து 38,564 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் "நிஃப்டி' 18 புள்ளிகள் குறைந்து 11,575 புள்ளிகளில் நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com