
பொதுத் துறையைச் சேர்ந்த ஆந்திரா வங்கி முதல் காலாண்டில் ரூ.52 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கி செபியிடம் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் ஆந்திரா வங்கியின் மொத்த வருவாய் ரூ.5,437.03 கோடியாக இருந்தது. கடந்த நிதியாண்டில் ஈட்டி வருவாய் ரூ.5,092.08 கோடியுடன் ஒப்பிடுகையில் இது அதிகம்.
வங்கி, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.1,233.61 கோடி நிகர இழப்பையும், 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.539.83 கோடி நிகர இழப்பையும் கண்டிருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் லாப பாதைக்கு திரும்பி தனிப்பட்ட நிகர லாபமாக ரூ.52 கோடியை ஈட்டியுள்ளது.
ஜூன் 30-ஆம் தேதி வழங்கப்பட்ட மொத்த கடனில் நிகர வாராக் கடன் விகிதம் 7.96 சதவீதத்திலிருந்து 5.67 சதவீதமாக சரிந்துள்ளது. அதேபோன்று மொத்த வாராக் கடன் விகிதமும் 16.69 சதவீதத்திலிருந்து 16.44 சதவீதமாக குறைந்துள்ளது.
வாராக் கடன் இடர்பாட்டிற்கான ஒதுக்கீடு ரூ.1,387.87 கோடியிலிருந்து ரூ.922.96 கோடியாக குறைந்துள்ளது என செபியிடம் ஆந்திரா வங்கி தெரிவித்துள்ளது.