
நடப்பு நிதியாண்டில் மூன்றாவது வரிசையில் வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலையை மத்திய அரசு கிராமுக்கு ரூ.3,499-ஆக நிர்ணயித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்கள் விற்பனை வரும் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் (ஆகஸ்ட் 9) நிறைவடைய உள்ளது. தற்போது வெளியிடப்படவுள்ள தங்கப் பத்திரங்களுக்கான விலை கிராமுக்கு ரூ.3,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கப் பத்திரங்களை வாங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வெளியீட்டு விலையிலிருந்து ரூ.50 தள்ளுபடி வழங்க ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இதையடுத்து, இந்த வகை முதலீட்டாளர்களுக்கு தங்கப் பத்திரம் கிராமுக்கு ரூ.3,449- விலையில் விற்பனை செய்யப்படும் என நிதி அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள், பங்கு விற்பனை மையங்கள், அஞ்சல் அலுவலகங்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் ஆகியவற்றின் மூலமாக தங்க பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், தனி நபர் ஒருவர் நிதியாண்டுக்கு அதிகபட்சம் 500 கிராம் வரையில் முதலீடு செய்யலாம்.
உள்நாட்டு சேமிப்பை அதிகரிக்கவும், தங்கம் இறக்குமதியை குறைக்கவும் தங்கப் பத்திரங்கள் விற்பனையை மத்திய அரசு கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பரில் அறிமுகப்படுத்தியது. இதில் மேற்கொள்ளப்படும் முதலீடு பாதுகாப்பானது என்பதால் பொதுமக்களிடையே இதற்கு வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது.