59 நிமிடங்களில் ரூ.5 கோடி வரை கடன்! சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு வித்திடுமா?

சிறு, குறு தொழில்களின் மேம்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட 59 நிமிடங்களில் ரூ.5 கோடி வரையில் கடன் வழங்கும் இணையத் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு
59 நிமிடங்களில் ரூ.5 கோடி வரை கடன்! சிறு, குறு தொழில்களின் வளர்ச்சிக்கு வித்திடுமா?

சிறு, குறு தொழில்களின் மேம்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட 59 நிமிடங்களில் ரூ.5 கோடி வரையில் கடன் வழங்கும் இணையத் திட்டத்தில் தொழில் முனைவோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்காகவும், தொழில்களை விரிவாக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 59 நிமிடங்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெறுவதற்கான அனுமதியை இணையதளம் வாயிலாக வழங்கி வருகிறது. இதற்காக www.psbloansin59minutes.com என்ற பிரத்யேக இணைய தளம் சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி (எஸ்ஐடிபிஐ) மூலம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு எளிதாகக் கடன் கிடைப்பது, எளிதாக சந்தை வாய்ப்பு கிடைப்பது, தொழில்நுட்ப மேம்பாடு, எளிதாக வர்த்தகம் செய்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த உணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கடந்தாண்டு நவம்பரில் இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி இணையப் பக்கம் மூலம் இந்த இணையப் பக்கத்திற்கு தொடர்பு கிடைக்கும். இதன் மூலம் மீண்டும் வங்கிக் கிளைக்கு செல்ல தொழில்முனைவோருக்கு அவசியம் எழாது.
ஜி.எஸ்.டி. பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில் முனைவோர் பெறும் கடன்களுக்கு 2 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்றுமதிக்கு முந்தைய அல்லது ஏற்றுமதிக்குப் பிந்தைய காலத்தில் ஏற்றுமதியாளர்கள் பெறுகின்ற கடன்களுக்கு வட்டித் தள்ளுபடி 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் தங்களின் மொத்தக் கொள்முதலில் 20 சதவீதத்திற்கு பதிலாக 25 சதவீதம் சிறு, குறுதொழில் முனைவோரிடமிருந்து கொள்முதல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், 3 சதவீதம் பெண் தொழில்முனைவோரிடம் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
இதுமட்டுமல்லாது அரசின் மின்னணுச் சந்தையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட விநியோகிப்பாளர்களில் 40 ஆயிரம் பேர் சிறு, குறு தொழில்முனைவோராக உள்ளனர். தொழில் நிறுவனத்தை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும், கட்டுமான அனுமதியும் பெறுவது தொழில் முனைவோருக்கு அவசியமாகிறது. 
காற்று மாசு மற்றும் தண்ணீர் மாசு தொடர்பான விதிகளுக்கு தனித்தனியாக ஒப்புதல் பெறுவதற்கு பதிலாக இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே அனுமதியாக மாற்றப்படுவது சிறு, குறு தொழில்களுக்கு மேலும் பயனைத் தருவதாக உள்ளது.
ஆனால், இவை அனைத்தும் ஏற்கெனவே இத் துறையில் உள்ள தொழில்முனைவோர்களுக்கான பலன் தரும் திட்டங்களாகவே உள்ளன. புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்கவும் இத்தகைய நடைமுறைகள் அவசியம் என்கின்றனர் தொழிற் சங்கத்தினர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கத் (டான்சியா) தலைவர் எஸ். அன்புராஜன் கூறியது:
சிறு, குறு தொழில்களின் விரிவாக்கத்தையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு இத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எண், வருமான வரித் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம், 6 ஆண்டு வங்கி பணப்பரிமாற்றம், தொழில்முனைவோர் குறித்த விவரங்கள் ஆகியவற்றுடன் இணையப்பக்கத்தில் விண்ணப்பித்தால் 59 விநாடிகளில் விண்ணப்பம் முதல்கட்ட அனுமதிக்கு தகுதி பெறுகிறது. பின்னர், தொழில்முனைவோர் விரும்பும் வங்கி அல்லது அவர்களது திட்டத்துக்கு கடன் வழங்க விருப்பம் தெரிவிக்கும் வங்கி பரிந்துரை செய்யப்பட்டு மீண்டும் வங்கியை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பின்னர், அந்த வங்கி கேட்கும் ஆவணங்களைப் பெற்று வழங்கி கடன்பெற 6 மாதம் முதல் ஓராண்டு காலம் வரை ஆகிறது. இந்த திட்டத்தில் முன்அனுமதி மட்டுமே 59 விநாடிகளில் சாத்தியமாகிறது. கடன் பெற காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கில்லை. அதற்கு சிறு, குறுந்தொழில்கள் மேம்பாட்டு வங்கியும், மத்திய அரசும் உரிய தீர்வு காண வேண்டும். புதிய தொழில்முனைவோருக்கு இத் திட்டத்தில் பயன்பெற வாய்ப்புகள் இல்லை என்பதும் சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக்கான பின்னடைவாக அமைந்துள்ளது என்றார்.
டிடிட்சியா தலைவர் என். கனகசபாபதி கூறியது: 59 விநாடிகளில் கடன் அனுமதி என்பது ஏற்கெனவே தொழில் செய்யும் நபர்களுக்கானது. புதிய தொழில்முனைவோருக்கு இந்த இணையத்தில் வாய்ப்பு இல்லை. மேலும், விண்ணப்பம் அனைத்தும் ஆன்லைன் என்றாகிவிட்டது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படவில்லை. குறிப்பாக மாசுக் கட்டுப்பாட்டு அனுமதி, மின்வாரிய அனுமதி என்பது பெரும் சவாலாக உள்ளது. இணையத்தில் விரைந்து விண்ணப்பித்தாலும் வங்கிகள் கேட்கும் ஆவணங்களை பெற்று வழங்க தொழில்முனைவோர் பல நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. கடன் கோரி விண்ணப்பிக்கும் முறையை மட்டும் எளிதாக்கி பயனில்லை. அதற்கான ஆவணங்களை பெறுவதிலும் ஒற்றைச் சாளர முறையில் துரித நடவடிக்கை அவசியம் என்றார் அவர்.
- ஆர். முருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com