சரிந்து வரும் பருத்தி நூல் ஏற்றுமதி: கலக்கத்தில் நூற்பாலைகள்!

இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்து வருவதால் நூற்பாலைகளின் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
சரிந்து வரும் பருத்தி நூல் ஏற்றுமதி: கலக்கத்தில் நூற்பாலைகள்!

இந்தியாவின் பருத்தி நூல் ஏற்றுமதி தொடர்ந்து சரிவடைந்து வருவதால் நூற்பாலைகளின் உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
 உலகில் அதிகம் பருத்தி உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னணியில் இருப்பது இந்தியா. இந்திய ஜவுளித் துறையின் மிக முக்கியப் பிரிவுகளில் ஒன்று பருத்தி நூல் தயாரிப்பு. உலகின் மொத்த பருத்தி நூல் தேவையில் 26 சதவீதத்தை இந்தியா பூர்த்தி செய்கிறது. நாட்டின் மொத்த பருத்தி நூல் உற்பத்தியில் 32 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளில் இது 27 சதவீதமாக குறைந்துள்ளது.
 கடந்த 2013-14-ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் உற்பத்தியான மொத்த பருத்தி நூலில் மூன்றில் ஒரு பங்கான 1,310 மில்லியன் கிலோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. இதனால் 2017-18 -ஆம் ஆண்டில் பருத்தி நூல் ஏற்றுமதி 1,097 மில்லியன் கிலோவாக குறைந்தது.
 உலக உற்பத்தியில் 47 சதவீத பருத்தி நூலை கொள்முதல் செய்யும் சீனாதான், இந்தியாவின் நூலை இறக்குமதி செய்வதில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது.
 இந்திய நூலுக்கு சீனாவில் 3.5 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியத்தில் 4 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. வியத்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
 இதனால் சீனாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டு வியத்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் இருந்து பருத்தி நூலை அதிகமாக இறக்குமதி செய்கின்றன. இது இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைக் காட்டிலும் கூடுதலாக நூலைத் தயாரித்து வரும் இந்திய நூற்பாலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 கடந்த சில ஆண்டுகளாகவே நூல் ஏற்றுமதி குறைந்து வந்தாலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) கடந்த ஆண்டைக் காட்டிலும் 33 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் இந்திய பருத்தி ஜவுளி ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (டெக்ஸ்புரோசில்) தலைவரான கே.வி.ஸ்ரீனிவாசன்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10.70 கோடி கிலோ நூல் ஏற்றுமதியாகியிருந்த நிலையில் நடப்பு ஆண்டு அதே காலகட்டத்தில் 16 சதவீதம் குறைந்து 9 கோடி கிலோ நூல் மட்டுமே ஏற்றுமதியாகியுள்ளது. அதேபோல மே மாதத்தில் 30 சதவீதம் குறைவாக 7.7 கோடி கிலோ மட்டுமே பருத்தி நூல் ஏற்றுமதியானது.
 ஜூன் மாதத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவாக, அதாவது 5.9 கோடி கிலோ நூல் மட்டுமே ஏற்றுமதியானது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது சுமார் 50 சதவீதம் குறைவாகும். இந்த நிலைமைதான் நூற்பாலைகளை வெகுவாக கவலை அடையச் செய்துள்ளது.
 இந்த நிலையில் ஏப்ரல் முதல் பாகிஸ்தானுக்கும் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், இனி பாகிஸ்தானில் இருந்தும் சீனா தனக்குத் தேவையான நூலைக் கொள்முதல் செய்து கொள்ளும்.
 அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போரின் தீவிரம் வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சுமார் 300 பில்லியன் டாலர் பொருள்களுக்கும் கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
 இந்தப் பொருள்களில் ஆடை வகைகளும் இருக்கும் என்பதால், ஏற்கெனவே ஜவுளி உற்பத்தியைக் குறைத்து வரும் சீனா, மேலும் கூடுதலான அளவில் குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சீனாவுக்கான நூல் ஏற்றுமதி மேலும் குறையும். கடந்த மாதங்களில் ஏற்பட்டுள்ள சரிவால் நலிந்து வரும் நூற்பாலைகளுக்கு இது மேலும் ஒரு பேரிடியாகவே இருக்கும்.
 எனவேதான் ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகை, வட்டி சலுகை, மத்திய, மாநில அரசுகளின் ஏற்றுமதிக்கான வரிகளை திரும்பப் பெறும் சலுகை, சர்வதேச விலைக்கு நிகராக இந்திய நூலின் விலையைக் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
 இது குறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கப் பொதுச் செயலர் கே.செல்வராஜு கூறியதாவது:
 இந்திய அரசு பருத்தி நூலை மூலப் பொருள் என்று தொடர்ந்து தவறாகக் கருதி வருவதால்தான் இந்தச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நூலுக்கு சலுகை வழங்க மறுக்கின்றனர். நூலுக்குச் சலுகை வழங்கினால் ஏற்றுமதி அதிகரித்து உள்நாட்டில் விலை உயர்ந்துவிடும் என தவறாகக் கருதுகின்றனர். இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மூலதனச் சலுகை, வட்டிச் சலுகைகள், புதிய ஜவுளிக் கொள்கைகள் கொண்டுவந்ததால் நாட்டின் ஒட்டுமொத்த நூல் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளது.
 உள்நாட்டுத் தேவைக்கு அதிகமாக சுமார் 1 கோடி நூற்புக் கதிர்கள் வரை இந்தியாவில் உள்ளன. இதன் மூலம் ஏற்றுமதி தொழில் நன்றாக நடைபெற்று வந்தது. பஞ்சு ஏற்றுமதி நலிவடைந்துள்ள நிலையில், தற்போது நூல் ஏற்றுமதியும் சரிந்ததால் நூற்பாலைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன. நூல் ஏற்றுமதிக்கு அரசு வழிவகை செய்தால் பருத்தி விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். இந்த ஆண்டு கூட குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நூல் ஏற்றுமதி நல்ல நிலையில் இருந்தால் விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும்.
 அதேபோல ஒரு சதவீத மார்க்கெட் கமிட்டி வரி, தொழில் வரி, மின்சார வரி, எரிபொருள்களுக்கான வரிகள் எல்லாம் சேர்த்து 5 சதவீதம் வரை ஆகிறது. இந்த வரிகளையும் திரும்பக் கிடைக்கும்படி செய்ய வேண்டும். ஜவுளித் துறை அமைச்சகம் எங்களது நிலைமையை புரிந்து கொண்டிருந்தாலும், வர்த்தகம், நிதி அமைச்சகங்களும் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 நூற்பாலைகள் மிகப் பெரிய மூலதனத்தில் தொடங்கக் கூடிய தொழிலாக இருப்பதால் அவை நலிவடைந்தால் உடனடியாக மீட்க முடியாமல் போய்விடும். எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக கவனம் செலுத்தினால் நாட்டின் பல நூற்பாலைகள் காப்பாற்றப்படும் என்றார்.


 - க. தங்கராஜா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com