Enable Javscript for better performance
We will help in development of Jammu and Kashmir, Ladakh: Mukesh Ambani- Dinamani

சுடச்சுட

  

  "நாங்க இருக்கோம்": காஷ்மீர், லடாக் வளர்ச்சிக்கு உதவுவதாக முகேஷ் அம்பானி வாக்குறுதி

  By DIN  |   Published on : 12th August 2019 08:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AP19224219591173


  வரும் காலத்தில் ஜம்மு-காஷ்மீர், லடாக் பிராந்திய வளர்ச்சிக்கென ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் இருந்து பிரத்யேக அறிவிப்புகள் வெளியாகும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 

  ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42-வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று (திங்கள்கிழமை) மும்பையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், வரும் செப்டம்பர் முதல் ஜியோ ஃபைபர் சேவை அறிமுகமாகவுள்ளது என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான முகேஷ் அம்பானி அறிவித்தார். மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் குறித்து பேசிய அவர்,

  "பிரதமரின் கோரிக்கையை ஏற்று, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் அனைத்து வளர்ச்சிக்கும் நாங்கள் உறுதுணையாக இருந்து ஆதரவு தெரிவிப்போம். இதற்கென சிறப்பு செயற் குழு நியமிக்கப்படும். இதன்மூலம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கான அறிவிப்புகள் வரும் மாதங்களில் வெளியாகும்" என்றார்.

  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் தவிர்த்து, பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசுகையில்,

  "ஜியோ மீது நம்பிக்கை வைத்த இந்திய மக்களுக்கு ஜியோ குடும்பத்தார் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய மக்களின் ஆதரவால் இந்தியாவின் மிகப்பெரும் நிறுவனமாக மட்டுமல்லாது உலகின் இரண்டாம் பெரும் நிறுவனமாகவும் ரிலையன்ஸ் வளர்ந்துள்ளது. 

  நுகர்வோர் ரீதியிலான துறையில் ரிலையன்ஸ் நிறுவனம் போதிய சேவையை வழங்க முடியாது என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், அவற்றை முறியடித்துள்ளோம். உலகின் அதிவேக வளர்ச்சியைக் கொண்ட நிறுவனமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் தற்போது 340 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. எனவே 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெறுவதே அடுத்த இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  மற்ற சில்லரைத் தொழில்களை ஒன்றாக இணைத்தாலும் ரிலையன்ஸ் ஜியோவின் வளர்ச்சி பன்மடங்கு பெரியது. அனைத்து இந்தியர்களும் டிஜிட்டல் முறையில் இணையவேண்டும் என்பதே ஜியோவின் கனவு. இந்தியாவில் அதிக ஜிஎஸ்டி வரி செலுத்தும் தனியார் நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் உள்ளது. 

  கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ.67 ஆயிரம் கோடி அதிகப்படியாக வரி செலுத்தியுள்ளோம்.

  தற்போதைய காலகட்டத்தில் நாட்டின் எதிர்காலமும் ரிலையன்ஸின் எதிர்காலமும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. இந்தியா புதிய இந்தியாவாக வளர்ந்து வரும் சூழலில் ரிலையன்ஸும் புதிய ரிலையன்ஸாக உருவாகும். 2022-ம் ஆண்டு 5 ட்ரில்லியன் டாலர்களாக நாட்டின் பொருளாதாரம் உயர வேண்டும் என நமது பிரதமர் மோடி குறிக்கோள் நிர்ணயித்துள்ளார். 

  2030-ல் 10 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா எட்டும் என நான் நம்புகிறேன். சில துறைகளில் பொருளாதார சூழல் வீழ்ச்சியில் இருந்தாலும் அது தற்காலிகமானதே. இந்தியாவின் அடிப்படைகள் மிகவும் பலமானதாகவே உள்ளன.

  எண்ணெய் முதல் ரசாயனம் வரையிலான துறையைப் பொறுத்தவரையில் சவுதி அரம்கோ நிறுவனத்துடன் ரிலையன்ஸ் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துறையில் சவுதி அரம்கோ நிறுவனம் 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 20 சதவீத பங்கை முதலீடு செய்கிறது. 

  மிகவும் குறைந்தபட்ச செலவில் 5ஜி தொழில்நுட்பத்துக்கு முன்னேற்றம் அடைய முடியும். 

  இணையதள வேகம் ஒரு நொடிக்கு 1 ஜி.பி.யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே இதனைப் பயன்படுத்தி தொலைக்காட்சி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் விடியோ கால் பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பத்து கோடி இந்தியர்கள் ஜியோ மூலமாக விடியோ கால் மேற்கொள்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் முறையில் விர்ச்சுவலாக உடைகளை அணிந்து தேர்வு செய்யலாம்.

  புதிதாக வீடுகளுக்கான ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. 

  1,600 நகரங்களில் சுமார் 20 மில்லியன் இல்லங்களிலும் 15 மில்லியன் தொழில் நிறுவனங்களிடமும் ஜியோ ஃபைபர் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜியோ ஃபைபர் தொடக்க சலுகையாக 4கே தொலைக்காட்சி மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும். ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது.

  திரைப்படம் வெளியாகும் அதே சமயம் வீட்டிலிருந்தே ஜியோ ஃபைபர் மூலம் அந்த திரைப்படத்தைக் காண முடியும். 

  இதை ஜியோ முதல் நாள் முதல் காட்சி என்று அழைக்கிறோம். இத்திட்டம் வருகிற 2020-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஆகும். ஜியோ ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10,000 ரூபாய் வரை சந்தா தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  கடந்த நிதியாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தில் வருவாய் 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இது எந்த இந்திய நிறுவனத்தாலும் எட்டமுடியாத இலக்காகும்" என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai