வேலை இழப்பு குறித்து ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன: பார்லே விளக்கம்

பார்லே, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
வேலை இழப்பு குறித்து ஊடகங்கள் தவறாக சித்தரித்துவிட்டன: பார்லே விளக்கம்

பொருளாதார மந்தநிலை காரணமாக நாட்டின் மிகப்பெரிய பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பார்லே, 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்த தகவலை பார்லே நிறுவன மூத்த அதிகாரி மயங்க் ஷா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

ரூ.5 மற்றும் அதற்குக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் பிஸ்கெட் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தினோம். இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவை ஈடுகட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தான் தெரிவித்திருந்தேன். ஆனால், ஊடகங்கள் அதனை தவறாக சித்தரித்துவிட்டன.

உற்பத்தி குறைவு ஏற்பட்டால் அதே ஊழியர்களுடன் நிறுவனத்தை நடத்த இயலாது என்று தான் குறிப்பிட்டிருந்தேன். இதனால் நாங்கள் யாரையும் பணி நீக்கம் செய்யவும் இல்லை. முன்பு பிஸ்கெட்டுக்கு வரி கிடையாது. ஆனால், தற்போது விதிக்கப்பட்டுள்ள 18 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது அதிகமானது. 

அதேபோன்று ரஸ்க் உள்ளிட்ட இதர பொருட்களின் மீதும் 5 சதவீதம் வரி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பிஸ்கெட்களையும் 5 சதவீத வரி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியான வரிமுறையை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

இவ்வாறு மயங்க் ஷா விளக்கமளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com