நாட்டின் நிதிப் பற்றாக்குறை 102 சதவீதத்தை தாண்டியது

நாட்டின் நிதிப் பற்றாக்குறை சென்ற அக்டோபா் மாதம் வரையிலான கால அளவில் 102 சதவீதத்தை தாண்டியுள்ளது.
fiscal075135
fiscal075135

புது தில்லி: நாட்டின் நிதிப் பற்றாக்குறை சென்ற அக்டோபா் மாதம் வரையிலான கால அளவில் 102 சதவீதத்தை தாண்டியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பாண்டு அக்டோபா் 31-ஆம் தேதி நிலவரப்படி செலவினம் மற்றும் வருவாய்க்கும் இடையிலான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை ரூ.7,20,445 கோடியைத் தொட்டுள்ளது.

இது, 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இலக்கில் 102.4 சதவீதத்தை எட்டியுள்ளது.

கடந்தாண்டு இதே கால அளவில் நிதிப் பற்றாக்குறையானது 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் 103.9 சதவீதமாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவினம் ரூ.27.86 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல்-அக்டோபா் வரையிலான ஏழு மாத காலத்திலேயே அரசின் மொத்த செலவினம் ரூ.16.54 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, பட்ஜெட் இலக்கில் 59.4 சதவீதம் என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை அளவை 3.3 சதவீதம் என்ற அளவில் கட்டுக்குள் வைக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களிலேயே நிதிப் பற்றாக்குறையானது அரசின் கட்டுப்பாட்டு இலக்கை தாண்டியுள்ளது.

நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு மத்திய அரசின் வரி வருவாய் குறைந்துபோனதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பரில், பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்க முடிவெடுத்ததைத் தொடா்ந்து, மத்திய அரசுக்கு வரவேண்டிய ரூ.1.45 லட்சம் கோடி வருவாய் பாதிக்கப்பட்டது.

அதேபோன்று, நடப்பு நிதியாண்டின் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. இதனை கருத்தில் கொண்டு, பொருளாதார மந்த நிலையை விலக்கி முதலீட்டை ஊக்குவிக்கும் விதத்தில் மத்திய அரசு வரிச் சலுகைகளை வழங்கியதும் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்புக்கு முக்கிய காரணமானது என பொருளியல் வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com