தொழில்துறையில் மந்தநிலை: வேலையிழப்புக்கு ஆளாகும் தொழிலாளர்கள்

தொழில் துறையில் தொடரும் மந்த நிலையால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடர்ந்து பெரு நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
தொழில்துறையில் மந்தநிலை: வேலையிழப்புக்கு ஆளாகும் தொழிலாளர்கள்

தொழில் துறையில் தொடரும் மந்த நிலையால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைத் தொடர்ந்து பெரு நிறுவனங்களும் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. இதனால் அவற்றில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கோவை மண்டலத்தில் லட்சத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஜவுளித் தொழில், பம்ப்செட், மோட்டார்கள், கிரைண்டர், பவுண்டரி, வால்வு தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய நிறுவனங்களுக்கு உதிரிபாகங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர்களை செய்து கொடுக்கவும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள மொத்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களில் சுமார் 30% வரை ஆட்டோமொபைல் துறையை மட்டுமே நம்பியுள்ளன.

இந்த நிலையில் 2020-ஆம் ஆண்டு முதல் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு உள்பட்டு தயாரிக்கப்படும் வாகனங்கள் மட்டுமே சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பினாலும், வாகனங்களை வாங்குவதற்கான கடன் கொடுப்பது குறைந்தது, வாகன காப்பீடுத் தொகை உயர்வு, வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பு போன்றவற்றாலும் கடந்த ஓராண்டாக மோட்டார் வாகனத் துறை சுணக்கத்தில் இருந்து வருகிறது. அதேபோல பவுண்டரிகள், ஜவுளித் தொழில் இயந்திரங்கள், பம்ப்செட் உள்ளிட்ட பல்வேறு குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கும் ஜாப் ஆர்டர்கள் வெகுவாக குறைந்த நிலையில் ஏராளமான குறுந்தொழில் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன. 

சிறு, நடுத்தர நிறுவனங்களில் பெருமளவிலானவை உற்பத்திக் குறைப்பில் ஈடுபட்டுள்ளன. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ள நிலையில் தற்போது பெரு நிறுவனங்களும் உற்பத்திக் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆலைகளைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரு ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. அதன்படி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அந்நிறுவன ஊழியர்களுக்கு பாதி ஊதியத்துடன் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து மேலும் சில நிறுவனங்களும் வரும் வாரத்தில் இருந்து வாரத்துக்கு 2 நாள் உற்பத்தி நிறுத்தம், கட்டாய விடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முடிவு செய்துள்ளன. அதேபோல ஜவுளி இயந்திரங்கள் தயாரிக்கும் நிறுவனம், வால்வுகள் தயாரிக்கும் நிறுவனங்கள் சிலவும் உற்பத்தி நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளன. 

"ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தாங்கள் கேட்கும்போது உதிரி பாகங்களை தயாரித்துக் கொடுத்தால்போதும் என்று தெரிவித்துவிட்டதால், பொருள்களை உற்பத்தி செய்து இருப்பு வைத்திருக்கத் தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் வருவாய் இழப்பை குறைக்கும் நடவடிக்கையாக வாரம் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறோம். இந்த நிலை சீரடைய மேலும் ஒன்றரை ஆண்டுகளாகும்' என்கிறார் கோவையைச் சேர்ந்த ஆட்டோமொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி.

தொடக்கத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களைத் தாக்கிய நெருக்கடியான நிலை இப்போது பெரிய நிறுவனங்களையும் பெரிய அளவில் பாதிக்கத் தொடங்கியிருப்பது கவலைக்குரிய விஷயம் என்கிறார் கோவை மாவட்ட ஏஐடியூசி பொதுச் செயலர் சி.தங்கவேல். கோவை மாவட்டத்தில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டுமின்றி பஞ்சாலைகளுக்குத் தேவையான உதிரி பாகங்கள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், மோட்டார் பம்ப்செட், வால்வுகள், பவுண்டரிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் போதுமான அளவுக்கு ஆர்டர்கள் இல்லாமல் கடந்த சில மாதங்களாகத் தள்ளாடி வருகின்றன.

இவற்றில் பல தொழிற்சாலைகள் வாரத்தில் 3 அல்லது 4 நாள்களுக்கு மட்டுமே இயங்குகின்றன. தொழிலாளர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் சுமார் ரூ.8 ஆயிரம் வரை குறைவாகவே கிடைத்து வருகிறது. சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

கோவையில் பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த உள்ளூர் தொழிலாளர்கள் தற்போது வேறு வேலைவாய்ப்பை நாடும் நிலை உள்ளது. மேலும், தற்காலிக வேலையிழப்பு (லே-ஆஃப்), ஆள்குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது பெரிய நிறுவனங்கள் எதுவும் சட்ட ரீதியான நடைமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது அரசின் முன் அனுமதி பெற வேண்டும், தற்காலிக, நிரந்தர வேலையிழப்புக்கான நஷ்ட ஈட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்ற சட்ட விதிகள் பின்பற்றப்படுவதில்லை. தற்காலிக வேலையிழப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அதை தொழிலாளர்களின் சொந்த விடுமுறையில் கழித்துக் கொள்வது, சம்பளமில்லா விடுப்பாகக் கருதி சம்பளம் கொடுக்காமல் விடுவது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

தொழில் துறையின் நிலைமை சீரடையும் வரையிலும் அந்த நிறுவனத்தையே நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். வேலையிழப்பு ஏற்படும் நாள்களிலும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கவும், ஆள்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை தொழில் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்படுத்த தடை விதிக்கவும், தொழில் நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதிப் பற்றாக்குறையை சரிப்படுத்தி ஒரு நம்பகமான சூழலை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போர்க்கால அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்குத் தேவையான திறமையான ஆள்கள் பற்றாக்குறை ஏற்படும். அதன்பிறகு உடனடியாக தொழில் துறையின் நிலைமை சீரடைந்தாலும், தொழில் நிறுவனங்கள் பழையபடி இயங்குவதற்கு நாள்களாகும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும் என்கிறார் தங்கவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com