
மத்திய அரசு சமர்ப்பித்த பட்ஜெட் அனைத்து தரப்பினரின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 212 புள்ளிகள் அதிகரித்தது.
பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் சந்தை மிகவும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசு சமர்ப்பித்த 2019-2020 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள் மற்றும் சாமானியர்களை குறி வைத்து ஏராளமான திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்றதையடுத்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்படைந்தது.
மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண் 2.62 சதவீதம் வரை அதிகரித்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஹீரோ மோட்டோகார்ப், மாருதி, ஹெச்சிஎல் டெக், ஏஷியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், ஹெச்யுஎல், பார்த்தி ஏர்டெல், பவர் கிரிட் நிறுவனப் பங்குகளின் விலை 7.48 சதவீதம் வரை உயர்ந்தன.
செலவின அதிகரிப்பால் வேதாந்தா நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு ஒட்டுமொத்த நிகர லாபம் 25.54 சதவீதம் சரிந்து ரூ.1,574 கோடியாக குறைந்ததன் எதிரொலியால் அந்நிறுவனப் பங்கின் விலை அதிகபட்சமாக 17.82 சதவீதம் வரை சரிந்தது.
இதைத் தவிர, யெஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலையும் முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி 4.68 சதவீதம் வரையிலும் சரிவடைந்தன. மும்பை பங்குச் சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 212 புள்ளிகள் அதிகரித்து 36,469 புள்ளிகளில் நிலைத்தது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 10,893 புள்ளிகளில் நிலைத்தது.