உயரப் பறக்கும் திருச்சி விமான நிலையம்!

திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் சர்வதேச பயணிகள் அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்காண்டு வருவாயும் அதிகரித்து வருகிறது. கடந்த 2016-17 நிதியாண்டை ஒப்பிடுகையில்
உயரப் பறக்கும் திருச்சி விமான நிலையம்!

திருச்சி விமான நிலையத்துக்கு வந்து செல்லும் சர்வதேச பயணிகள் அதிகரிப்பு காரணமாக ஆண்டுக்காண்டு வருவாயும் அதிகரித்து வருகிறது. கடந்த 2016-17 நிதியாண்டை ஒப்பிடுகையில், 2017-18 நிதியாண்டில் ரூ. 16.94 கோடி வருவாய் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நிகழாண்டும் ரூ. 40 கோடியாக வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 திருச்சி விமான நிலையம் தொடங்கிய காலத்திலிருந்தே, சர்வதேச விமானங்களை இயக்கும் வகையிலான சுங்கத் துறை விமான நிலையம் என்ற சிறப்பு அந்தஸ்தில் இயங்கி வந்தது. பின்னர் கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் 4 -ம் தேதி சர்வதேச அந்தஸ்து கிடைக்கப்பெற்றது. ஆனால் சர்வதேச அந்தஸ்து இல்லாத நிலையிலும் சர்வதேச விமானங்களை இயக்கி வந்ததால் தமிழகத்தில் 3-ஆவது பெரிய விமான நிலையமாகவும், சர்வதேச பயணிகளை அதிக அளவில் கையாளும் வகையில் சென்னைக்கு அடுத்த இடத்திலும் திருச்சி விமான நிலையம் தொடர்ந்து வருகின்றது.
 சர்வதேச விமான நிலையமாக அந்தஸ்து பெற்ற பின்னர் வெளிநாட்டு விமானங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. வாரத்துக்கு சுமார் 100 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 154 சேவைகள் வாரந்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாட்டு விமான சேவைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2016-17 நிதியாண்டில் சுமார் 11.9 லட்சம் சர்வதேச பயணிகளையும், 1.69 லட்சம் உள்நாட்டு பயணிகளையும் திருச்சி விமான நிலையம் கையாண்டுள்ளது. அந்த வகையில் 16-17 நிதியாண்டின் வருவாய் ரூ. 21.19 கோடியாகும்.
 அதேபோல அடுத்த நிதியாண்டான 2017-18 நிதியாண்டில், திருச்சி விமான நிலையத்தை 13.7 லட்சம் சர்வதேச பயணிகளும், 1.38 லட்சம் உள்நாட்டு பயணிகளும் பயன்படுத்தியுள்ளனர். அந்த வகையில் 17-18 நிதியாண்டின் வருவாய் ரூ. 38.13 கோடியாகும். தற்போது நிகழ் நிதியாண்டில் (2018-19) ரூ. 40 கோடி வருவாய்க்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2019-ஆம் ஆண்டுக்குள்ளேயே இலக்கை அடைந்திருக்க முடியும் எனவும், நிர்ணயித்த இலக்கைவிட அதிகமான வருவாய்க்கு வாய்ப்புள்ளது எனவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 பயணிகள் வருவாய் மட்டுமின்றி, சுங்கத்துறை மூலம் கிடைக்கும் வருவாய், சரக்குகள் கையாள்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் விளம்பரங்கள், பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வகையிலான ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்கள் என பல்வேறு வருவாய்கள் உள்ளன. இதில் குறிப்பாக மாதம் 450 முதல் 500 டன் வரையில் வெளிநாடுகளுக்கு உணவுப்பொருட்கள் ஏற்றுமதி பயணிகள் விமானங்கள் மூலம் அனுப்பப் பட்டு வருகின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 15 டன் சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த வகையிலும் விமான நிலையத்தின் வருவாய் அதிகரித்து வருகிறது.
 மேலும் வருவாய் அதிகரிக்க..
 திருச்சி விமான நிலையத்தின் வருவாய் அதிகரிக்க மிக முக்கிய தடையாக அமைந்திருப்பது விமான நிலைய ஓடுதளம். அதன் நீளம் தற்போது 8,136 அடி நீளமாக உள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு 6000 அடியிலிருந்து நீட்டிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் 12,000 அடியாக நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் நில ஆர்ஜிதத்தில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக ஓடுதளம் நீட்டிக்கப்படவே இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடுதளம் நீட்டிப்பு பணி முடங்கியுள்ளது.
 திருச்சி விமான நிலையத்தில் ஓடுதளம் குறைந்த பட்சம் 10,000 அடி நீட்டிக்கப்படும் நிலையில், திருச்சி விமான நிலையத்துக்கு மேலும் பெரிய அளவிலான போயிங் போன்ற சர்வதேச விமானப் போக்குவரத்துகள் தொடங்கும்.
 பெரிய அளவு விமானங்கள் வரும் நிலையில் பயணிகளின் எண்ணிக்கையும், அதன் மூலம் பல்வேறு வகையில் நேர்முக மற்றும் மறைமுக வருவாயும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சரக்குப் போக்குவரத்துக்கு (கார்கோ) என பிரத்யேக விமானங்கள் வந்து செல்ல இயலும். இதன் மூலம் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் அதிகரிக்கும். தினசரி 15 டன் என்ற அளவு பல மடங்காக அதிகரிக்கும். இதனால் சரக்குப் போக்குவரத்து வருவாயும் அதிகரிக்கும் என்பது உறுதி.
 புதிய முனையக் கட்டடம்: தற்போது ரூ. 950 கோடியில் புதிய முனையக் கட்டடம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி புதிய முனையக் கட்டடம் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இந்த முனையம் 2020-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். இதற்குள் ஓடுதளமும் நீட்டிக்கப்பட்டால், தமிழகம் மட்டுமின்றி இந்திய விமான நிலையங்கள் வரிசையில் மிக முக்கிய இடத்தை திருச்சி விமான நிலையம் பெறும் என்பதில் ஐயமில்லை.
 திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சென்ற உள்நாட்டு விமானங்களான ஜெட் ஏர்வேஸ் தனது சேவைகளை கடந்த ஆண்டு ரத்து செய்துவிட்டது. தினசரி 3 சேவைகள் இதில் ரத்தாகிவிட்டன. இதனால் உள்ளநாட்டு பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் சற்று குறைந்துள்ளது. ஆனால் அதனை ஈடு செய்யும் வகையில் இண்டிகோ விமானம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சேவைகளையும் புதிதாகத் தொடங்கியுள்ளது. இதனால் வருவாய் மேலும் குறையாமல் ஈடு செய்யப்பட்டுள்ளது.
 - ஆர்.எஸ். கார்த்திகேயன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com