சுடச்சுட

  
  nlc


  நிகழ் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் என்எல்சி இந்தியா நிறுவனம் நிகர லாபமாக ரூ.329.49 கோடியை ஈட்டியுள்ளது. 
  இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் உற்பத்தி, நிதிநிலை செயல்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டன.
  அதுகுறித்த விவரம் வருமாறு: 
  என்எல்சி இந்தியா நிறுவனம் நிகழ் நிதியாண்டின் (2018-19) மூன்றாவது காலாண்டில் 60. 97 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்துள்ளது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 63.05 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டது. இந்த ஆண்டு மின்சார தேவைக்கேற்பவும், பழுப்பு நிலக்கரியை வாங்கும் நிறுவனங்களின் தேவைக்கேற்பவும் உற்பத்தியானது கட்டுப்படுத்தப்பட்டதன் மூலம் கடந்த ஆண்டைவிட உற்பத்தி சற்று குறைந்துள்ளது.
  மின் விற்பனை அதிகரிப்பு: கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் 499 கோடியே 23 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின்சாரம் விற்பனை செய்த நிலையில், நிகழ் நிதியாண்டில் 543 கோடியே 7 லட்சத்து 80 ஆயிரம் யூனிட் மின்சாரம் விற்பனை செய்துள்ளது. 
  இது முந்தைய ஆண்டைவிட 9 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
  நிகர லாபம் உயர்வு: கடந்தாண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.329. 49 கோடியை நிகர லாபமாகப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் பெற்ற ரூ.313. 80 கோடியைக் காட்டிலும் இது 5 சதவீதம் அதிகம். அதேபோல, முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.1,807.50 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், நிகழ் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 2,070. 29 கோடியாக அதிகரித்துள்ளது. 
  மின் உற்பத்தியை குறைக்கும் நிலை: மின் வாரியங்களுக்கு ஒதுக்கீடு செய்த மின்சாரத்தை அவை முழுமையாகப் பயன்படுத்தாததன் மூலம், என்எல்சி நிறுவனம் கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தான் உற்பத்தி செய்ய வேண்டிய அளவில் 33 கோடியே 66 லட்சம் யூனிட் மின்சாரத்தை குறைத்து உற்பத்தி செய்தது. ஆனால், நிகழ் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒதுக்கீடு செய்த அளவை விட 24 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் யூனிட் மட்டுமே மின் வாரியங்கள் குறைவாக பயன்படுத்தியிருந்ததால் விற்பனையில் உயர்வு ஏற்பட்டது.
  புதிய மின் நிலையம்: நெய்வேலியில் அமைக்கப்பட்டு வரும் 2ஷ்500 மெகாவாட் புதிய அனல் மின் நிலையத்தின் ஒரு மின் உற்பத்திப் பிரிவில், 28.12.2018 அன்று சோதனை முறையில் நீராவி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
  இந்தியாவில், பழுப்பு நிலக்கரியில் செயல்படவிருக்கும் 500 மெகாவாட் திறன் கொண்ட முதல் மின் உற்பத்திப் பிரிவு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai