தன்னிறைவு பெறாத எண்ணெய் வித்து உற்பத்தி

இந்தியாவில் எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரித்து, அதன் மூலம் கிடைக்கும் தாவர எண்ணெயை பொது விநியோகத் திட்டத்தில் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னிறைவு பெறாத எண்ணெய் வித்து உற்பத்தி

இந்தியாவில் எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரித்து, அதன் மூலம் கிடைக்கும் தாவர எண்ணெயை பொது விநியோகத் திட்டத்தில் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

 உலக அளவில் இந்தியா எண்ணெய் வித்து உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், நிலக்கடலை உற்பத்தியில் முதலிடமும் வகிக்கிறது. இந்தியாவில் எண்ணெய் வித்துப் பயிர்களில் நிலக்கடலை 40 சதவீதப் பரப்பளவில் பயிரிடப்பட்டு, முதலிடத்தில் இருக்கிறது.

 தமிழகத்தில் முக்கிய எண்ணெய் வித்துப் பயிராக நிலக்கடலை உள்ளது. மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நிலக்கடலையைப் பொருத்தவரையில் தமிழகத்தில் மகசூல் குறைவாக உள்ளது.

 கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரிய முறையில் விளைவிக்கப்படும் நிலக்கடலையில் இருந்து கடலை எண்ணெய், எள்ளில் இருந்து நல்லெண்ணெய், தேங்காயில் இருந்து தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகமாக இருந்தது. குறிப்பாக, தென் மாநிலங்களில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் தாவர எண்ணெய் பயன்பாடு அதிகமாக இருந்தது. வட மாநிலங்களில் கடுகு சாகுபடி மூலம் கடுகு எண்ணெய் பயன்பாடு அதிகளவில் இருந்தது.

 இந்த நிலையில், 1990-களுக்குப் பிறகு உலகமயமாக்கல் கொள்கையின்படி எண்ணெய் பயன்பாடு முறையில் மாற்றம் வந்தது. இதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் இறக்குமதி அதிகரித்தது.

 ஒரு கட்டத்தில் தாவர எண்ணெய் உற்பத்தி 80 சதவீதமாக இருந்தது. இதனால் இறக்குமதி அளவு 20 சதவீதமாக இருந்தது.

 மேலும், உள்நாட்டுத் தயாரிப்பான தாவர எண்ணெயைவிட, வெளிநாட்டு எண்ணெய் விலை குறைவாக இருந்த காரணத்தினாலும், கச்சா ரிஃபைண்ட் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதன் தொடர்ச்சியாக எண்ணெய் வித்து சாகுபடியும் குறைந்துவிட்டது.

 இதனால் 80 சதவீதமாக இருந்த எண்ணெய் உற்பத்தி, 60 சதவீதமாகக் குறைந்தது. இதனால், இந்தியா ஒவ்வோர் ஆண்டும் 40 சதவீத எண்ணெயை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
 2018 புள்ளிவிவரப்படி இந்தியாவில் ஆண்டுதோறும் 1.55 கோடி டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 மலேசியா தனது ஏற்றுமதி வரியை ரத்து செய்ததன் விளைவாக இந்தியாவின் மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா பெரும்பாலும் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிடமிருந்து பாமாயிலை இறக்குமதி செய்கிறது. அதேபோல, சோயாபீன் எண்ணெயை தென் அமெரிக்க நாடுகளிலிருந்தும், உக்ரைன் மற்றும் ரஷியாவிலிருந்து சூரியகாந்தி எண்ணெயையும் இறக்குமதி செய்கிறது.

எனவே, இந்தியாவில் எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரித்து, சமையல் பயன்பாட்டுக்கு தாவர எண்ணெயை பொது விநியோகத் திட்டத்தில் விநியோகம் செய்யும்போது விவசாயிகளுக்கு விலையும், எண்ணெய் வித்து சாகுபடியில் தன்னிறைவு பெறவும் முடியும் என்கிறார் சேலம் மாநகர தாவர எண்ணெய் வணிகர் சங்கத் தலைவர் சந்திரதாசன்.

 இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
 இந்தியா அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகளை இறக்குமதி செய்த நிலை மாறிவிட்டது. மேலும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு வகை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிட்டது.

 அதேநேரத்தில், எண்ணெய் வித்து உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறவில்லை. மாறாக, 40 சதவீத அளவுக்கு சமையல் எண்ணெய் இறக்குமதி செய்கிறது.

 பருவ மழை பெய்யாதது, போதிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணெய் வித்து பயிரிடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

 எந்த எண்ணெயாக இருந்தாலும், தரமானதாக வாங்கி நுகர்வோர் பயன்படுத்த வேண்டும். குறைவான விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என தரம் குறைந்த எண்ணெயை வாங்கிப் பயன்படுத்த வேண்டாம்.

 தற்போது தமிழகத்தில் கடலை சாகுபடி பரப்பு குறைந்துவிட்டது. இதனால் தாவர எண்ணெய்க்குத் தேவையான எண்ணெய் வித்துகளை கர்நாடகம், ஆந்திரம், கொல்கத்தா, குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்கி எண்ணெய் உற்பத்தி செய்துவருகிறோம்.

 தற்போது 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தாவர எண்ணெய் அதாவது பாரம்பரிய எண்ணெய் வித்துகளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணெய் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் தாவர எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது எனலாம்.

 வெளி மாநிலங்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அதிகம் வசிக்கும் வெளிநாடுகளில் தாவர எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இளைய தலைமுறையினரிடையே தாவர எண்ணெய் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரித்து, பொது விநியோகத் திட்டத்தில் தாவர எண்ணெய் வழங்கினால் விவசாயிகளின் வருமானம் பெருகும். மேலும், எண்ணெய் வித்து சாகுபடியில் தன்னிறைவு பெறலாம். இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
 - ஆர். ஆதித்தன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com