வெளியேறுகிறதா வால்மார்ட் ?

ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்திய கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்து மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் பல கட்டுரைகளை எழுதின
வெளியேறுகிறதா வால்மார்ட் ?

ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்திய கட்டுப்பாடுகளை கடுமையாக விமர்சித்து மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள் பல கட்டுரைகளை எழுதின. இந்தியாவைச் சேர்ந்த மேற்கத்திய ஆதரவாளர்கள் பலர் தங்கள் "பிளாகு'களில் மத்திய அரசின் முடிவை விமர்சித்திருந்தனர். இப்போதைய பாஜக அரசு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயத்துக்காகவே அந்நிய நேரடி முதலீட்டின் கீழ் ஆன்லைன் வர்த்தகத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது என்று குற்றம்சாட்டினர். அமேசானும், ஃபிளிப்கார்ட்டும் திட்டமிட்டு குறிவைத்து தாக்கப்படுகின்றன என்றும் அமெரிக்க பத்திரிகைகள் விமர்சித்தன.
 ஆனால், உள்நாட்டில் இந்த விமர்சனங்கள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, உள்நாட்டு ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மத்திய அரசின் முடிவை வரவேற்கவே செய்தன. ஆன்லைன் வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் மக்களை நேரடியாக பாதிக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், நவீன ஸ்மார்ட்ஃபோன் உள்ளிட்ட மின்னணுப் பொருள்கள் விற்பனையே ஆன்லைனில் அதிகம். அவை பெரும்பாலான மக்களின் வாழ்க்கையில் சில முறை மட்டுமே வாங்கப்படும் பொருள்களாகவே இந்தியாவில் இப்போதும் உள்ளது.
 எனினும், இந்திய அரசின் முடிவுக்கு வெளிநாடுகளில் ஏன் இந்த அளவுக்கு எதிர்ப்பு எழுகிறது என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் எதிர்ப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை.
 ஆன்லைன் விற்பனையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்த அதே நாளில், அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக்கில் அமேசான் நிறுவனத்தின் பங்கின் விலை 5.38 சதவீதம் சரிவைச் சந்தித்தது. அன்று ஒருநாளில் மட்டும் அமேசான் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 45.22 பில்லியன் டாலர் சரிந்தது. நியூயார்க் பங்குச் சந்தையில் வால்மார்ட் நிறுவனத்தின் பங்கின் விலை 2.06 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 57 பில்லியன் டாலர் குறைந்தது.
 அப்படி என்றால் அந்த நிறுவனங்கள் இந்தியச் சந்தையை எந்த அளவுக்கு சார்ந்து இருக்கின்றன என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடியும். கடந்த 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், நமது நாட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மொத்த சில்லறை வர்த்தகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தின் பங்கு வெறும் 2.9 சதவீதம் மட்டுமே.
 மேலும் அமேசானும், ஃபிளிப்கார்ட்டும் இதுவரை இந்தியாவில் இதுவரை பெரிய அளவில் லாபத்தை ஈட்டிவிடவில்லை. கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவில் அமேசான் நிறுவனம் ரூ.6,300 கோடி, ஃபிளிப்கார்ட் ரூ.3,200 கோடி நஷ்டத்தையே சந்தித்துள்ளன. அதே நேரத்தில், அந்த இரு நிறுவனங்களின் சந்தையும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுதோறும் அந்த இரு பெரும் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் பொருள்களின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 கடந்த மே மாதம் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கையகப்படுத்தியது. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் வால்மார்ட்டின் பங்கு இப்போது 77 சதவீதமாகும். இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு இரு பெரும் அமெரிக்க நிறுவனங்களான அமேசானும், வால்மார்ட்டும் இந்தியச் சந்தையை யார் கையில் எடுப்பது என்பதில் கடும் போட்டியில் ஈடுபட்டன. இதனால் உள்நாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் இந்த சூறாவளியில் சிக்கித் தவித்தன. அமேசானும், ஃபிளிப்கார்ட்டும் முறையற்ற வர்த்தகப் போட்டியை உருவாக்குவதாக எழுந்த புகார்களையடுத்து, மத்திய அரசு ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது.
 முக்கியமாக, தாங்கள் பங்கு வைத்துள்ள நிறுவனத்தின் மூலம் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது; ஒரு பொருள் தங்களிடம் மட்டுமே கிடைக்கும் வகையில் உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடாது; அளவுக்கு அதிகமான தள்ளுபடி, கேஷ்பேக் சலுகைகளை அளிக்கக் கூடாது என்பது மத்திய அரசின் கட்டுப்பாடுகளில் முக்கியமானவை.
 இந்தக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த கூடுதலாக 6 மாதம் கால அவகாசம் வேண்டும் என்ற அமேசான், ஃபிளிப்கார்ட்டின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனால், உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக சந்தையான இந்தியாவில் தங்களை முழுமையாக நிலை நிறுத்தி, தங்களுக்குப் போட்டி நிறுவனங்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தும் முயற்சிக்கு தற்காலிக முட்டுக்கட்டை ஏற்பட்டது.
 இந்த சூழ்நிலையில்தான் ஃபிளிப்கார்ட்டில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேற வால்மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்காவின் மிகப்பெரிய நிதிச்சேவை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டதால் வால்மார்ட் வெளியேற்றம் என்பது கூடுதல் கவன ஈர்ப்பைப் பெற்றது.
 இந்திய மக்களுக்கு குறைந்த விலைக்குப் பொருள்களைக் கொடுக்க வேண்டும் என்பதோ, இந்தியாவில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதோ அமேசான், வால்மார்ட் நிறுவனங்களின் இந்திய வருகைக்கு காரணமல்ல. முந்தைய ஆங்கிலேயர் ஆட்சி முதல் இப்போதைய பன்னாட்டு நிறுவனங்கள் வரை இந்தியா எப்போதுமே மிகப்பெரிய சந்தையாகவே பார்க்கப்படுகிறது. அதுவே அவர்களின் இந்திய ஆர்வத்துக்குக் காரணம். அதேபோல ஆன்லைன் வர்த்தகத்தில் தொடக்கத்தில் சில ஆயிரம் கோடிகள் நஷ்டத்தைச் சந்தித்தாலும், நீண்ட காலத்தில் இந்தியச் சந்தையில் தங்களைவிட்டால் ஆள் இல்லை என்ற நிலை ஏற்படும்போது லாபம் பார்த்துவிட முடியும் என்பதுதான் அந்த இரு பெரு பன்னாட்டு நிறுவனங்களின் அறிவிக்கப்படாத திட்டம். மத்திய அரசு இப்போது அமல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளால் எதிர்காலத்திலும் தங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியாது என்ற காரணத்தினாலேயே பாதியில் விலக வால்மார்ட் பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. எனினும், இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இதற்கு நடுவே இந்தியா வர திட்டமிட்டிருந்த அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ராஸ் மூலம் இந்த விஷயத்தை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வால்மார்ட், ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அமெரிக்க அமைச்சரின் வருகை ரத்தானதால் அந்த முயற்சியும் நின்றுபோனது. இதுவரை அதிரடி ஆஃபர்களை அறிவித்து இந்திய இளைஞர்கள் கூட்டத்தை திக்குமுக்காட வைத்த அமேசானும், ஃபிளிப்கார்ட்டும் இப்போது சற்று திணறித்தான் போயியுள்ளன.
 - சு. வெங்கடேஸ்வரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com