பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறை: கடும் நெருக்கடியில் பின்னலாடை தொழில்

திருப்பூரில்  பவர் டேபிள் (ஓவர் லாக், பேட் லாக்) டெய்லர்கள் பற்றாக்குறையால் பின்னலாடைத் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 
பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறை: கடும் நெருக்கடியில் பின்னலாடை தொழில்

திருப்பூரில்  பவர் டேபிள் (ஓவர் லாக், பேட் லாக்) டெய்லர்கள் பற்றாக்குறையால் பின்னலாடைத் தொழில் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

திருப்பூர் பின்னலாடைத் தொழிலைச் சார்ந்து பெரியதும், சிறியதுமாக சுமார் 5 ஆயிரம் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனைச் சார்ந்து நிட்டிங், டையிங், பிரிண்டிங் என சுமார் 2 ஆயிரம் நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் ஈடுபட்டு வருகின்றனர்.

8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே இந்தப் பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் தான். ஆனால், தற்போது பல்வேறு பிரச்னைகள் காரணமாக இந்தத் தொழில்கள் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளன. இதில், மிக முக்கியமான பிரச்னை பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறையாகும். 

பவர் டேபிள் டெய்லர்கள் தட்டுப்பாடு பின்னலாடைத் தொழிலில் நிட்டிங், டையிங், பிரிண்டிங், காம்பேக்டிங், எம்பிராய்டிங், ஸ்டிச்சிங், செக்கிங், அயனிங், பேக்கிங் ஆகிய பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் நிறைவடைந்தால் மட்டுமே பின்னலாடையை உற்பத்தி செய்ய முடியும். இதில், மற்ற துறைகள் அனைத்தையும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கற்றுக் கொள்ளமுடியும். மேலும், வடமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை வைத்துக் கூட  சமாளிக்கலாம்.

ஆனால்,  பின்னலாடை  உற்பத்தியில் முக்கிய அங்கமான பவர் டேபிளில் ஓவர் லாக், பேட்லாக் டெய்லர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது உற்பத்தியாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் மற்றப் பிரிவுகளைப் போல் அல்லாமல் பவர் டேபிள் டெய்லராக வரவேண்டும் என்றால் குறைந்தது நான்கு முதல் 5 ஆண்டுகள் வரையில் கைமடியாக இருந்தால் மட்டுமே  கற்றுக் கொள்ள முடியும். உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தால் 3 முதல் 4 ஆண்டுகள் கழித்துதான் பவர் டேபிள் டெய்லராக உருவாக முடியும். 

ஆனால், குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு முறைக்குப் பின்னர் மாநில அரசும் அப்போதைய தொழில் துறை நிர்வாகிகளும் டெய்லர்களை உருவாக்க பயிற்சிக் கூடங்களை உருவாக்காததால் தற்போது பின்னலாடைத் தொழில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது என்று உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது:

தமிழகத்தில் சிறிய கிராமமாக இருந்த திருப்பூர் தற்போது பெரிய மாவட்டமாக உயர்ந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் பின்னலாடைத் தொழில்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக 20 சதவீத சிறிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறைதான். போதிய அளவு ஊதியம் வழங்கினாலும் தொழிலாளர்கள் குறைவாக உள்ளதால் பெரும்பாலான நிறுவனங்களில் 100 தையல் மெஷின்கள் இருந்தாலும் சுமார் 50 முதல் 60 பணியாளர்கள்தான் வேலை செய்கின்றனர். இதனால், உற்பத்தி இலக்கை எட்ட முடியாததுடன், நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன. அதே வேளையில் பெரிய நிறுவனங்கள் பெயரளவுக்கு கிடைக்கும் தொழிலாளர்களை வைத்து குறைந்த அளவு ஆடைகளை உற்பத்தி செய்கின்றனர். 

1 லட்சம் தொழிலாளர்கள் பற்றாக்குறை 

முந்தைய கால கட்டத்தில் திருப்பூரில் ஆள்கள் தேவை என்ற விளம்பரப் பதாகைகளை ஒவ்வொரு தெருக்கவில் பார்க்க முடியும். ஆனால், தற்போது நிறுவனங்கள் வாடகைக்கு விடப்படும் என்ற விளம்பரப் பதாகைகள்தான் அதிகமாக உள்ளன. அப்போதைய மாநில அரசும், தொழில் துறை நிர்வாகிகளும் சரியான திட்டமிடாததுதான் இந்த நிலைக்கு காரணம். ஏனெனில் அரசு சார்பில் பின்னலாடைத் தொழிலாளர்களை உருவாக்க பயிற்சிக் கூடம் அமைத்திருக்க வேண்டும்.

இதனிடையே, தற்போது ஒரு சில பெரிய நிறுவனங்கள் வெளி மாவட்டங்களில் புதிய தொழிலாளர்களை தேர்வு செய்து அங்கேயே பயிற்சி அளித்து தங்களது நிறுவனங்களில் பணியில் சேர்த்துக் கொள்கின்றனர். மேலும், தற்போது ஸ்டிச்சிங் குறித்து நிஃப்ட்-டீ கல்லூரியிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆனால், போதிய அளவு டெய்லர்களை உருவாக்க வேண்டும் என்றால் அதற்குக் கால அவகாசம் தேவைப்படும். வரும் 2020 ஆம் ஆண்டில்  ஒரு லட்சம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 1 லட்சம் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. இதில், ஏறக்குறைய 30 சதவீதம் அளவுக்கு பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறை உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர முடிவு

இதனிடையே, திருப்பூரில் செயல்பட்டு வரும் ஒரு சில பெரிய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தங்களது கிளைகளைத் தொடங்கியுள்ளன. ஏனெனில் அங்கு தொழில் தொடங்க அரசு சார்பில் மின்சார மானியம், வங்கிக் கடனுதவி போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதே போல், அண்டை மாநிலங்களான ஆந்திரம், கேரளம், கர்நாடகம், ஒடிஸா போன்ற மாநில அரசுகள் கூட அங்கு தொழில்களைத் தொடங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. மேலும், பல்வேறு சலுகைகள் வழங்குவதாகவும் அறிவித்துள்ளன. ஆகவே, மத்திய, மாநில அரசுகள் பின்னலாடைத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்த தொழில் துறையினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைத்து நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பின்னலாடை நிறுவனங்களை வேறு மாநிலங்களுக்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

 தையல் பயிற்சி கூடங்கள்தான் தீர்வு 

திருப்பூரில் நிலவி வரும் பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என்றால் அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும் என்கிறார்  தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கத்தின் (சிஸ்மா) பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி. 

பின்னலாடைத் தொழிலில் பவர் டேபிள் டெய்லர்கள் பற்றாக்குறை நிலவி வருவது உண்மைதான். ஏனெனில் பெரிய நிறுவனங்களில் டெய்லர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. சிறிய ஜாப் ஒர்க் நிறுவனங்களில் உரிமையாளர்களே டெய்லர்களாக இருப்பார்கள். அப்போது, ஆள் பற்றாக்குறை வரும்போது அவர்களே பணியில் ஈடுபடுவார்கள்.

மேலும், முன்புபோல கைமடிக்கும் உதவியாளர்களுக்கு பவர் டேபிள் நுணுக்கங்களை டெய்லர்கள் கற்றுக் கொடுப்பது இல்லை. வடமாநிலத் தொழிலாளர்களை வேறு வேலைக்குப் பயன்படுத்தினாலும் டெய்லரிங் தொழில் கற்றுக் கொள்வதும் குறைவாகவே உள்ளது.

ஆகவே, டெய்லர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் அரசு அங்கீகாரம் பெற்ற தையல் பயிற்சிக் கூடங்கள் அமைக்க வேண்டும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் தொடர் பயிற்சி அளித்து பவர் டேபிள் டெய்லர்களை உருவாக்கலாம். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com