டிசம்பர் மாத வாகன விற்பனை மந்தம்

டிசம்பர் மாத வாகன விற்பனை மந்தம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா டிசம்பர் மாதத்தில் 13,139 கார்களை விற்பனை செய்துள்ளது.

மாருதி சுஸுகி
 கார் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் டிசம்பர் மாத விற்பனை 1.3 சதவீதம் சரிவடைந்து 1,28,338- வாகனங்களாக இருந்தது. 2017 டிசம்பரில் கார் விற்பனை 1,30,066-ஆக காணப்பட்டது.
 ஆல்டோ, வேகன்ஆர் ஆகியவற்றை உள்ளடக்கிய குறைந்த விலை கார்களின் விற்பனை 14 சதவீதம் வீழ்ச்சியடைந்து 32,146 என்ற எண்ணிக்கையிலிருந்து 27,661-ஆக குறைந்தது. ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ, டிசையர் விற்பனையும் 3.8 சதவீதம் குறைந்து 51,334-ஆக காணப்பட்டது.
 மாருதி சுஸுகி நிறுவன கார்கள் ஏற்றுமதியும் 36.4 சதவீதம் வீழ்ச்சியடைந்து 10,780-லிருந்து 6,859-ஆனது.
 டாடா மோட்டார்ஸ்
 இந்நிறுவனத்தின் வாகன விற்பனையும் டிசம்பர் மாதத்தில் 8 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. 2017 டிசம்பரில் 54,627 வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் கடந்த டிசம்பரில் டாடா மோட்டார்ஸ் விற்பனை 50,440-ஆக குறைந்து போனது.
 வர்த்தக வாகன விற்பனை 11 சதவீதம் சரிவடைந்து 36,180-ஆக காணப்பட்டது. மொத்த ஏற்றுமதி 6,293 என்ற எண்ணிக்கையிலிருந்து 36 சதவீதம் சரிந்து 3,999-ஆக இருந்தது.
 மஹிந்திரா
 மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் 1 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளது. 2017 டிசம்பரில் 39,200 வாகனங்களை விற்பனை செய்திருந்த மஹிந்திரா 2018 டிசம்பரில் 39,755 வாகனங்களை விற்றுள்ளது. பயணிகள் வாகன விற்பனையைப் பொருத்தவரையில் மஹிந்திரா 3 சதவீத சரிவை சந்தித்துள்ளது. வர்த்தக வாகனங்கள் விற்பனை 17,542 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 சதவீதம் குறைந்து 16,906-ஆக காணப்பட்டது. ஆனால், மஹிந்திரா வாகன ஏற்றுமதி 38 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,221-லிருந்து 3,065-ஆக ஆனது.
 ஹுண்டாய்
 ஹுண்டாய் மோட்டார் இந்தியா டிசம்பரில் 42,093 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2017 டிசம்பரில் விற்பனையான 40,158 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 4.6 சதவீதம் அதிகமாகும்.
 2017-இல் விற்பனை 6,78,221-ஆக மட்டுமே இருந்த நிலையில், 2018-இல் 7,10,012 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது முன்னெப்போதும் இல்லாத அதிகபட்ச அளவு. ஏற்றுமதி 1,50,901-லிருந்து 6 சதவீதம் அதிகரித்து 1,60,010-ஆனது.
 ராயல் என்ஃபீல்டு
 ராயல் என்ஃபீல்டு டிசம்பர் மாத பைக் விற்பனை 13 சதவீதம் குறைந்து 58,278-ஆகியுள்ளது. கடந்த 2017 டிசம்பரில் பைக் விற்பனை 66,968-ஆக அதிகரித்து காணப்பட்டது. இந்நிறுவனத்தின் சர்வதேச விற்பனை டிசம்பரில் 41 சதவீதம் அதிகரித்து 2,252-ஆக இருந்தது.
 ஹோண்டா
 ஹோண்டா கார்ஸ் இந்தியா டிசம்பர் மாதத்தில் 13,139 கார்களை விற்பனை செய்துள்ளது. 2017 டிசம்பரில் விற்பனையான 12,642 எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் அதிகம். நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் ஹோண்டா கார் விற்பனை 3.7 சதவீதம் அதிகரித்து 1,34,797-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com