சுடச்சுட

  

  புதிய வகை ஏடிஎம் கார்டு...அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை

  By DIN  |   Published on : 14th January 2019 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  COM

  இந்தியாவில் சிப் பொருத்தப்பட்ட புதிய வகை ஏடிஎம் கார்டுகள் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. முந்தைய கார்டுகளைப் போல அல்லாமல் அதனை பயன்படுத்துவதிலும் வங்கிகள் புதிய முறையை புகுத்தியுள்ளன. அதனை அறியாமல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டுகளை இழக்கவும் நேரிடலாம் என வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
   ஏடிஎம் கார்டுகளில் அதிக மோசடிகள் நடைபெற்றதையடுத்து, அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது. இதுதொடர்பாக மத்திய அரசும், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏடிஎம் கார்டுகளை மேம்படுத்துவமாறு வங்கிகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையிலேயே தற்போது வங்கிகள் சிப் பொருத்தப்பட்ட புதிய ஏடிஎம் கார்டுகளை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளன.
   வங்கிகளும், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு புதிய கார்டுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், பெரும்பாலானோருக்கு இன்னும் புதிய கார்டுகள் கிடைக்காத நிலையே உள்ளது. ஏனெனில், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கொடுத்த முகவரிக்கும் தற்போதைய முகவரிக்கும் உள்ள வேறுபாடே இதற்கு முக்கிய காரணமாகும். முகவரியை புதுப்பிக்காத வாடிக்கையாளர்களுக்கு அவரது பழைய இருப்பிடத்துக்கே கார்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால், அவை விநியோகம் செய்யமுடியாமல் அனுப்பிய இடத்துக்கே திரும்பிவிடுகின்றன. இன்னும் ஒரு சில வாடிக்கையாளர்கள் சரியான முகவரியிருந்தும் விநியோகிக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருப்பதால் கார்டுகள் திருப்பி அனுப்பப்பட்டுவிடுகின்றன.
   இதுபோன்றவற்றால், வாடிக்கையாளர்கள் புதிய வகை ஏடிஎம் கார்டுகளை பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனைப் போக்க, வங்கிகள் சிப் பொருத்தப்பட்ட ஏடிஎம் கார்டுகளை நேரடியாக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளிலேயே வழங்க வேண்டும் என்பது பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
   ஒரு வழியாக புதிய ஏடிஎம் கார்டை பெற்றுவிட்ட வாடிக்கையாளர்கள் அதனை கவனமுடன் பயன்படுத்த வேண்டியது அத்தியாவசியமாகியுள்ளது.
   முன்பெல்லாம், வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை ஒரு முறை இயந்திரத்தின் உள்ளே செலுத்தி வெளியே எடுத்துவிட்டு தங்களது பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். ஆனால், தற்போது சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை இயந்திரத்தின் உள்ளே செலுத்திவிட்டால் பணப்பரிவர்த்தனை முடியும் வரை அதனை வெளியே எடுக்க முடியாது. அதற்கு ஏற்றவாறு வங்கிகள் தங்களது ஏடிஎம் இயந்திரங்களை மேம்படுத்தி வருகின்றன.
   குறிப்பாக, வயதானவர்கள் இதுபோன்ற புதிய விஷயங்களை கவனத்தில் வைத்து செயல்படவேண்டும். பணப்பரிவர்த்தனை முடியும் முன்பாகவே அவர்கள் கார்டுகளை பெற முயன்று வலுக்கட்டாயமாக அதனை இழுக்கும் பட்சத்தில் அவை சேதமடைய நேரிடலாம். அதிலும், ஏடிஎம் கார்டுகளின் சிப் பொருத்தப்பட்ட பகுதி சேதமடைய அதிக வாய்ப்புகள் உண்டு. இதனால், அவர்கள் பணம் செலவழித்து புதிய கார்டுகளை பெற வேண்டிய நிலையே ஏற்படும். எனவே இந்த விஷயத்தில் அவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
   ஒரு சில ஏடிஎம் இயந்திரங்களில் சிவப்பு எல்இடி விளக்கு எரிவதை வைத்து பணப்பரிவர்த்தனை நடைபெற்றுக் கொண்டு இருப்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். பச்சை நிற எல்இடி விளக்குகள் எரிந்தால் பரிவர்த்தனை முடிவுற்றதை குறிக்கும். அப்போது நாம் ஏடிஎம் கார்டை திரும்ப எடுத்துக் கொள்ளலாம்.
   எப்படி இருந்தாலும் அனைத்து வாடிக்கையாளர்களும் புதிய முறைக்கு மாறுவது சற்று கடினமாகத்தான் இருக்கும். அதுவரையில், வங்கிகள் செய்திகள் மூலமாகவும், தொலைக்காட்சி மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் இயந்திரத்தில் புதிய கார்டுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தொடர்ந்து நினைவூட்டல்களை வழங்க வேண்டும்.
   -அ.ராஜன் பழனிக்குமார்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai