சரியுமா ஸ்மார்ட் போன்களின் சாம்ராஜ்யம்?

எப்படி ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சாதனங்கள் இப்போது எதிர்காலம் இழந்து நிற்கின்றனவோ, அதேபோல ஸ்மார்ட் போன்களும் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
சரியுமா ஸ்மார்ட் போன்களின் சாம்ராஜ்யம்?

எப்படி ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சாதனங்கள் இப்போது எதிர்காலம் இழந்து நிற்கின்றனவோ, அதேபோல ஸ்மார்ட் போன்களும் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
 பன்னிரண்டுஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐ-போனை அறிமுகப்படுத்தியபோது, அது உலக மக்களின் வாழ்க்கையையே இந்த அளவுக்கு அடியோடு புரட்டிப் போடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
 அந்த ஐ-போனும், அதற்கு போட்டியாக உருவாக்கப்பட்ட மற்ற பிற ஸ்மார்ட் போன்களும் மாபெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளன.
 ஸ்மார்ட் போன் அறிமுகத்துக்குப் பிறகு மக்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் முறையில் தடாலடி மாற்றம் ஏற்பட்டுவிட்டது.
 விரும்பிய உணவை வாங்கி ருசிப்பது, தேவையான இடங்களுக்குச் செல்ல வாடகைக் கார் அமர்த்துவது, மளிகை சாமான்கள் முதல் மருந்துகள் வரை தேவையான பொருள்களை வாங்குவது, பணம் செலுத்துவது-பெறுவது, பாடல்கள் மற்றும் திரைப்படங்களை ரசிப்பது என வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஸ்மார்ட் போன்கள் ஆக்கிரமித்துவிட்டன.
 டேப் ரெக்கார்டர்களை ஒழித்துக் கட்டிய எம்.பி-3 பிளேயர்களை, ஸ்மார்ட் ஃபோன்கள் வந்து காணாமல் போகச் செய்துவிட்டன.
 ஒரு காலத்தில் விசேஷங்களின்போது டிஜிடல் கேமராக்களை பெருமையாக எடுத்துச் சென்றவர்கள், இப்போதெல்லாம் அவற்றை ஒளித்து வைக்க வேண்டிய நிலைக்கு ஸ்மார்ட் ஃபோன்கள் படு அசத்தலாக படமெடுக்கின்றன.
 புதிய இடத்துக்குச் செல்வதற்கு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்து அவர்களால் அலைகழிக்கப்படுவதைவிட, ஸ்மார்ட் போனை நம்பினால் அவர்கள் கைவிடப்படார் என்று சொல்லுமளவுக்கு அவை மிகச் சிறந்த வழிகாட்டிகளாக உள்ளன.
 இணையவழி நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவது, நகைக் கடன்களைத் திருப்பி செலுத்துவது எல்லாம் ஸ்மார்ட் போன் மூலமே செய்துவிட முடிகிறது. மின் கட்டணம், ஆயுள் காப்பீட்டு சந்தா போன்றவற்றை செலுத்துவதற்காக மணிக் கணக்கில் காத்திருந்த காலம் போய், அந்த வேலைகளை நொடிக் கணக்கில் முடித்துத் தருகின்றன ஸ்மார்ட் போன்கள்.
 நேரில் சந்திக்க முடியாதவர்கள், மிகத் தொலைவில் பணியாற்றுபவர்களையெல்லாம் முகம் பார்த்து பேசுவதை மிக எளிமையாக்கியிருக்கிறது ஸ்மார்ட் போன். முன்பெல்லாம் அதற்காக இணையதள மையங்களைத் தேடிச் சென்று, ஏராளமாக செலவு செய்தவர்கள் இப்போதெல்லாம் சகாய விலையில் வாங்கிய ஸ்மார்ட் போனை வைத்தே இந்தக் காரியத்தை சாதித்து விடுகிறார்கள்.
 சமூக வலைதளங்களின் பயன்பாடு பல ஆண்டுகளாகவே அதிகரித்து வந்தாலும், ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகுதான் அவை சாமானியர்களையும் சென்றடைந்தது.
 குறுந்தகவல் அனுப்புவதற்காக கட்டணம் செலுத்தி நொந்தவர்கள், இப்போதெல்லாம் நினைத்த நேரத்தில் எத்தனை தகவல்களை வேண்டுமானாலும் எந்த வித கட்டணமும் இன்றி அனுப்ப முடிகிறது.
 இப்படி மக்களது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஸ்மார்ட் போன்கள் மாறியதால், தங்களது இருப்பையும், ஏகபோகத்தையும் பறிகொடுத்த சாதனங்கள் ஏராளம்.
 டிஜிடல் கேமராக்கள், எம்.பி.3 பிளேயர்கள் மட்டுமன்றி, இதுவரை தனிக்காட்டு ராஜ்யம் நடத்திக் கொண்டிருந்த "பட்டன்' வைத்த செல்போன்களின் நிலையும் பரிதாபமானதாக ஆகிவிட்டது.
 மின்னஞ்சல்களை அனுப்பிப் பெறுவது, வலைதளங்களை வலம் வருவது, இணையவழி பணப் பரிமாற்றங்கள், சமூக ஊடகங்களில் சஞ்சரிப்பது, மின்-பத்திரிகைகளைப் படிப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கும் கணினிகள் மற்றும் மடிகணினிகளைப் பயன்படுத்தி வந்தவர்களில் ஏராளமானோர், இப்போது அந்தத் தேவைகளுக்காக ஸ்மார்ட் போனுக்குத் தாவி விட்டனர்.
 இதனால், கணினிகள் - மடிகணினிகளின் முக்கியத்துவமும் மங்கி வருகிறது.
 மேலும், கால்குலேட்டர்கள், கேம் கன்சோல்கள் ஆகியவற்றுக்கான தேவையும் காலாவதியாகி வருகிறது. இப்போதெல்லாம் இரவு நேரத்தில் வீட்டிலோ, அலுவலகத்திலோ மின்சாரம் போனால் இருட்டில் யாரும் டார்ச் லைட்டைத் தேடுவதில்லை. அவர்களது கையிலுள்ள ஸ்மார்ட் போன்களே டார்ச் லைட்களாக அவதாரம் எடுத்து விடுகின்றன.
 இப்படி, பல்வேறு சாதனங்களை இருக்குமிடம் தெரியாமல் செய்துவிட்ட ஸ்மார்ட் போன்களின் சாம்ராஜ்யமே, விரைவில் சரியத் தொடங்கலாம் என்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.
 எப்படி ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த சாதனங்கள் இப்போது எதிர்காலம் இழந்து நிற்கின்றனவோ, அதேபோல ஸ்மார்ட் போன்களும் தங்கள் முக்கியத்துவத்தை இழக்கலாம் என்கிறார்கள் அவர்கள்.
 கடந்த 2015-ஆம் ஆண்டுவாக்கில் ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி இரண்டு இலக்க விகிதத்தில் ஏறுமுகத்தைச் சந்தித்து வந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் நிபுணர்கள். உலகின் மிகப் பெரிய ஏற்றுமதி நாடான சீனாவிலேயே, ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி 16 சதவீதம் சரிந்துள்ளதை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
 இதற்கு, ஸ்மார்ட் போன்களின் சாதுரியத்தை தற்போது வேறு சாதனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தனதாக்கி வருவதுதான் காரணம் என்கிறார்கள் அவர்கள்.
 அதுவும் உண்மைதான்!
 டிவி-க்களிலும் "ஸ்மார்ட் டிவி'க்கள் வந்து விட்டன. பிக்சர் டியூப் டிவி-க்களை விரட்டிவிட்டு சந்தையை அலங்கரித்து வரும் எல்ஈடி டிவிக்களுக்கு, இந்த ஸ்மார்ட் டிவி-க்கள்தான் தற்போது சவால் விடுகின்றன.
 இதுவரை இருந்த டிவி-க்கள் போலன்றி, இந்த ஸ்மார்ட் டிவிக்களுடன் நம்மால் பேச முடியும்.
 அதுபோல், கையில் அணிந்து கொள்ளும் சாதாரண கடிகாரங்களும் இப்போது "ஸ்மார்ட்' ஆகி விட்டன.
 ஸ்மார்ட் போன்களில் செய்யும் பல்வேறு காரியங்களை இந்த ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் செய்து விட முடியும்.
 மேலும், கையில் அணிந்து கொள்வதால் கிடைக்கிற சவுகரியம் மட்டுமன்றி கூடுதலான பல அனுகூலங்களும் ஸ்மார்ட் வாட்சுகளுக்கு இருப்பதால், அவை வாடிக்கையாளர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றன.
 அது போதாதென்று, குரலைக் கேட்டே செயல்படும் "ஸ்மார்ட்' ஸ்பீக்கர்கள், நம் சொன்னதை சொன்னபடி செய்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டன.
 இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களால், ஸ்மார்ட் போன்களின் மவுசு கொஞ்சம் கொஞ்சமாக மங்குவதற்கு நிச்சயம் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
 ஆப்பிள் போன்ற முன்னணி நிறுவனங்களும், ஸ்மார்ட் வாட்ச் போன்ற பிற சாதனங்களில் கவனத்தை அதிகரித்திருப்பது, ஸ்மார்ட் போன்களின் எதிர்காலம் குறித்த அவர்களது கவலையைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
 உண்மையில், இந்தியாவைப் பொருத்தவரை ஸ்மார்ட் போன்கள் சாம்ராஜ்யம் சரிந்துவிடும் என்று இப்போதைக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாதுதான்.
 ஆனால், ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்துவிட்டு, தற்போது கவனிப்பாரற்றுக் கிடக்கும் மற்ற சாதனங்களைப் பார்க்கும்போது, நிபுணர்கள் கூறுவதிலும் ஏதோ உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது.
 - நாகா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com