சாதனை நிறுவனம் டிசிஎஸ்!

சந்தை மூலதனத்தில் ஐபிஎம் நிறுவனத்தை விஞ்சிய நம்நாட்டைச் சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் உலகளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் மூன்றாவது
சாதனை நிறுவனம் டிசிஎஸ்!

சந்தை மூலதனத்தில் ஐபிஎம் நிறுவனத்தை விஞ்சிய நம்நாட்டைச் சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் உலகளவில் தகவல் தொழில்நுட்ப துறையில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
ஐபிஎம் மற்றும் டிசிஎஸ் ஒரு காலத்தில் பங்குதாரராக இருந்த நிறுவனங்கள். டிசிஎஸ் நிறுவனத்தை கூட வாங்க ஐபிஎம் ஒரு முறை முயற்சி மேற்கொண்டது. ஆனால், அது முடியாமல் போய்விட்டது என்பது வரலாறு. 
ஐபிஎம் நிறுவனம் முதன் முதலில் கடந்த 1950-களில் இந்திய சந்தைகளில் நுழைந்தது. வெளிநாட்டு துணை நிறுவனங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு விரும்பியதையடுத்து, அந்நிறுவனம் 1970 காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து வெளியேற முடிவெடுத்தது.
ஐபிஎம் நிறுவனம் டாடா நிறுவனத்துடன் ஒன்றாக இணைந்து டாடா இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் என்ற கூட்டுத் திட்டத்தின் மூலம் மீண்டும் 1992-இல் இந்திய சந்தைக்குள் நுழைந்தது.
இந்திய மென்பொருள் துறையின் தந்தை என்றழைக்கப்படும் எஃப்.சி. கோலி டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகித்தவர். அப்போது அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, டிசிஎஸ் நிறுவனத்தை வாங்க ஐபிஎம் விருப்பம் தெரிவித்தது. இருப்பினும், அந்த திட்டம் அப்போது டாடா சன்ஸ் தலைவராக இருந்த ஜே.ஆர்.டி. டாடாவால் நிராகரிக்கப்பட்டது.
ஆனால், அதன் பிறகு, கூட்டு திட்டத்திலிருந்து விலகிய டிசிஎஸ் நிறுவனம் தன்னிச்சையாக இயங்கத் தொடங்கியது. தகவல் தொழில்நுட்பத் துறையில் பல சவால்களை எதிர்கொண்ட அந்நிறுவனம் தற்போது சர்வதேச அளவில் தனது கிளைகளை பரப்பி ஆல விருட்சமாக வேரூன்றியுள்ளது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 2,100 கோடி டாலர் வருவாயையும், 450 கோடி டாலர் நிகர லாபத்தையும் ஈட்டி சாதனை படைத்துள்ளது. 
அதுமட்டுமின்றி, அண்மையில் நியூயார்க் பங்குச் சந்தையில் சந்தை மூலதனத்தில் தகவல் தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாக திகழும் ஐபிஎம் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளியது டிசிஎஸ். ஐபிஎம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு கட்டத்தில் 11,960 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.32 லட்சம் கோடி) இருந்த போது, டிசிஎஸ் சந்தை மதிப்பு 12,050 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.37 லட்சம் கோடி) அதிகரித்தது. சந்தை மதிப்பில் அமெரிக்க நிறுவனமான ஐபிஎம்-மை, இந்திய நிறுவனமான டிசிஎஸ் பின்னுக்குத் தள்ளியது சர்வதேச முதலீட்டாளர்களால் வியப்புடன் பார்க்கப்பட்டது.
அதேபோன்று, உள்நாட்டிலும் சந்தை மதிப்பில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீûஸ விஞ்சி டிசிஎஸ் சாதனை படைத்தது. மும்பை பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ.8,36,024.08-ஆக இருந்த நிலையில், டிசிஎஸ் சந்தை மதிப்பு 8,37,194.55 கோடியானது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீûஸ காட்டிலும், டிசிஎஸ் சந்தை மதிப்பு ரூ.1,170.47 கோடி அதிகமானது.
அதிக சந்தை மதிப்பை கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த டிசிஎஸ் நிறுவனத்தை கடந்த மாதம்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் விஞ்சியது. இந்த நிலையில், தனது செயல்பாடுகளால் மீண்டும் முதலிடத்தை நோக்கி நகர்ந்துள்ளது அந்நிறுவனம்.
கடந்த 2018-19-ஆம் ஆண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பானது 23 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. அதன் காரணமாகவே, அந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் 12,000 கோடி டாலரை தாண்டியுள்ளது.
இந்த நிலையில், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு வர்த்தக பிரிவுகள் மூலமாக கிடைக்கும் வருவாய் நடப்பாண்டில் சரிந்து போனதையடுத்து ஐபிஎம் நிறுவனத்தின்எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் இது, டிசிஎஸ் நிறுவனத்தின் மேலும் பிரகாசமான வளர்ச்சிக்கு சாதகமான அம்சமே என்பது முதலீட்டாளர்களின் கருத்து.


* கடந்த 1968-ஆம் ஆண்டில் டிசிஎஸ் நிறுவனம், எஃப்.சி. கோலியால் நிறுவப்பட்டது. இவர்தான் இந்திய மென்பொருள் துறையின் தந்தை என போற்றப்படுகிறார். 
* டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டிசிஎஸுக்கு 45 நாடுகளில் 149 இடங்களில் கிளைகள் உள்ளன.
* பணியாளர்கள் எண்ணிக்கை 4,24,285
* வருவாய் 2,090 கோடி டாலர் (ரூ.1.46 லட்சம் கோடி)
* மாத்த சொத்து மதிப்பு 1,690 கோடி டாலர்
* பார்ச்சூன் இந்தியா 500 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸுக்கு 10-ஆவது இடம்
* 2019-இல் சந்தை மதிப்பு 10,000 கோடி டாலரை தாண்டிய முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற சாதனை படைத்துள்ளது டிசிஎஸ் .

-அ.ராஜன் பழனிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com