இந்தியாவில் மின் வாகனங்கள் வாய்ப்புகளும் சவால்களும்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கையில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை
இந்தியாவில் மின் வாகனங்கள் வாய்ப்புகளும் சவால்களும்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நிகழாண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள், மின்சார வாகனங்கள் தொடர்பான கொள்கையில் மத்திய அரசு உறுதியாக இருப்பதை உணர்த்துகிறது. வாகன உற்பத்தியாளர்களுக்கு மட்டுமன்றி நுகர்வோருக்கும் பலன் தரும் வகையில் சலுகைகளை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி, மின் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மின் வாகனங்களை வாங்குவதற்காகப் பெறும் கடனுக்கான வட்டியை காண்பித்து ரூ.1.50 லட்சம் வரை வருமான வரி சலுகை பெற முடியும்.
மின் வாகனங்கள் ஏன் அவசியம்? 
வாகனச் சந்தையில் இந்தியா உலகில் 4ஆவது பெரிய சந்தையாகத் திகழ்கிறது. 2018-19இல் மட்டும் இந்தியாவில் 40 லட்சம் புதிய கார்கள், சரக்கு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2 கோடியே 10 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆகியுள்ளன. நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனப் போக்குவரத்து காரணமாக பெட்ரோல், டீசலின் நுகர்வும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. வளர்ந்துவரும் நாடான இந்தியாவில் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒருபுறம் இருக்க, மோட்டார் வாகனங்களால் உருவாகும் சுற்றுச்சூழல் பாதிப்பும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத மின் வாகனங்களின் தேவை மிகவும் அவசியம்தான். ஆனால், அதை செயல்படுத்துவதற்கான கட்டமைப்புகள் தயாராக உள்ளனவா என்பதுதான் கேள்வி.
நீதி ஆயோக் பரிந்துரை
மத்திய அரசின் கொள்கை வகுக்கும் குழுவான நீதி ஆயோக், மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என அழுத்தமாகச் சொல்லியுள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டிலிருந்து பேட்டரியில் இயங்கும் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட வேண்டும் என்கிற அதன் பரிந்துரை பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பேட்டரியில்தான் இயங்கும் என்ற நிலை ஏற்பட்டால், கச்சா எண்ணெய் இறக்குமதி வகையில் ரூ.1.2 லட்சம் கோடி சேமிக்கப்படும் எனவும் நீதி ஆயோக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது டாடா, மஹிந்திரா ஆகிய இரு நிறுவனங்கள் மட்டும்தான் மின் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. பிற வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின் வாகன தயாரிப்பில் ஆரம்ப நிலையில்தான் உள்ளன. ஆதலால், நீதி ஆயோக்கின் காலக்கெடு மிகவும் குறுகியது என்பது பல வாகன உற்பத்தி நிறுவனங்களின் கருத்து.
தொடரும் தயக்கம்
மின் வாகனங்களின் விலையும் வாடிக்கையாளர்களை அச்சுறுத்துகிறது. மஹிந்திராவின் இ-வெரிட்டோ மின் காரின் விலை ரூ.11.28 லட்சம். இதே காரின் பெட்ரோல் ரகத்தின் விலையைவிட இது ரூ.3.50 லட்சம் அதிகம். அரசின் வரிச்சலுகையான ரூ.1.50 லட்சத்தை கழித்தாலும் ரூ.2 லட்சம் அதிகம்தான். இச்சூழ்நிலையில் ஜி.எஸ்.டி. சலுகையானது எந்த அளவுக்கு விலையைக் குறைக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும், மின் வாகனங்களின் செயல்பாடு பெட்ரோல், டீசல் கார்களைப் போல திறன்மிகுந்ததாக இருக்குமா, தொடர்ச்சியாக நீண்ட தொலைவுக்கு வாகனத்தை இயக்க முடியுமா என வாடிக்கையாளர்களுக்கு பல தயக்கங்கள் உள்ளன.
உள்கட்டமைப்பு மேம்பாடு
மின் வாகனங்களின் மிக முக்கியமான தேவையான சார்ஜ் ஏற்றும் மையங்கள் இந்தியாவில் மொத்தமே நூறுக்கும் குறைவான இடங்களிலேயே உள்ளன. இதை அதிகரிப்பதில்தான் மின் வாகனப் பயன்பாட்டின் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்தியாவில் 60 ஆயிரம் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவை அனைத்திலும் மின் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வசதி செய்யப்பட வேண்டும் என அரசு விரும்புகிறது. ஆனால், இதுகுறித்த தெளிவான திட்டமிடல் இல்லை.
மின் வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் மையத்தை தனியார் நிறுவனங்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளன. ஆனால், இதற்கு அரசின் மானியம் உள்பட எந்தவித சலுகையும் இல்லாததால் புதியவர்கள் இத்துறையில் ஈடுபட ஆர்வமின்றி இருக்கின்றனர்.
இதேபோல மின் வாகனங்களுக்கு முக்கியத் தேவையான லித்தியம் அயன் பேட்டரிகள் பெரும்பாலும் இறக்குமதியே செய்யப்படுகின்றன. ஆதலால், பேட்டரி தயாரிப்பதற்கும் அரசு சலுகைகளை தரவேண்டியது அவசியம் என வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மின் வாகனங்கள் காலத்தின் கட்டாயம்தான். ஆனால், அவை வெற்றி பெறுவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்வதில் இந்தியா பயணிக்க வேண்டிய தொலைவு மிக நீண்டது. சார்ஜ் ஏற்றும் மையங்கள், பேட்டரி தயாரிப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களுக்கு தீர்வு காண்பதில் முனைப்புக் காட்டினால் இந்தியச் சாலைகளிலும் விரைவில் பசுமை வாகனங்கள் ஏராளம் ஓடும்.
சீனா ஆதிக்கம்
மின் வாகன சந்தையில் சீனாதான் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. சீனாவின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் மின் வாகனங்களைத் தயாரிக்கிறது. யோட்டா, நிசான், வால்வோ உள்ளிட்ட கார் நிறுவனங்களும் சீனாவில் மின் வாகனத் தயாரிப்பில் தீவிரம்காட்டி வருகின்றன.
விற்பனைக்கு வரும் இ-கார்கள்...
இந்தியாவில் டாடா, மஹிந்திரா நிறுவனங்களின் மின்சார கார்கள் ஏற்கெனவே விற்பனைக்கு வந்துள்ள நிலையில், மேலும் சில நிறுவனங்கள் தங்கள் மின் கார்களை விரைவில் அறிமுகப்படுத்தும் முயற்சியில் உள்ளன.
ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார காரான "கோனா' இந்த மாதமே அறிமுகமாகவுள்ளது. ஆடி நிறுவனத்தின் இ-டிரான், எம்ஜி நிறுவனத்தின் இ-25 ஆகியவை நிகழாண்டு கடைசியில் விற்பனைக்கு வரவுள்ளன. டாடாவின் அல்ட்ரோ2-இவி இன்னும் 2 ஆண்டுகளிலும், மாருதி சுசுகியின் வேகன் ஆர்-இவி அடுத்த ஆண்டும் அறிமுகமாகின்றன.
அமைகிறது முதல் மின் வாகன வழித்தடம்
இந்தியாவின் முதல் மின் வாகன வழித்தடமானது தில்லி-ஜெய்ப்பூர், தில்லி-ஆக்ரா இடையே அமையவுள்ளது. 500 கி.மீ. தொலைவிலான இந்த வழித்தடத்தில் மின் வாகனங்களுக்கான 18 சார்ஜ் ஏற்றும் மையங்கள் அமைக்கப்படும். சுங்கச் சாவடியையொட்டி அமையவுள்ள இந்த மையங்களில் வாகனங்கள் சார்ஜ் ஏற்றிக் கொள்ளவும், பேட்டரியை மாற்றிக் கொள்ளவும் வசதி செய்யப்படும்.
மத்திய அரசு-தனியார் இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஒரு மின்சார சார்ஜ் ஏற்றும் மையம் அமைக்க ரூ.2 கோடி செலவாகும். எஸ்.யு.வி. எனப்படும் சொகுசு ரக மின் வாகனங்கள் முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள 1.25 மணி நேரம் ஆகும். இதன்மூலம் 180 கி.மீ. வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மின் வாகன வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நிகழாண்டு செப்டம்பரில் நடைபெறும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com