சுடச்சுட

  
  bear_copy

  கடந்த ஜூலை 5-ஆம் தேதி காலை 11 மணிக்காக மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் மிக்க ஆவலுடன் காத்திருந்தனர்.
   அன்றைய தினம் நரேந்திர மோடி 2.0 ஆட்சியின் முதலாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருந்ததே இதற்குக் காரணம். அதற்கு, முந்தைய தினங்களில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வந்தன.

   பட்ஜெட் தாக்கலானதும், அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்ட போது, அதன் தாக்கம் சந்தையில் எதிரொலிக்க ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் வேகமாக மேலே சென்ற சென்செக்ஸ், அதன் பிறகு காலையில் ஏற்ற கண்ட புள்ளிகள் அனைத்தையும் இழந்து, வர்த்தக நேர முடிவில் இழப்புடன் நிலைபெற்றது. இந்த பட்ஜெட், முதலீட்டாளர்களின் உணர்வுகளை புதுப்பிக்கத் தவறியதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

   இதனால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அதாவது பட்ஜெட் தாக்கலான ஜூலை 5-ஆம் தேதியிலிருந்து, கடந்த வார இறுதி வர்த்தக தினமான ஜூலை 12 வரையிலான காலத்தில் மட்டும் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் சுமார் 2 சதவீதம் வரையிலும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு மொத்தம் ரூ.3.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

   மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூல தன மதிப்பு ஜூலை 5-இல் ரூ.151.35 கோடியாக இருந்தது. ஆனால், தொடர் சரிவுக்குப் பிறகு ஜூலை 12-இல் மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.148.08 கோடியாகக் குறைந்தது. இதன்படி முதலீட்டாளர்களுக்கு 5 வர்த்தக நாள்களில் மட்டும் மொத்த இழப்பு ரூ.3.27 கோடியாகும்.

   நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிதியமைச்சரால் முன்மொழியப்பட்ட பட்ஜெட்டில், இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தெரிவிக்கப்பட்டிருந்தன. ஆனால், பட்ஜெட்டில் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க எந்தவொரு குறுகிய கால நடவடிக்கை இல்லாததும், பெரும் செல்வந்தர்கள் மீது அதிக வரிகள் இல்லாததும் பங்குச் சந்தைக்கு பக்க பலமாக இருந்து வரும் அன்னிய முதலீட்டாளர்கள், அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்கள் ஆகியோரின் உள்ளார்ந்த உணர்வுகளை பாதித்துவிட்டதாகவே கருதப்படுகிறது.

   பட்ஜெட் தாக்கல் தினம் வரை மதிப்பீட்டளவில் அதிக உச்சத்தில் செயல்பட்டு வந்த பங்குச் சந்தைக்கு மத்திய "பட்ஜெட்' ஒரு கடிவாளம் போல தடுப்பு அரணாக அமைந்துவிட்டது. இதனால், முதல்தரப் பங்குகளின் (லார்ஜ் கேப்) விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதேபோல நடுத்தரப் பங்குகள் (மிட்கேப்ஸ் ), சிறிய நிறுவனப் பங்குகள் ( ஸ்மால் கேப்) விலையும் பலத்த அடி வாங்கியது.

   இந்த வகையில், முதல் தரப் பங்குகளான டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், நெஸ்ட்லே இந்தியா, மாருது சுஸுகி, எல் அண்ட் டி, டைட்டான் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல், விப்ரúô, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்டவை பலத்த அடி வாங்கியுள்ளன.
   தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி பட்ஜெட்டுக்கு முந்தைய (ஜூலை 4) வர்த்தக நேர முடிவில் 11,946.75 புள்ளிகளில் நிலைபெற்றிருந்தது. பட்ஜெட் தினத்தன்று வர்த்தக நேர முடிவில் மொத்தம் 135.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 11,811.15 புள்ளிகளில் நிலைபெற்றது. அது முதல் தொடர்ந்து சரிவைச் சந்தித்து கடந்த வார முடிவில் (ஜுலை 12) 11,552.50 புள்ளிகளில் நிலைபெற்றது. அதாவது 6 வர்த்தக தினங்களில் மொத்தம் 394.25புள்ளிகள் வீழ்ச்சி கண்டுள்ளது.
   இதேபோல மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் பட்ஜெட்டுக்கு முந்தைய (ஜூலை 4) வர்த்தக நேர முடிவில் 39,908.06 புள்ளிகளில் நிலைபெற்றிருந்தது. பட்ஜெட் தினத்தன்று வர்த்தக நேர முடிவில் 394.67 வீழ்ச்சி கண்டு 39,513.39 புள்ளிகளில் நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களிலும் சரிவைச் சந்தித்து கடந்த வார இறுதியில் (ஜூலை 12) 38,736.23 புள்ளிகளில் நிலைபெற்றது. அதாவது ஜூலை 5-லிருந்து இதுவரை மொத்தம் 1,171.83 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், மும்பை பங்குச் சந்தை கடந்த வாரத்தில் ஒரே நாளில் 700 புள்ளிகளுக்கு மேலே சரிந்து முதலீட்டாளர்களுக்கு தூங்காத இரவுகளை அளித்துச் சென்றது. இந்த ஒரே நாள் சரிவு, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

   பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு இதுவரை சென்செக்ஸ் 1.97 சதவீதம், நிஃப்டி 2.10 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன. அதே போல, சிறிய நிறுவனப் பங்குகறளை உள்ளடக்கிய பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 2.58 சதவீதம், மிட்கேப் குறியீடு 1.17 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
   இது குறித்து பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் கூறுகையில், "சந்தை வீழ்ச்சிக்கு பட்ஜெட் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. மதிப்பீட்டளவில் நிஃப்டி, சென்செக்ஸ் உயர்ந்த நிலையில் உள்ளதும் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்' என்கின்றன. சந்தை அதிக மதிப்பீட்டில் உச்சத்தில் இருக்கும் போது, தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், குறுகிய கால வளர்ச்சிக்கு நடவடிக்கை இல்லாததால், அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தத்தான் செய்யும் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்.
   கடந்த ஜூலை 5 முதல் 12 வரையிலான காலத்தில் பிஎஸ்இ 500 பட்டியலில் மொத்தம் 370 நிறுவனப் பங்குகள் எதிர்மறை விளைவை சந்தித்துள்ளன. இதில் 18 நிறுவனப் பங்குகள் சுமார் 10 - 20 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. இதில் ஜெட்ஏர்வேஸ், சத்பவ் என்ஜினீயரிங், மைண்ட் ட்ரீ, ஆர்இசி, திலிப் பில்ட்கான், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், இந்தியா புல்ஸ் வெஞ்சூர்ஸ், ஹெஇஜி, டைட்டான் கம்பெனி உள்ளிட்டவை அடங்கும்.

   இந்த வாரம் எப்படி?
   கடந்த வாரம் பட்ஜெட்டுக்கு பின்னர், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், இந்த வாரம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் பங்கு முதலீட்டாளர்கள், பங்கு வர்த்தகர்கள், பங்குத் தரகு நிறுவனத்தினர் உள்ளனர் இந்த வாரத்தில் வெளியாகும் சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள், நுண் பொருளாதார நடவடிக்கைகள், பருவமழையின் தாக்கம் ஆகியவை சந்தையின் போக்கைத் தீர்மானிக்கும் காரணிகளாக உள்ளன என்கின்றனர் வல்லுநர்கள். நிஃப்டி-50 குறியீட்டைப் பொருத்தமட்டில் 11,400-11,450 என்பது மிக முக்கிய ஆதரவு நிலையாக உள்ளது.

   இந்நிலையில், கடந்த வார முடிவில் வெளியான பணவீக்கம் தொடர்பான தகவல்கள், மே மாதத்துக்கான நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரத் தகவல்கள் ஆகியவை திங்கள்கிழமை சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில்லரை முறையிலான பணவீக்கம் கடந்த ஜூனில் 3.18 சதவீதமாக உயர்ந்து கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவை எட்டியுள்ளது. அதேபோல, ஏப்ரலில் 3.4 சதவீதமாக இருந்த நாட்டின் தொழில் துறை உற்பத்தி, மே மாதத்தில் 3.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவை இரண்டுமே சந்தைக்கு எதிர்மறையான செயலாக்கத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

   மேலும், ஜூலை 15-இல் ஜூன் மாதத்துக்கான மொத்தவிலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் குறித்த தகவல் வெளியாகவுள்ளது. மேலும், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் சுமார் 70 சதவீத நிறுவனங்கள் ஜூன் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. இவற்றில் மைண்ட் ட்ரீ, விப்ரோ, ஏசிசி, கோல்கேட் பால்மோலிவ், டாபர் இந்தியா, ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் அடங்கும்.

  அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.1,850 கோடிக்குப் பங்கு விற்பனை
   அந்நிய முதலீட்டாளர்கள் பட்ஜெட் தினத்தன்று (ஜூலை 5) மொத்தம் ரூ.555.96 கோடி அளவுக்கும், ஜூலை 8 அன்று ரூ.599.59 கோடி அளவுக்கும் பங்குகளை வாங்கியுள்ளனர். ஆனால், பட்ஜெட் அளித்த ஏமாற்றம் காரணமாக அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனர். அதாவது ஜூலை 9-லிருந்து ஜூலை 12 வரையிலான காலத்தில் மொத்தம் சுமார் ரூ.1,850 கோடி அளவுக்கு பங்குகளை அவர்கள் விற்றுள்ளனர். இதுவும் சரிவுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
   
   
    
   -மல்லி எம்.சடகோபன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai