2-ஆவது நாளாக பங்குச் சந்தைகளில் விறுவிறுப்பு
By DIN | Published on : 17th July 2019 12:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர்ந்து 2-ஆவது நாளாக விறுவிறுப்புடன் காணப்பட்டது.
நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகளில் உற்சாகமற்ற நிலை காணப்பட்ட போதிலும், பணவீக்கம் குறைந்துள்ளதையடுத்து முதலீட்டாளர்களின் கவனம் வட்டி குறைப்பை நோக்கி திரும்பியுள்ளது. அத்துடன், பணப்புழக்கம் மேம்பட்டுள்ளது, பெரிய அளவிலான சில வாராக் கடன்கள் தீர்வை நோக்கி செல்வதற்கான சாதகமான அம்சங்கள் தென்படுவது உள்ளிட்டவை சந்தையில் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வங்கி துறை பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள யெஸ் வங்கி பங்கின் விலை 11.48 சதவீதம் உயர்ந்தது.
ஜேஎல்ஆர் பிராண்ட், பிரிட்டன் அரசிடமிருந்து கடன் உத்தரவாதத்தைப் பெற்றுள்ளதாக வந்த தகவலை அடுத்து டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 5.53 சதவீதம் அதிகரித்தது. இவை தவிர, சன் பார்மா, என்டிபிசி, பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஆக்ஸிஸ் வங்கி, எல் & டி, ஹெச்யுஎல், ஏஷியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,எஸ்பிஐ பங்குகளின் விலை 5.53 சதவீதம் வரை ஏற்றம் கண்டது.
அதேசமயம், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், கோட்டக் வங்கி, டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளின் விலை 1.86 சதவீதம் வரை சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 329 புள்ளிகள் வரை அதிகரித்திருந்த நிலையில், இறுதியில் 234 புள்ளிகள் உயர்ந்து 39,131 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 74 புள்ளிகள் அதிகரித்து 11,662 புள்ளிகளாக நிலைபெற்றது.