பங்குச் சந்தையில் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 553 புள்ளிகள் அதிகரிப்பு

சாதகமான உள்நாட்டு நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பங்குச் சந்தையில் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 553 புள்ளிகள் அதிகரிப்பு


சாதகமான உள்நாட்டு நிலவரங்களால் இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
ஏற்கெனவே கடனுக்கான வட்டி விகிதங்களை இருமுறை குறைத்துள்ள ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில் வட்டி விகிதங்களை மேலும் 0.25 சதவீதம் குறைக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளர்கள் மத்தியில் பரவலாக காணப்பட்டது. அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு தொடர்ந்து சீர்திருத்த திட்டங்களை செயல்படுத்தும் என்ற நம்பிக்கையும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்தது.
இதுபோன்ற காரணங்களால், பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. 
மும்பை பங்குச் சந்தையில், மோட்டார் வாகனம், மருந்து, எரிசக்தி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் உலோகத் துறை பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு அதிகரித்து காணப்பட்டதால் அத்துறைகளின் குறியீட்டெண்கள் 1.93 சதவீதம் வரை உயர்ந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, டிசிஎஸ் பங்குகளுக்கு சந்தையில் அதிக வரவேற்பு காணப்பட்டது. ஹீரோ மோட்டோகார்ப் பங்கின் விலை அதிகபட்ச அளவாக 6.01 சதவீதம் வரை ஏற்றம் பெற்றது. பஜாஜ் ஆட்டோ, இன்டஸ்இண்ட் வங்கி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஹெச்யுஎல், மாருதி சுஸுகி பங்குகளின் விலை 3.92 சதவீதம் வரை உயர்ந்தது. 
அதேசமயம், ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, ஐடிசி பங்குகள் குறைந்த விலைக்கே கைமாறின.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 553 புள்ளிகள் அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 40,267 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்  நிஃப்டி 166 புள்ளிகள் ஏற்றம் கண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் 12,088 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com