மத்திய பட்ஜெட் - சிறு தொழிலகங்களின் எதிர்பார்ப்பு

இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உற்பத்தித் தொழில் என்றால், அந்த உற்பத்தித் தொழிலின் முதுகெலும்பு சிறுதொழில்கள்தான்.
மத்திய பட்ஜெட் - சிறு தொழிலகங்களின் எதிர்பார்ப்பு


இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு உற்பத்தித் தொழில் என்றால், அந்த உற்பத்தித் தொழிலின் முதுகெலும்பு சிறுதொழில்கள்தான். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறுதொழில்கள் 8% அளவுக்குப் பங்காற்றிவருகின்றன. இத்துறை 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் 6 லட்சம் சிறுதொழிலகங்களில் 75 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். 

2020-ஆம் ஆண்டுக்குள் ஜிடிபியில் சிறுதொழில்களின் பங்களிப்பு 8 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகவும், இத்தொழில்கள் வழியான வேலைவாய்ப்பு 10 கோடியாக உயரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

 எனினும் அதற்கான பாதை சுலபமானதல்ல. சிறுதொழில்களுக்கு அடிப்படை ஆதாரமாக விளங்கும் கடனுதவியை பெறுவதில் பெரும் நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன. கச்சா பொருள் தட்டுப்பாடு, குறைவான சந்தைப்படுத்தல் வாய்ப்புகள், நடைமுறை மூலதனம் பற்றாக்குறை, ஏற்றுமதி செய்வதில் நடைமுறை தடைகள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இடைஞ்சல்கள், பல்லடுக்கு தொழிலாளர் சட்டங்களால் தொந்தரவு, சுற்றுச்சூழல் விதிமுறைகளை பின்பற்ற இயலாமல் தவிப்பு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து தாமதமாக வந்துசேரும் பணம், உரிய நேரத்தில் கிடைக்காத மானியம் உள்ளிட்ட பிரச்னைகளை இந்தத் துறை சந்தித்து வருகிறது.

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் கூடுதல் பலத்துடன் அரசு மீண்டும் அமைந்துள்ளதால், சிறுதொழிலகங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் புதிய அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த பட்ஜெட்டில் புலிப் பாய்ச்சலுக்குத் தேவையான திட்டங்களை அறிவிப்பார் என்று சிறுதொழில்கள் காத்திருக்கின்றன. சிறுதொழில்களை வாழவைக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டுமென்று கர்நாடகம், தமிழகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம், கோவா மாநிலங்களை சேர்ந்த தென்னிந்திய சிறுதொழில்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சிறுதொழில்களின் வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் என்ன இடம்பெற வேண்டும் என்று தொழில்முனைவோர்கள் எதிர்பார்க்கிறார்கள்?

கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் முன்னாள் பொருளாளர் ஜி.முரளி கூறுகையில்,"சிறுதொழிலகங்கள் நிம்மதியாகத் தொழில் செய்யும் நிலையில், நாட்டின் பொருளாதாரம் உயரத்தை நோக்கிப் பயணிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறு,சிறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு உயிரூட்டமாக விளங்கும் நிதி ஆதாரங்களை எளிமையாக கிடைக்க வழிசெய்ய வேண்டும். மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது எங்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 

புதிய அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறுதொழில்களின் பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை தனது பட்ஜெட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். வேளாண் தொழிலைப் போலவே சிறுதொழிலகங்கள்தான் அதிக வேலைவாய்ப்பை அளித்துவந்துள்ளன. இதன் காரணமாகவே கர்நாடக மாநில நிதிக் கழகம், சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரையில் 4% வட்டியில் கடனளித்துவருகிறது. ஆனால், தேசிய வங்கிகளில் சிறுதொழில் கடன் மீதான வட்டி 10 சதவீதம் வரை உள்ளது. ரூ.10கோடி வரையிலான கடனுக்கு வட்டி விகிதத்தை 4 சதவீதமாக குறைக்க பட்ஜெட்டில் அறிவிப்பை எதிர்பார்க்கிறோம்.

முத்ரா திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை அளிக்கப்படும் கடனுதவிகள் புதிய தொழில்முனைவோருக்கு கிடைக்க, நிபந்தனைகளை எளிமையாக்க வேண்டும். ஏற்கெனவே தொழில் செய்துவருவோருக்கு முத்ரா திட்டத்தில் கடனுதவியை வழங்குவது பயனற்றதாகும். நடைமுறை மூலத்தனத்திற்கான வட்டியையும் கணிசமாக குறைக்க வேண்டும். 

தேசிய வங்கிகளில் கடனுதவி பெறுவதில் ஏராளமான நடைமுறைத் தடங்கல்கள் இருக்கின்றன. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வட்டியை திருப்பிச் செலுத்தும் காலத்தை 2-3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவேண்டும். சிறுதொழில்கள் எதிர்கொள்ளும் கடன் சார்ந்த குறைகளைத் தீர்த்துவைக்க இத்துறைக்கென்றே சிறப்பு குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும்.

குறு-சிறுதொலகங்களுக்கான கடன் உறுதி நிதிய ஒதுக்கீட்டை உயர்த்தினால், கடன் வழங்குவதில் தட்டுப்பாடு ஏற்படாது. மேலும் உத்தரவாதக் கட்டணத்தை பாதியளவுக்கு குறைக்க வேண்டும். மாநில நிதிக் கழகங்களை குறு-சிறு தொழிலகங்களுக்கான கடன் உறுதி நிதியத்தின் கீழ் கொண்டுவரலாம். தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட கடனுடன் கூடிய மூலதன மானிய திட்டத்தில் (சிஎல்சிஎஸ்எஸ்) ரூ.5கோடி வரையிலான மானியத்தை மேலும் உயர்த்த வேண்டும்.

வாராக்கடன் திட்டத்தில் சிறுதொழில்களுக்கான விதிகளைத் தளர்த்தி, கடனை திரும்ப செலுத்தும் காலத்தை நீட்டிக்க வகை செய்யவேண்டும். சிறுதொழில்களுக்கான பிரதமரின் கடனுதவித் திட்டத்திற்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டுள்ளது சரிதான். ஆனால் கடனுக்கான ஒப்புதல் கிடைப்பதால் சிறு தொழில்முனைவோர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைத் தீர்க்க முனைப்பு காட்ட வேண்டும். உற்பத்தி செய்து அளித்த பொருள்களுக்கான தொகையை 45 நாட்களுக்குப் பிறகு வழங்குவதால் சிறுதொழில்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. இதையும் அரசு, தனியார் நிறுவனங்கள் சரியாக பின்பற்றாததால், பல நேரங்களில் தொகை கிடைக்க 90 நாட்கள் வரை கூட ஆகின்றது. மத்திய அரசு நிறுவனங்களாவது 45 நாட்களுக்குள் தொகை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

சிறுதொழிலகங்களில் தொழிலாளர் உற்பத்தித் திறன் குறைவாக உள்ளது. திறன் குறைவானவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதே இதற்கு அடிப்படை காரணம். எனினும், தொழிலாளர்களுக்கு ஊதியங்களை நிர்ணயிப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களால் சிறுதொழிலகங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தவிதிகளை தளர்த்த வேண்டும். சிறுதொழிலகங்களுக்கென தனியாக தொழிலாளர் சட்டங்களை இயற்ற வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்வதில் சிறுதொழிலகங்கள் தடுமாறுகின்றன. போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாததுதான் இதற்கு காரணம். இதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். சிறுதொழிலகங்கள் அமைக்கப்பட்டுள்ள தொழில்பேட்டைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். 

பொதுத்துறை நிறுவனங்கள், தங்கள் பொருளின் உற்பத்தியில் 20 சதவீதத்தை சிறுதொழிலகங்களுக்கு வழங்க வேண்டுமென்ற விதி உள்ளது. ஆனால் இது நடைமுறையில் அமலாக்கப்படுவதில்லை. இந்தவிதியை தீவிரமாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டவேண்டும். சிறுதொழில்களை காப்பாற்றினால்தான் பெருந்தொழில்கள் சீராக இயங்கும், நமது பொருளாதாரமும் மேம்படும் என்றார் அவர்.

கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.ராஜு கூறுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு எளிதாகத் தொழில் செய்வதற்கான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுநாள்வரை குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை தொழிலகத்தில் நிறுவப்படும் இயந்திரத்தின் மதிப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு வந்தது. இதனை ஆண்டு விற்றுமுதல் அடிப்படையில் வகைப்படுத்த முனைந்துள்ளதை மத்திய அரசு கைவிடவேண்டும். இதை செய்யாவிட்டால் உற்பத்தியில் ஈடுபடாத முகவர்கள் கூட சிறுதொழில்நிறுவனங்கள் என்று தங்களை அழைத்துக் கொள்வர்.

சிறுதொழில்களுக்குத் தனியாக தொழிலாளர் சட்டங்களை இயற்ற வேண்டும். சிறுதொழிலில் இருந்து வெளியேறுவதற்கான சட்டங்களை எளிமையாக்க வேண்டும்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com