அமெரிக்கா-இந்தியா வர்த்தக மோதல் எதிரொலி! பங்குச் சந்தையில் கடும் சரிவு

அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைக் கண்டது.
அமெரிக்கா-இந்தியா வர்த்தக மோதல் எதிரொலி! பங்குச் சந்தையில் கடும் சரிவு


அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மோதல் எதிரொலியாக பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் சரிவைக் கண்டது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும், பாதாம், பருப்பு, வால்நட் உள்ளிட்ட  28 வகையான பொருள்களுக்கு இந்தியா சுங்க வரியை உயர்த்தியுள்ளது. உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட இந்திய தயாரிப்புகளின் இறக்குமதிக்கு அமெரிக்கா வரியை அதிகரித்ததற்கு  எதிர்வினையாக இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அமெரிக்கா-இந்தியா இடையே  வரி விதிப்பு தொடர்பாக கருத்து  வேறுபாடுகள் எழுந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை தொடர்ந்து மூன்று மாதங்களாக அதிகரிப்பு,  டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் கருத்தில் கொண்டு முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். அதன் காரணமாக, திங்கள்கிழமை வர்த்தகம் தொடங்கியது முதலே பங்குச் சந்தையில் மந்த நிலையே காணப்பட்டது.
அதன் விளைவாக, மும்பை பங்குச் சந்தையில் உலோக துறை குறியீட்டெண் 3 சதவீதம் அளவுக்கு இழப்பை சந்தித்தது. எரிசக்தி துறை குறியீட்டெண்ணும் 2 சதவீதம் வரை குறைந்தது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில்,  டாடா ஸ்டீல் பங்கின் விலை அதிகபட்ச இழப்பாக 5 சதவீதம் வரை குறைந்தது. இதைத் தொடர்ந்து, வேதாந்தா, டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலையும் 3.33 சதவீதம் வரை சரிந்தன.
அதேசமயம், யெஸ் வங்கி, கோல் இந்தியா மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகளுக்கு சந்தையில் வரவேற்பு காணப்பட்டதன் காரணமாக அவற்றின் விலை அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 491 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 38,960 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 151 புள்ளிகள் சரிந்து 11,672 புள்ளிகளாக நிலைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com