ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: கேள்விக் குறியாகும் இந்திய வளர்ச்சி திட்டங்கள்

ஈரான்-அமெரிக்கா இடையேஏற்பட்டுள்ள போர் பதற்றம் எங்கு பீதியை கிளப்பி உள்ளதோ... இல்லையோ... இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது.
ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: கேள்விக் குறியாகும் இந்திய வளர்ச்சி திட்டங்கள்

ஈரான்-அமெரிக்கா இடையேஏற்பட்டுள்ள போர் பதற்றம் எங்கு பீதியை கிளப்பி உள்ளதோ... இல்லையோ... இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்வதில் ஈரான் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஹோர்மூஸ் ஜலசந்தி பகுதியில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டது முதலே உலக நாடுகள் கச்சா எண்ணெய் சந்தையில் தங்களது முழு கவனத்தை செலுத்த ஆரம்பித்து விட்டன.

எரிகிற தீயில் எண்ணெய் வார்ப்பதைப் போல அமெரிக்காவின் கண்காணிப்பு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது இப்பிரச்னையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.    

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் மிகுந்த நாடுகள் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  ஈரான்-அமெரிக்கா இடையே எழுந்துள்ள இந்த போர் பதற்றம் அந்த குறிக்கோளை பதம்பார்த்து விடுமா என்ற அச்சம் எல்லோரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது வரை கச்சா எண்ணெய் விலை பயமுறுத்த கூடிய அளவுக்கு உயரவில்லை என்பது உலக நாடுகளின் ஒரே ஆறுதல். 

மத்திய அரசு, தூய்மை, வீட்டு வசதி, அனைவருக்கும் மின்சாரம், ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு, கச்சா எண்ணெய் விலையில் அண்மைக் காலமாக காணப்பட்டு வரும் அதிக ஏற்றஇறக்கமின்மையே  முக்கிய காரணம். கச்சா எண்ணெய் விலை திடீரென்று அதிகரிக்கும்பட்சத்தில் அது திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.     

கச்சா எண்ணெய் விலை ஒவ்வொரு பேரலுக்கு  10 டாலர் அதிகரிக்கும்போதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் பாதிக்கப்படும் என்பதும் இதன் மூலம் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1,200 கோடி டாலர் அதிகரிக்கும் என்பதும் ஆய்வு நிறுவனங்களின் மதிப்பீடு.

கச்சா எண்ணெய் விலையில் காணப்படும் திடீர் ஏற்றம், மத்திய அரசின் மானியப் பொறுப்பை அதிகரிப்பதுடன், அது நாட்டின் இறக்குமதி செலவினத்தையும் உயரச் செய்யும். அந்நியச் செலாவணி கரைந்து போகும் அதன் பாதிப்பு ரூபாய் மதிப்பில் எதிரொலிக்கும். மொத்தத்தில் இவை, அரசின் சமூக நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிக அளவில் பாதிக்கும். 

இதனை உணர்ந்துதான், பெட்ரோலியத் துறை அமைச்சர் எண்ணெய் கப்பல் தாக்கப்பட்ட சம்பவத்தில் நட்பு நாடான அபுதாபியை அழைத்து கச்சா எண்ணெய் விலை உயரக்கூடிய சூழல் குறித்து தனது கவலையை பரிமாறிக் கொண்டுள்ளார்.

அதேபோன்று, சவூதி பெட்ரோலியத் துறை அமைச்சர் காலித் அல்-ஃபலிஹ்,  கச்சா எண்ணெய் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைக்க ஒபெக் நாடுகளின் ஆதரவை திரட்டினார். அதற்கு முன்னதாக, ஐக்கிய அரசு அமீரகத்தின் சுல்தான் அகமது அல் ஜபீரை தொடர்பு கொண்ட காலித் ஹோர்மூஸ்,  ஜலசந்தியில் குறுக்கீடுகள் இருந்தபோதிலும்,  தடையற்ற எண்ணெய் மற்றும் எல்பிஜி போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்குமாறு கோரினார்.  

ஈரான்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான கடல் பாதை சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு மிக முக்கியமானது. அதன்படி,  20 சதவீத கச்சா எண்ணெய், 25 சதவீத பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருள்கள் இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது.

இந்தியா அதன் கச்சா எண்ணெய் தேவையில் 83 சதவீதத்தை இந்த வழியாகத்தான் பெற்று வருகிறது. பெருமளவு கச்சா எண்ணெய், எல்பிஜி தேவைக்கு இந்த பாதையைத்தான் இந்தியா பெரிதும் நம்பியுள்ளது. எனவே, ஈரான் மீது தொடுக்கப்படும் எந்தவொரு போரும்,  இந்திய பொருளாதார, சமூக நல திட்ட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது மட்டும் திண்ணம்.

  • பாரசீக வளைகுடா பகுதியில் எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டது முதலே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது.
  • கடந்த ஜூன் 13-இல் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் உயர்ந்தது. கடந்த ஜனவரியிலிருந்து காணப்படும் அதிகபட்ச ஏற்றம் இது. 
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு பின்னர் திரும்ப பெற்றதன் எதிரொலியாக கடந்த வெள்ளிக்கிழமை சந்தை மேலும் நடுக்கத்துக்குள்ளாகியது. இறுதியில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலரை எட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com