தேர்தல் ஜுரம்: சிறு, நடுத்தர பங்குகளுக்கு மீண்டும் மவுசு!

ஒவ்வொரு மக்களவைத் தேர்தல் ஆண்டுகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட சிறு, நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய குறியீடுகள் (ஸ்மால், மிட்கேப் இன்டெக்ஸ்) நல்ல ஏற்றம் கண்டுள்ளன.
தேர்தல் ஜுரம்: சிறு, நடுத்தர பங்குகளுக்கு மீண்டும் மவுசு!

ஒவ்வொரு மக்களவைத் தேர்தல் ஆண்டுகளிலும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகளை விட சிறு, நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய குறியீடுகள் (ஸ்மால், மிட்கேப் இன்டெக்ஸ்) நல்ல ஏற்றம் கண்டுள்ளன.
 கடந்த 15 மாதங்களாக சிறு, நடுத்தர பங்குகள் பலத்த அடிவாங்கி வந்தன. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், கடந்த சில நாள்களாக குறிப்பாக மார்ச் மாத தொடக்கத்திலிருந்து ஏராளமான பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்றுள்ளன. கடந்த 10 நாள்கள் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி, சென்செக்ஸ் ஆகியவற்றை விட சிறு, நடுத்தர பங்கு குறியீடுகள் அதிகம் ஏற்றம் பெற்றுள்ளன.
 சிறு, நடுத்தர பங்குகள் குறியீடு 20 சதவீதம் வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
 பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்த நிறுவனப் பங்குகளுக்கு சமீபத்தில் நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 15 மாதங்களில் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்த வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள பங்குகளுக்கு விலை குறைந்த நிலையில் வாங்குவதற்கு போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
 கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை சிறு நிறுவனப் பங்குகள் குறியீடு 8, நடுத்தரப் பங்குகள் குறியீடு 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஏற்றம்கூட இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்துதான் ஏற்பட்டதாக மார்க்கெட் வட்டாரம் கூறுகிறது. ஆனால், நிஃப்டி வெறும் 3 சதவீதம்தான் உயர்ந்துள்ளது. விலை குறைந்த நிலையில், வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள சிறு, நடுத்தரப் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே மவுசு அதிகரித்துள்ளதையே இது காட்டுவதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.
 கடந்த 2018-இல் பல்வேறு நிதி சார்ந்த நிறுவனங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, நல்ல வலுவான அடிப்படை கொண்ட நிறுவனப் பங்குகள் கூட பலத்த அடி வாங்கின. அவற்றின் 52 வார அதிகபட்ச விலையிலிருந்து ஒப்பிட்டுப் பார்த்தால் மிகக் குறைந்த விலையில் வர்த்தகம் ஆகியது. இதனால், அதுபோன்ற பங்குகளுக்கு இப்போது நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது.
 இந்நிலையில், தேர்தல் ஜுரமும் பிடித்துக் கொண்டுள்ளது. இது பங்குச் சந்தையையும் விட்டுவைக்கவில்லை. இதனால், தேர்தலுக்கு முந்தைய "ரேலி'யை எதிர்பார்க்கலாம். அந்த வகையில், சிறு, நடுத்தரப் பங்குகளுக்கு மேலும் கிராக்கி வரும் என்கின்றனர் வல்லுநர்கள். ஆனால், இந்த உற்சாகம் தேர்தல் முடிந்த பிறகும் தொடருமா என்பதுதான் முதலீட்டாளர்களிடையே எழுந்துள்ள முக்கியக் கேள்வி ஆகும்.
 இதற்கு ஆதரவாக வரலாற்றுப் புள்ளி விவரங்கள் நேர்மறைக் கருத்துகளை தருகின்றன. ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தலின் போதும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், பங்குச் சந்தையில் உற்சாகம் இருந்துள்ளது என்கிறது வரலாற்றுப் புள்ளிவிவரங்கள். 2014-இல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை கைப்பற்றிய போது, அடுத்த ஓராண்டில் சிறு, நடுத்தரப் பங்குகள் குறியீடு முறையே 52, மற்றும் 51 சதவீதம் உயர்ந்தன. நிஃப்டி 27 சதவீதம் உயர்ந்தது. அதபோல, முந்தைய ஆண்டுகளிலும் இதேபோன்ற நிலைமைதான் இருந்துள்ளன.
 2004-இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த ஓராண்டுகளில் சிறு, நடுத்தரப் பங்குகள் முறையே 75 மற்றும் 35 சதவீதம் லாபம் ஈட்டிக் கொடுத்துளளன. அதே காலகட்டத்தில் நிஃப்டி 15 சதவீதம் உயர்ந்தது. 2009-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியைப் பிடித்த போது, ஓராண்டில் சிறு, நடுத்தரப் பங்குகள் விலை முறையே 129, மற்றும் 126 சதவீதம் ஏற்றம் கண்டன. மொத்தத்தில் கடந்த 2003 முதல் இந்த ஆண்டு இதுவரையிலான காலத்தில் சிறு, நடுத்தர பங்குகள், நிஃப்டி குறியீடுகள் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம் முறையே 16.2, 20 மற்றும் 13 சதவீதமாக இருந்துள்ளன.
 அந்த நிறுவனப் பங்குகளின் சொத்து மதிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அதன் மதிப்பீடுகளும் கவர்ச்சிகரமாக மாறியுள்ளன. அரசின் செலவினம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மத்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதக் குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலையொட்டி, விவசாயிகள், இளைஞர்களுக்கு சாதகமான பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. இவை அனத்தும் சந்தைக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். மேலும், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும், ஜிஎஸ்டி அமலாக்கம் ஆகியவையும் சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சிறு, நடுத்தரப் பங்குகளில் குறைந்தபட்ச லாப விகிதம் 20 சதவீதமாக இருக்கும் என்கின்றனர் வல்லுநர்கள்.
 மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் கடந்த வாரத்தில் நிஃப்டி, சென்செக்ஸ், சிறு, நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய குறியீடுகள் கடந்த ஆண்டு நவம்பருக்கு பிறகு கடந்த அதிக அளவு ஏற்றம் பெற்றுள்ளன. நிஃப்டி மட்டும் 3 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் சிறு நிறுவனப் பங்குகளை உளளடக்கிய ஸ்மால் கேப் இன்டெக்ஸ் கடந்த வாரத்தில் மட்டும் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வகையில் 4 நாள்களில் 154 சிறு நிறுவனப் பங்குகளின் விலை சுமார் 10 முதல் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பலத்த அடிவாங்கிய சிறு, நடுத்தர பங்குகள் மீதான மதிப்பீட்டை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக சிறு, நடுத்தர நிறுவனப் பங்குகளுக்கு வரும் நாள்களிலும் மவுசு கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 - எம்எஸ்ஜி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com