ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் விலகல்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும் அதன் தலைவருமான நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இயக்குநர் குழுவிலிருந்து திங்கள்கிழமை விலகினர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் விலகல்


ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும் அதன் தலைவருமான நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர் இயக்குநர் குழுவிலிருந்து திங்கள்கிழமை விலகினர்.
ஜெட் ஏர்வேஸில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர் பதவியில் இருந்த  நரேஷ் கோயல் தனது பதவியை ராஜிநாமா செய்வார் என செபியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமானங்களை இயக்க முடியாமல் திணறி வந்தது. 80 விமானங்களை இயக்க முடியாமல் அதன் சேவைகளை ரத்து செய்வதாக அந்நிறுவனம் அறிவித்தது.
ஜெட் ஏர்வேஸின் எதிர்காலம் குறித்த பல்வேறு யூக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அதன் தலைவர் பதவியிலிருந்து நரேஷ் கோயலும், அவரது மனைவியும் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான அந்நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் தயாரித்த சீரமைப்பு  திட்டத்துக்கு ஜெட் ஏர்வேஸ் நிர்வாக குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின்  நியமன இயக்குநர் கெவின் நைட் ஆகியோர் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து வெளியேறவுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எத்திஹாட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ளது.
இவர்கள் பதவி விலகியதையடுத்து, அந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய நிதி நிறுவனங்களைச் சேர்ந்த இரண்டு நியமன இயக்குநர்கள் ஜெட் ஏர்வேஸ் இயக்குநர் குழுவில் சேர்க்கப்படவுள்ளனர். மேலும், வங்கிகளின் சீரமைப்பு திட்டத்தை ஜெட்  ஏர்வேஸ் ஏற்றுக் கொண்டதையடுத்து, கடனில் தத்தளித்து வரும்  அந்நிறுவனத்துக்கு உடனடியாக ரூ.1,500 கேடி கிடைக்கும் என்று செபி-க்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய தியாகம் இல்லை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நலனை பாதுகாக்கவும், அந்நிறுவனத்தை நம்பியுள்ள 22,000 பணியாளர்களின் குடும்பங்களை காப்பாற்றவும் எடுத்துள்ள இந்த முடிவை  மிகப் பெரிய தியாகமாக நான் கருதவில்லை என நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மே 31-க்குள் ஏல முடிவு: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கையகப்படுத்த விரும்புவோர் அடுத்த மாதம் முதல் தங்களது விருப்பங்களை தெரிவிக்கலாம். மே மாத இறுதிக்குள் முதலீட்டாளர் குறித்து இறுதி முடிவெடுக்கப்படும். 
தற்போது பங்குகளை விற்று வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ள நரேஷ் கோயலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்று தனது பங்கு மூலதனத்தை உயர்த்திக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜனீஷ் குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com