
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நான்காம் காலாண்டில் ரூ.693.58 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் (ஜனவரி-மார்ச்) எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.4,655 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2017-18 நிதியாண்டில் இதே கால அளவில் ஈட்டிய வருவாய் ரூ.3,887 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம். நிகர லாபம் ரூ.594.34 கோடியிலிருந்து 16.70 சதவீதம் அதிகரித்து ரூ.693.58 கோடியானது.
கடந்த 2018-19 முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.2,430.97 கோடியாக அதிகரித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் நிகர லாபம் ரூ.2,002.50 கோடியாக காணப்பட்டது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் இயக்குநர் குழு கடந்த நிதியாண்டுக்கு 380 சதவீத ஈவுத்தொகை வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு ரூ.2 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.7.60 ஈவுத்தொகையாக கிடைக்கும். வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குப் பிறகு இந்த ஈவுத்தொகை கிடைக்கும் என மும்பை பங்குச் சந்தையிடம் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.