
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏப்ரல் 26-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41,851 கோடி டாலரை (ரூ.29.29 லட்சம் கோடி) எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 437 கோடி டாலர் (ரூ. 30,520 கோடி) உயர்ந்து 41, 851 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இரண்டாவது முறையாக டாலர்-ரூபாய் பரிமாற்ற (ஸ்வாப்) திட்டத்தை ரிசர்வ் வங்கி ஏப்ரல் 23-ஆம் தேதி செயல்படுத்தியதன் விளைவாக செலாவணி கையிருப்பு கணிசமான ஏற்றத்தை கண்டுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் செலாவணி கையிருப்பு 73 கோடி டாலர் உயர்ந்து 41, 414 கோடி டாலராக காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 438 கோடி டாலர் அதிகரித்து 39,042 கோடி டாலராக காணப்பட்டது.
தங்கத்தின் கையிருப்பில் மாற்றம் எதுவுமின்றி 2,330 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
அதேசமயம், சர்வதேச நிதியத்தில் எஸ்டிஆர் இருப்பு 59 லட்சம் டாலர் குறைந்து 144 கோடி டாலராகவும், நாட்டின் கையிருப்பு நிலை 1.36 கோடி டாலர் சரிந்து 334 கோடி டாலராகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது வரலாற்றில் முதல் முறையாக 42,603 கோடி டாலரை எட்டி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதன்பிறகு காணப்பட்ட சாதகமற்ற சூழல்களால் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் 2,000 கோடி டாலர் (சுமார் ரூ.2.17 லட்சம் கோடி) அளவுக்கு சரிவு ஏற்பட்டது.
ஆனால் தற்போது, ரிசர்வ் வங்கி, நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க டாலர்-ரூபாய் "ஸ்வாப்' உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதையடுத்து டாலர் கையிருப்பு மீண்டும் 42,000 கோடி டாலரை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...