சுடச்சுட

  
  auto


  கடந்த ஏப்ரல் மாதத்தில் வாகனங்களின் விற்பனை சரிவைச் சந்தித்ததாக ஆட்டோமொபைல் விற்பனையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
  கடந்த 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரக வாகனங்களில் விற்பனையும் சரிவைச் சந்தித்துள்ளது.
  2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 2,47,278 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த மாதம் 2,42,457 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. இது, 2 சதவீதம் குறைவாகும். கடந்த மார்ச் மாத கார் விற்பனையான 2,46,615-உடன் ஒப்பிட்டாலும், கடந்த ஏப்ரல் மாத கார்களின் விற்பனை 2 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.
  இருசக்கர வாகனங்களைப் பொருத்தவரை, முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையோடு ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரலில் அது 9 சதவீதம் சரிவைச் சந்தித்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில் 14,09,662 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 12,85,470 இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகின. கடந்த மார்ச் மாத விற்பனையான 13,43,610-உடன் ஒப்பிடுகையில் இது 4 சதவீதம் குறைவாகும்.
  அதேபோல், ஏப்ரல் 2018-இல் 54,432 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் அந்த விற்பனை 13 சதவீதம் குறைந்து 47,183 ஆகியுள்ளது. முந்தைய மார்ச் மாதத்தின் விற்பனையான 53,573-உடன் ஒப்பிடுகையில், இது 12 சதவீதம் குறைவாகும்.
  வர்த்தக வாகனங்களின் விற்பனையைப் பொருத்தவரை, கடந்த ஏப்ரல் மாதம் 63,360 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. 
  எனினும், முந்தைய ஆண்டின் ஏப்ரல் மாத விற்பனையான 75,622 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் சரிவாகும். எனினும், முந்தைய மார்ச் மாத விற்பனையாக 62,028 வாகனங்களுடன் ஒப்பிடுகையில், வர்த்தக வாகனங்களின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
  ஒட்டுமொத்தமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அனைத்து ரக வாகனங்களின் விற்பனை 16,38,470-யாக இருந்தது. இது 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு (17,86,994) ஒப்பிடுகையில் 8 சதவீதமும், கடந்த மார்ச் மாதத்தோடு (17,05,826) ஒப்பிடுகையில் 4 சதவீதமும் குறைவாகும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai