சென்செக்ஸ் அடுத்த இலக்கு 45,000!

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் உலக அளவில் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாக அமையக்கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சென்செக்ஸ் அடுத்த இலக்கு 45,000!


அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் உலக அளவில் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாக அமையக்கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும் காலப் போக்கில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை உள்ளதால் பங்குச் சந்தை உற்சாகம் பெறும் என வல்லுநர்கள், நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில் அது பங்குச் சந்தையில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.


மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்தை கண்டிருந்தது. இருப்பினும்  ஒட்டுமொத்தமாக நிறைய நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளித்துள்ளது.  குறிப்பாக தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி, மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் ஆகிய இரண்டும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. 

கடந்த 2014, மே 26 முதல் நிகழாண்டு ஆண்டு மே 24-ஆம் தேதி வரையிலான காலத்தில் சென்செக்ஸ் சுமார் 14,742 புள்ளிகள் உயர்ந்துள்ளன. கடந்த 2014, மே 24-இல் சென்செக்ஸ் 24,217.34 புள்ளிகளாக நிலை கொண்டிருந்தது. சென்செக்ஸ் தற்போது 39,434.72 புள்ளிகளில் நிலை பெற்றுள்ளது. இதேபோல  நிஃப்டி 7,229.95 புள்ளிகளில் நிலை கொண்டிருந்தது.  தற்போது (மே 24) 11,844.10 புள்ளிகளாக நிலை கொண்டுள்ளது.   இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் நிஃப்டி 4,614.15‬ புள்ளிகள் உயர்ந்துள்ளன.

இந்நிலையில், 17-ஆவது மக்களவைக்கான தற்போதைய தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. இதில் குறிப்பாக பாஜக மட்டுமே தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளது. ஏற்கெனவே கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, பொருளாதார சீர்திருத்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பணம் மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றுக்கு எதிர்க்கட்சிகள் கடும்  விமர்சனங்களை முன்வைத்தாலும், மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து, தொடர்ந்து நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் பல்வேறு பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பட்டுள்ளது.  பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றின் பலன்கள் வரும் காலாண்டுகளில்தான் தெரிய வரும் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அடுத்தடுத்து பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று சந்தை வட்டாரம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைகள் கண்டிப்பாக பங்குச் சந்தை உள்ளிட்ட நிதிச்  சந்தைகளுக்கு மிகுந்த சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று மார்க்கெட் வட்டாரம் கருதுகிறது.

இந்த வகையில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு வசதிக்கும் மத்திய அரசு மிகுந்து முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுப்படியான விலையில் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு அரசு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிய வருகிறது. கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியுற்றால்  நுகர்பொருள் உற்பத்தித் துறை மிகுந்த பயனடயும். மேலும்,  வங்கி சாரா நிதி நிறுவனங்களின்  நிதி நெருக்கடி பிரச்னையைத் தீர்க்க அரசு மகுந்த கவனம் செலுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர  பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்னையைத் தீர்க்கவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் உலக அளவில் பங்குச் சந்தைகளுக்கு பாதகமாக அமையக்கூடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும் காலப் போக்கில் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை உள்ளதால் பங்குச் சந்தை உற்சாகம் பெறும் என வல்லுநர்கள், நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, வங்கி வட்டி விகிதம் குறைக்கப்படும் பட்சத்தில் அது பங்குச் சந்தையில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

இந்நிலையில், பல்வேறு சர்வதேச  முதலீட்டு வங்கிகளும், தர நிர்ணய நிறுவனங்களும் இந்திய பங்குச் சந்தை அடுத்துவரும் 5 ஆண்டுகளில் மேலும் உற்சாகம் பெறும் என்று கணித்துள்ளன. இதில் பேங்க் ஆஃப் அமெரிக்கா மெர்ரில் லிஞ்ச், சிஎல்எஸ்ஏ, கிரெடிட் சுஸி உள்ளிட்டவை அடங்கும்.

இதற்கிடையே, சர்வதேச முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் அடுத்த ஆண்டு (2020) ஜூனில் 45,000 புள்ளிகளைத் தொடும் என கணித்துள்ளது. இதற்கு பண வீக்கம் குறைவது, உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவினத் தொகையை  அதிகரிப்பது, அன்னிய நேரடி முதலீட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பது, கிராமப்புற மேம்பாட்டில் அரசின் அதீத கவனம் உள்ளிட்டவை சந்தைக்கு சாதகமான அம்சங்களாகப் பார்க்கப்படுவதாக மோர்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. மேலும்,  மத்திய அரசின் பல்வேறு புதிய கொள்கை முடிவுகள் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமையும் என்று புரோக்கிங் நிறுவனமான நமூரா தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி கடந்த 2 மாதங்களாக நிலையற்ற தன்மையில் பங்குச் சந்தை இருந்து வந்தது இந்நிலையில், தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சென்செக்ஸ் 40,000 புள்ளிகளையும், நிஃப்டி 12,000 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே மோர்கன் ஸ்டான்லி 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்குள் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கடக்கும் என்று சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்தக் கணிப்பு இதே தொழில் வர்த்தக சிறப்புப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

பிஎஸ்இ-500: அதிக லாபமளித்த 200 பங்குகள்!

இந்த மோடி சுனாமியில் மும்பை பங்குச் சந்தையில் பிஎஸ்இ-500 பட்டியலில் இடம் பெற்றுள்ள 500 பங்குகளில்  197 நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. இந்தப் பங்குகள் 100 சதவீத்துக்கும் மேல் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.  இதன் மூலம் முதலீட்டாளர்கள் இவற்றில் மிண்டா இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், கேஇஐ இண்டஸ்ட்ரீஸ் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகள் 1000 சதவீதம் உயர்ந்து நல்ல  லாபத்தை அளித்துள்ளது. மேலும், இந்தப் பட்டியலில் 100 முதல் 900 சதவீதம் வரை வில உயர்ந்துள்ள நிறுவனப் பங்குகள் பட்டியலில் பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீஸஸ், டாடா மெட்டாலிக்ஸ், அவந்தி ஃபீட்ஸ், இந்தியா புல்ஸ் வெஞ்சூர்ஸ், ஐஎஃப்பி இண்டஸ்ட்ரஸ், வி-மார்ட், சொனாட்டா சஃப்ட்வேர் உள்ளிட்டவை அடங்கும்.

பிஎஸ்இ-500 பட்டியலில் உள்ளவற்றில் நல்ல வலுவான அடிப்படைகளை கொண்ட நிறுவனப் பங்குகள் வரும் 5 ஆண்டுகளிலும் நல்ல லாபத்தை அளிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பங்குச் சந்தை வல்லுநர்கள், நிபுணர்கள் கணித்துள்ளனர்.  இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "நல்ல வலுவான அடிப்படை, நல்ல ஆளுகை, நல்ல மதிப்பீடு ஆகியவற்றைக் கொண்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை அடையாளம் கண்டு அதுபோன்ற நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மேற்கொண்டால் நிச்சயம் நல்ல லாபம் பெறலாம். அந்த நிறுவனங்கள் அரசின் புதிய கொள்கைகளின் மூலம் பயன்பெறும் நிறுவனங்களாகவும் இருக்க வேண்டும்' என்கின்றனர்.

இதற்கிடையே, இந்தப் பட்டியலில் 100 சதவீத்துக்கும் மேல் லாபம் ஈட்டியுள்ள 197 நிறுவனப் பங்குகளில் இன்னும் லாபத்தைப் பதிவு செய்யாதவர்கள், சந்தையில் எழுதப்படாத விதிமுறையாகக் கருதப்படும் 20 சதவீதம் அளவுக்கு நஷ்ட இடர்பாட்டு (ஸ்டாப்-லாஸ்) அளவை நிர்ணயித்துக் கொள்வதும் அவசியம் என்கின்றனர் அவர்கள். அதே சமயம், வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள நிறுவனப் பங்குகள் விலை குறைந்த நிலையில் நீண்ட கால முதலீட்டுக்கு வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

கடந்த 5 ஆண்டு கால மோடி ஆட்சியில் 600 முதல் 1500 சதவீதம் வரை ஏற்றம் பெற்ற நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள்:

கம்பெனி பெயர்    உயர்வு (சதவீதத்தில்)  
மிண்டா இண்டஸ்ட்ரீஸ்    1928.53
பஜாஜ் பைனான்ஸ்    439.54
கேஇஐ இண்டஸ்ட்ரீஸ்    1434.65
ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ்    931.16
இந்தியா புல்ஸ் இன்டகிரேடட் சர்வீஸஸ்      912.90
ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ்    908.12
இந்தியா புல்ஸ் வெஞ்சர்ஸ்    874.64
பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்    848.47
காப்லின் பாயிண்ட் லேப்    840.16
அவந்தி ஃபீட்ஸ்    838.92
டாடா மெட்டாலிக்ஸ்    801.15
கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்     767.90
பிலிப்ஸ் கார்பன்    765.87
பஜாஜ் பைனான்சியல் சர்வீஸஸ்    756.34
நவீன் ஃபுளோரின் இன்டர்நேஸனல்    715.20
ஐஎஃப்பி இண்டஸ்ட்ரீஸ்     699.20
ஜான்சன் கன்ட்ரúôல்ஸ்    686.77
வீ மார்ட் ரீடெய்ல்     650.43
கேபிஆர் மில்ஸ்    648.24
மகாராஷ்ட்ரா ஸ்கூட்டர்ஸ்    646.60
சொனாட்டா சஃப்ட்வேர்    639.71


பங்குச் சந்தையிலும் "மோடி அலை'

நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் பங்குச் சந்தையிலும் சுனாமி வீசியுள்ளது எனலாம்.  மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸூம், தேசிய பங்குச் சந்தைக் குறயீடான நிஃப்டியும் 60 சதவீதம் வரை ஏற்றம் கண்டுள்ளன.

இதே போன்று  கடந்த 5 ஆண்டு கால ( 2014, மே 26-2019, மே 21)  பாஜக ஆட்சியில்  பங்குச் சந்தையில் முக்கிய தனியார், பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய பேங்கிங் இன்டெக்ஸ் 94 சதவீதம், தகவல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஐடி இன்டெக்ஸ் 78 சதவீதம், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய எஃப்எம்சிஜி இன்டெக்ஸ் 73 சதவீதம் உயர்ந்துள்ளன.

இதற்கிடையே, நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப் இன்டெக்ஸ் 73 சதவீதம், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் இன்டெக்ஸ் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.  அதே சமயம், மின் உற்பத்தி, மின்சாதன நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பவர் இன்டெக்ஸ்,  மோடி ஆட்சியில் சுமார் 13 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.  ஆனால், முக்கிய உலோக நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மெட்டல் இன்டெக்ஸ்  கடந்த 2014, மேமுதல் இதுவரை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. "ஏஸ்  ஈக்விட்டி' நிறுவனம் வெளியிட்டுள தகவல்கள் மூலம் இந்தப் புள்ளி விவரங்கள் தெரிய வந்துள்ளன.

இது ஒரு புறம் இருக்க  நீண்ட கால முதலீட்டாளர்கள் விரும்பி வாங்கும் முதல் தரப் பங்குகளும் நல்ல லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகையில் மோடியின் 5 ஆண்டு கால ஆட்சியில் சென்செக்ஸ், நிஃப்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனப் பங்குகளில் 3-இல் ஒரு பங்கு நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 17 பங்குகளும், 30 நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 9 பங்குகளும்  சுமார் 100 முதல் 1500 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.  இதில் நிஃப்டி-50,  சென்செக்ஸ் ஆகிய இரண்டு பட்டியலிலும் இடம் பெற்றுள்ள பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனப் பங்கின் விலை கடந்த 5 ஆண்டுகளில் 14 மடங்கு உயர்ந்துள்ளது.

லாபம் அளித்த நிஃப்டி, சென்செக்ஸ் பங்குகள்: மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், பிபிசிஎல்,  ரிலையன்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸூகி, ஹிந்துஸ்தான் யுனி லீவர், யுபிஎல், கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டான் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்சியல் சர்வீஸஸ் உள்ளிட்ட 17 நிஃப்டி நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு  இரட்டிப்பு லாபத்தை அளித்துள்ளது. இதேபோன்று, சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பஜாஜ் ஃபைனான்ஸ், கோடக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸூகி, ஆசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி ஆகிய 9 நிறுவனப் பங்குகள் 100 சதவீத்துக்கும் மேலான லாபத்தை அளித்துள்ளது. இவை அனைத்தும் புளு சிப்ஸ் என்றழைக்கப்படும் முதல் தர நிறுவனப்  பங்குகளாகும். மேலும்,  இவை அனைத்தும் நல்ல வலுவான அடிப்படையையும், நிதி மேலாண்மையையும் கொண்டுள்ள இவை  முதலீட்டாளர்களால் அதிகம் விரும்பி வாங்கும்  பங்குகள் பட்டியலில் உள்ளவை. இதே போன்று முன்னணி ஐடி, எஃப்எம்சிஜி, பேங்க் பங்குகளும் மோடி ஆட்சியில் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது.

வல்லுநர்கள் யோசனை

குறைந்த விலையில் இது போன்ற நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், ரிஸ்க் எடுக்கத் தயாராக உள்ளவர்கள்,  முதலீட்டை அதிகரித்துக் கொள்ளலாம். அவ்வாறு விருப்பப்படாதவர்கள், நல்ல லாபம் இருக்கும் போது, குறிப்பிட்ட அளவோ அல்லது பாதியளவுக்கு லாபத்தைப் பதிவு செய்யலாம். மேலும்,  எஞ்சியுள்ள  பங்குகளுக்கு நஷ்ட இடர்பாட்டு விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், லாபத்தைப் பதிவு செய்துள்ள நிறுவனப் பங்குகள் விலை குறந்த நிலையில் மீண்டும் முதலீட்டை மேற்கொள்ளலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.
தற்போது மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. குறிப்பாக கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்தத் தேர்தலில் பாஜக மட்டுமே அறுதிப் பெரும்பான்மையுடன் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதனால், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் உத்வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்குச் சந்தைக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் ஆண்டுகளிலும் முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, சென்செக்ஸ் பங்குகளின் விலை மேலும் ஏற்றம் பெறுவதற்கு நிறைய வாய்ப்பு இருப்பதாகப் பங்குச் சந்தை வல்லுநர்கள், நிபுணர்கள், நிதி ஆலோசகர்கள் கருதுகின்றனர்.


பாஜக வெற்றியின் அபரிமித தாக்கம்:நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கு கிராக்கி!

கடந்த 2017-2018 ஆண்டுகளில் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தன. கடந்த ஆண்டு (2018) இறுதியில் இவற்றின் விலை மிகவும் குறைந்திருந்த நிலையில், முதலீட்டாளர்களிடையே வாங்கும் போக்கும் அதிகரிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளுக்கு சந்தையில் கிராக்கி வரத் தொடங்கியது. குறிப்பாக தற்போது  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து,  இந்த நிறுவனப் பங்குகள் மீது முதலீட்டாளர்களின் மோகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரத்தில் (மே 20-25),  5 நாள்களில் குறிப்பிட்ட சில சிறிய நிறுவனப் பங்குகளின் விலை 10 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இதுவே இவற்றின் மீது முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மோகத்தைக் காணமுடியும். கடந்த மே 17-ஆம் தேதி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளி மொத்த சந்தை மூலதன மதிப்பு ரூ.146.58 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான  24-ஆம் தேதி  ரூ.152.71 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 5 நாள்களில்  சந்தை மூல தன மதிப்பு ரூ.6.1 லட்சம் கோடி உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com