குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை: மூலதனத்தை அடிப்படையாக கொண்டிருக்க கோரிக்கை

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை விற்றுமுதலை (டர்ன்ஓவர்) அடிப்படையாகக் கொண்டிருக்கும்படியாக விரைவில் மாற்றப்பட உள்ள நிலையில், அந்த வரையறையானது இயந்திரங்கள்,
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை: மூலதனத்தை அடிப்படையாக கொண்டிருக்க கோரிக்கை

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை விற்றுமுதலை (டர்ன்ஓவர்) அடிப்படையாகக் கொண்டிருக்கும்படியாக விரைவில் மாற்றப்பட உள்ள நிலையில், அந்த வரையறையானது இயந்திரங்கள், மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டே இருக்க வேண்டும் என்று குறு, சிறு, நடுத்தர தொழில் துறையினர் வலியுறுத்துகின்றனர்.
 சர்வதேச அளவில் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது. இந்தியாவிலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியில் தவிர்க்க முடியாத இடத்தை வகிப்பதுடன், மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதாகவும், பல பெரிய நிறுவனங்கள் இயங்குவதற்கான முதுகெலும்பாகவும் உள்ளன.
 கடந்த 2016-17ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 31.80 சதவீதம் இந்த நிறுவனங்களின் உற்பத்தியை சார்ந்தே இருந்தது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு 48.10 சதவீதமாக உள்ளது.
 நாடு முழுவதும் சுமார் 3.50 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றின் மூலம் சுமார் 11.10 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 6.70 லட்சம் பதிவு பெற்ற குறுந்தொழில் நிறுவனங்களும், 88,355 சிறு தொழில், 2,306 நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன.
 நாட்டின் பொருளாதாரத்துக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அளித்தல் போன்ற அனைத்துக்கும் ஆணிவேராக விளங்கும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள், கடந்த 2006-ஆம் ஆண்டின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாடு, மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளன.
 இந்த நிறுவனங்கள் உற்பத்தி, சேவை நிறுவனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இயந்திரம், தளவாடங்களின் முதலீட்டின்படி (நிலம், கட்டடங்கள் தவிர்த்து) இந்த வரையறை மேற்கொள்ளப்பட்டது.
 அதன்படி உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் ரூ.25 லட்சத்துக்கும் மேற்படாத முதலீட்டைக் கொண்டிருப்பவை குறு உற்பத்தி நிறுவனங்களாகவும், ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை முதலீட்டைக் கொண்டவை சிறு நிறுவனங்களாகவும், ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை மூலதனம் கொண்டவை நடுத்தர உற்பத்தி நிறுவனங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
 அதேபோல், சேவை சார்ந்த நிறுவனம் என்றால் ரூ.10 லட்சம் வரையிலான மூலதனத்தைக் கொண்டவை குறு உற்பத்தி நிறுவனங்களாகவும், ரூ.10 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை மூலதனம் கொண்டவை சிறு நிறுவனங்களாகவும், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான முதலீட்டைக் கொண்டிருப்பவை நடுத்தர சேவை நிறுவனங்களாகவும் வரையறுக்கப்பட்டுள்ளன.
 இந்த நிலையில் மத்திய அரசு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை மாற்றுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக முயற்சி மேற்கொண்டுள்ளது. முதலீட்டைக் கணக்கில் கொள்ளாமல் அந்த நிறுவனத்தின் விற்று முதலை (டர்ன் ஓவர்) அடிப்படையாகக் கொண்டு இந்த வரையறையை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.
 அந்த வரையறையில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் முறையே ரூ.5 கோடி வரை ஆண்டு விற்று முதல் கொண்டிருப்பவை, ரூ.5 கோடி முதல் ரூ.75 கோடி வரை கொண்டிருப்பவை, ரூ.75 கோடி முதல் முதல் ரூ.250 கோடி வரையிலான விற்று முதல் கொண்டிருப்பவை என மாற்றப்பட உள்ளது.
 அரசின் இந்த முடிவுக்கு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆதரவாக இருந்தாலும், குறு, சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். காலத்துக்கு ஏற்ப வரையறை செய்யப்பட வேண்டியது அவசியம்தான் என்ற கருத்தில் மூன்று விதமான தொழில் அமைப்புகளும் ஒன்றுபட்டாலும், வரையறை செய்யப்படும் விதத்தில் கருத்துகள் மாறுபடுகின்றன.
 விற்றுமுதல் அடிப்படையில் தொழில் நிறுவனங்களுக்கான வரையறை கொண்டு வரப்பட்டால் பல பெரிய நிறுவனங்கள் சிறு நிறுவனங்களின் வரையறைக்குள் வந்துவிடும் அபாயம் உள்ளதாலேயே இதை எதிர்க்கிறோம் என்கிறார் "லகு உத்யோக் பாரதி' அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சுருளிவேல்.
 மத்திய அரசின் இந்த வரையறையால் பெரு நிறுவனங்கள் நடுத்தர நிறுவனங்களாகும். நடுத்தர நிறுவனங்கள் சிறு நிறுவனங்களாகிவிடும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு கிடைக்கக் கூடிய அனைத்து மானியங்களையும் சலுகைகளையும் இன்று பெரு நிறுவனங்களாக இருப்பவர்களும் பெறக் கூடும்.
 சலுகைகளையும், மானியங்களையும் பெறுவதற்குப் போட்டி அதிகரித்தால் அவை கிடைப்பது குறைந்துவிடும் அல்லது கடினமானதாகிவிடும் என்பதே எங்களது அச்சத்துக்கு காரணம்.
 வெளிநாடுகளில் இதுபோன்ற வரையறை இருக்கிறதே என்று கூறி நியாயப்படுத்த தேவையில்லை. வெளிநாடுகளின் தொழில் சூழல் வேறு, இந்தியாவின் சூழல் வேறு. தற்போதைய நிலையில் இந்தியாவில் உள்ள குறுந்தொழில்களுக்கு கூடுதலான சலுகைகள் தேவைப்படுகின்றன. அதற்காக ரூ.25 லட்சம் வரையிலான இயந்திர மூலதனம் கொண்டிருப்பவை குறுந்தொழில்கள் என்ற வரையறையை ரூ.50 லட்சம் வரையிலான மூலதனம் கொண்டவை என்று மாற்றலாம்.
 அதேபோல் சிறு தொழில்களுக்கான மூலதன வரையறையையும் ரூ.25 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை என்றிருப்பதை ரூ.50 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை என மாற்றலாம்' என்றார்.
 ஆனால், குறு நிறுவனங்களுக்கான வரையறையில் கூடுதலான நிறுவனங்கள் வருவதுதான் பெரும்பான்மையினருக்கு பலனளிக்கும் என்கிறார் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் ஆர்.ராமமூர்த்தி. "குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வரையறையை நிர்ணயிக்கும் விஷயத்தில் தற்போது உள்ள முதலீட்டு அளவை அதிகரிப்பது அல்லது விற்றுமுதல் அடிப்படையில் வரையறை செய்வது என இரண்டு வாய்ப்புகள் உள்ளன.
 இதில் எது வரும் என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் கண்டிப்பாக மாற்றம் வேண்டும் என்பது மட்டும் உறுதி. குறுந்தொழில்களுக்கான அதிகபட்ச மூலதனம் ரூ.25 லட்சம் என்றிருப்பதை ரூ.75 லட்சமாகவும், சிறு தொழில்களுக்கான அதிகபட்ச மூலதனத்தை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாகவும் உயர்த்த வேண்டும் என்பதே கொடிசியாவின் கோரிக்கை. இதன்படி, குறுந்தொழில்கள் பிரிவில் அதிகமான தொழில்முனைவோர் இடம் பெறுவார்கள்.
 அரசு விதிகளின்படி சிறு தொழில் நிறுவனங்கள் தொழிற்பேட்டைகளுக்குள் இருந்தால் மட்டுமே சலுகை கிடைக்கும். ஆனால், குறுந்தொழில்கள் எந்தப் பகுதியில் செயல்பட்டாலும் சலுகை கிடைக்கும்.
 குறுந்தொழில்முனைவோர் பிரிவில் அதிகமானோர் வருவது நல்லதுதான். இதனால் போட்டி அதிகரிக்கும் என்றாலும், விண்ணப்பிக்கும் அனைவருக்கே அரசு சலுகைகள் கொடுத்துதானே தீர வேண்டும். இதற்காக அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டி வரும்.
 இதற்கிடையே நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சிறு தொழில்களாக மாறுவார்கள். இது மற்றொரு சவாலாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. எப்படியாக இருந்தாலும் சட்டம் மாறப்போவது உறுதி. அதில் சிறந்ததைக் கேட்டுப் பெற வேண்டியதுதான் புத்திசாலித்தனம்' என்கிறார் ராமமூர்த்தி.
 வரையறையை மாற்ற வேண்டும், ஆனால் அது மூலதன வரையறையாகவே இருக்க வேண்டும் என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ். "குறுந்தொழில்களுக்கான அதிகபட்ச மூலதன வரையறை தற்போது ரூ.25 லட்சமாக உள்ளது. ஆனால் இந்த வரையறைக்குள் இருப்பவர்கள் யாருமே அதற்கான சலுகையைப் பெற முடியவில்லை. ஏனெனில் ஒரு சி.என்.சி. இயந்திரத்தின் விலையே ரூ.25 லட்சமாக உள்ளது. அப்படியிருக்கும்போது, குறுந்தொழிலுக்கான சலுகையைப் பெற ஆளே இல்லாத நிலைதான் உள்ளது. எனவேதான் இயந்திர மூலதன அளவை ரூ.50 லட்சமாக உயர்த்த வேண்டுகிறோம். அதற்கேற்ப மானியம் வழங்கக் கோருகிறோம்.
 விற்றுமுதல் அடிப்படையில் தொழில் நிறுவனங்களை வரையறுப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. பம்ப்செட் தொழில்கள் ஓர் ஆண்டில் 6 மாதங்கள்தான் முழு நேரமும் செயல்படும். தற்போதைய பொருளாதார மந்த நிலையில் ஆட்டோமொபைல் துறை பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. அவர்களின் விற்றுமுதல் இப்போது பூஜ்ஜியமாகவே இருக்கும். எனவே, விற்று முதல் அடிப்படை என்பது வெளிப்புற காலசூழலுக்கு ஏற்ப மாறக் கூடியது. இயந்திர மூலதனத்தின் அடிப்படையில் என்பதுதான் மாறாதது. இயந்திர மூலதனத்தின் அடிப்படையில் வரையறுப்பதே சாலச் சிறந்தது' என்கிறார் ஜேம்ஸ்.


 - க. தங்கராஜா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com