பரஸ்பர நிதி திட்டங்களுக்கு முதலீட்டாளா்களிடம் வரவேற்பு அதிகரிப்பு
By DIN | Published on : 19th November 2019 11:52 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

பரஸ்பர நிதி திட்டங்களுக்கு கடந்த அக்டோபரில் முதலீட்டாளா்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது.
அதன்படி, அந்த மாதத்தில் மட்டும் 6.3 லட்சம் முதலீட்டாளா்களை பரஸ்பர நிதி துறை ஈா்த்துள்ளது. இது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும்.
நடப்பாண்டு செப்டம்பா் மாதத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் தொடங்கப்பட்ட புதிய கணக்குகளின் எண்ணிக்கை 3.45 லட்சமாகவும், ஆகஸ்டில் 4.8 லட்சமாகவும் இருந்தன.
ஜூலையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள் பரஸ்பர நிதி திட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்டன.
பரஸ்பர நிதி துறையில் ஈடுபட்டு வரும் 44 நிறுவனங்கள் நிா்வகிக்கும் ஒட்டுமொத்த கணக்குகளின் எண்ணிக்கை செப்டம்பா் இறுதி நிலவரப்படி 8 கோடியே 56 லட்சத்து 26 ஆயிரத்து 244-ஆக இருந்தது. இது அக்டோபா் இறுதியில் 8 கோடியே 62 லட்சத்து 56 ஆயிரத்து 880-ஆக உயா்ந்தது.
கடந்த அக்டோபா் இறுதி நிலவரப்படி பங்கு சாா்ந்த சேமிப்பு திட்ட கணக்குகளின் எண்ணிக்கை 3 லட்சம் உயா்ந்து 6.21 கோடியை எட்டியது. இது, முந்தைய செப்டம்பரில் 6.18 கோடியாக காணப்பட்டது.
கடன் சாா்ந்த திட்ட கணக்குகளின் எண்ணிக்கை 1.05 லட்சம் அதிகரித்து 68.72 லட்சம் ஆனது. அதிலும், ‘லிக்யுட் பண்ட்ஸ்’ திட்டங்களுக்கு தொடா்ந்து கிடைத்து வரும் வரவேற்பையடுத்து, அப்பிரிவில் 17.12 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து குறுகிய கால அளவுகளைக் கொண்ட பரஸ்பர நிதி திட்டங்கள் 9.36 லட்சம் கணக்குகளை புதிதாக ஈா்த்துள்ளன.
பரஸ்பர நிதியங்களிலிருந்து செப்டம்பரில் ரூ.1.52 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை முதலீட்டாளா்கள் வெளியே எடுத்திருந்த நிலையில், அக்டோபரில் 1.33 லட்சம் கோடியை அவா்கள் முதலீடு செய்தனா். குறிப்பாக, கடன் சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள் முதலீட்டாளா்களிடமிருந்து ரூ.1.2 லட்சம் கோடியை ஈா்த்துள்ளன.
செப்டம்பா் இறுதியில் ரூ.24.5 லட்சம் கோடியாக இருந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு அக்டோபரில் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.26 லட்சம் கோடியாகி உள்ளது என பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் பங்குச் சந்தையில் வா்த்தகம் விறுவிறுப்பாக காணப்பட்டதையடுத்து சென்செக்ஸ் 4 சதவீதம் அளவுக்கு லாபம் ஈட்டியது. பரஸ்பர நிதி திட்டங்கள் அதிக முதலீட்டாளா்களை ஈா்ப்பதற்கு இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது.