பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு: சென்செக்ஸ் 198 புள்ளிகள் இழப்பு

பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு ஐயப்பாடு காரணமாக  இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை வர்த்தகத்திலும் மந்த நிலையே காணப்பட்டது
bse073224
bse073224

பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு ஐயப்பாடு காரணமாக  இந்தியப் பங்குச் சந்தைகளில் தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை வர்த்தகத்திலும் மந்த நிலையே காணப்பட்டது.
சரக்கு மற்றும் சேவை வரி வருவாயில் சரிவு, நிதித் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை ஆகியவற்றின் காரணமாக முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தனர்.
மேலும், ரிசர்வ் வங்கி, வெள்ளிக்கிழமை (அக்.4) அறிவிக்கவுள்ள நிதிக் கொள்கை முடிவுகளை எதிர்பார்த்து முதலீட்டாளர்கள் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டதும் பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்தது.
சர்வதேச வர்த்தகத்தில் அதிலும் குறிப்பாக, அமெரிக்கா-சீனா இடையோன வர்த்தக நடவடிக்கைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை உலக பங்குச் சந்தைகள் மட்டுமின்றி உள்ளூர் சந்தைகளின் ஏற்றத்துக்கும் கைகொடுப்பதாக அமையவில்லை. மும்பை பங்குச் சந்தையில் உலோகத் துறை குறியீட்டெண் 3 சதவீதம் அளவுக்கு மிக மோசமாக வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடர்ந்து, அடிப்படைப் பொருள்கள் 1.78 சதவீதமும், நிதி 0.98 சதவீதமும், வங்கி 0.90 சதவீதமும், தொலைத்தொடர்புத் துறை குறியீட்டெண் 1.48 சதவீதமும் குறைந்தன. நிறுவனங்களைப் பொருத்தவரையில், வேதாந்தா பங்கின் விலை 4.66 சதவீதம் குறைந்தது. அதையடுத்து, டாடா ஸ்டீல், இன்டஸ்இண்ட் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, கோட்டக் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்யுஎல், பார்தி ஏர்டெல் பங்குகளின் விலை 3.36 சதவீதம் சரிந்தது. 
அதேசமயம், தொடர்ந்து ஐந்து நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த யெஸ் வங்கி பங்கின் விலை வியாழக்கிழமை 33 சதவீதம் உயர்ந்தது. இதற்கு,  நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளதாக வெளிவந்த தகவலே முக்கிய காரணம். 
இதைத் தவிர, டாடா மோட்டார்ஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக், பவர்கிரிட், மஹிந்திரா & மஹிந்திரா பங்குகளின் விலையும் 6.16 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 198 புள்ளிகள் சரிந்து 38,106 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 45 புள்ளிகள் குறைந்து 11,314 புள்ளிகளாக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com