சரிவை சந்திக்கும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம்: திருப்பூரில் ரூ.5,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளதால் உள்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
சரிவை சந்திக்கும் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகம்: திருப்பூரில் ரூ.5,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம்

திருப்பூரில் உற்பத்தி செய்யப்பட்டு சுமார் ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளதால் உள்நாட்டு வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது. இது தொழில் துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொல்கத்தா, லூதியானா, தில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து அதிக அளவில் பின்னலாடை உற்பத்தி செய்யப்படுகின்றன என்றபோதிலும், பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்திய பின்னலாடைகளில் சரிபாதி உற்பத்தி திருப்பூரில்தான் நடைபெறுகிறது. சர்வதேச அளவில் பின்னலாடை உற்பத்தியில் திருப்பூரின் பங்கு மட்டும் 3.5 சதவீதம். திருப்பூரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 10 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிலில் நேரடியாக 4 லட்சம் பேர், மறைமுகமாக 6 லட்சம் பேர் என சுமார் 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்றுமதிக்கு நிகராக உள்நாட்டு வர்த்தகம்

திருப்பூரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே வேளையில் ஏற்றுமதிக்கு நிகராக வெளி மாநிலங்களுக்கும் திருப்பூரில் இருந்து பின்னலாடைகள் அனுப்பப்படுகின்றன. ஒருசில வேளைகளில் ஏற்றுமதி வர்த்தகம் குறையும்போது, உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்து காணப்பட்டது. இதில், கடந்த 2018-19-ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ. 25 ஆயிரம் கோடி, உள்நாட்டு வர்த்தகம் ரூ. 25 ஆயிரம் கோடி என மொத்தம் ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்றுமதியைவிட உள்நாட்டு வர்த்தகம் அதிகரிப்பு

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தின் (டீமா) தலைவர் எம்.பி.முத்துரத்தினம் கூறியதாவது: திருப்பூரைப் பொருத்தவரையில் 2010-ஆம் ஆண்டில் உள்நாட்டு வர்த்தகம் ரூ. 10 ஆயிரம் கோடியாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உயர்ந்து 2016, 2017 ஆம் ஆண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, 2018-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்ற பிரச்னைகளின்போது ஒரு சில உற்பத்தியாளர்கள் உள்நாட்டு வர்த்தகத்துக்கு மாறியுள்ளதாகும்.

பின்னலாடைத் தொழிலில் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் குறையும்போது உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்து வந்தது. முதலில் உள்ளாடைகள் மற்றுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தநிலையில் தற்போது நாகரிக ஆடைகள் (பேஷன் வேர்) உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், பெண்கள், குழந்தைகளுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு பெரிய ஷோரூம்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. உள்நாட்டு வர்த்தகத்தை நம்பி மட்டும் திருப்பூரில் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த தீபாவளி முதலே உள்நாட்டு வர்த்தகம் ஓரளவு குறையத் தொடங்கியது. உள்நாட்டு வர்த்தகத்தைப் பொருத்தவரையில் அதிகமாக உற்பத்தி செய்து தேக்கி வைத்துக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் வடமாநிலங்களில் பெய்த மழை வெள்ளம் காரணமாக சுமார் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன. திருப்பூர் உள்நாட்டு வர்த்தகத்தின் சந்தைகளாக உள்ள காதர்பேட்டை, ராயபுரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு வரும் வெளி மாநில வர்த்தகர்களின் எண்ணிக்கையும் குறைந்தே உள்ளது.

திருப்பூரில் தீபாவளிக்கு வரும் வர்த்தகர்களின் எண்ணிக்கை இதுவரை 10 சதவீதத்தைக் கூட தாண்டவில்லை. இதையும் மீறி தேக்கடைந்த ஆடைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் நஷ்டத்துக்கு வர்த்தகம் செய்யும் நிலைதான். இந்த நிலைமையால், உள்நாட்டு சிறு உற்பத்தியாளர்களும், சந்தை வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது சீராக மேலும் சில மாதங்கள் தேவைப்படும் என்றார்.

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்களான மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், பிகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக அளவில் பின்னலாடைகள் வர்த்தகம் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்தப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகப் பெய்த மழையால் அனுப்பிய பின்னலாடைகளுக்கான பணம் வந்தடையவில்லை.

மேலும், உற்பத்தி செய்யப்பட்டுள்ள சரக்குகளை அனுப்ப முடியாததால் பல லட்சம் மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன. இதுதவிர, வர்த்தகம் முடிந்த சரக்குகளுக்குச் செலுத்திய ஜிஎஸ்டி வரி திரும்பிக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மட்டும் மொத்தமாக 2 ஆண்டுகளில் சுமார் ரூ. 500 கோடிக்கு மேல் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வரவேண்டியுள்ளது. ஆகவே, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு நிறுவன உற்பத்தியாளர்கள் செலுத்திய ஜி.எஸ்.டி.வரியை விரைவில் திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வடமாநில மழையால் ரூ.5ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கம்

உள்நாட்டு வர்த்தகத்தைப் பொருத்தவரையில் உற்பத்தியாளர்களே அதிகமாக முதலீடு செய்து பின்னலாடைகளைத் தேக்கி வைத்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகப் பெய்த தொடர் மழையால் மட்டும் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளன.

உற்பத்தி செய்யப்பட்ட பின்னலாடைகளை வாங்குவதற்கு வர்த்தகர்கள் வராததால் சரக்குகள் உற்பத்தியாளர்களிடமே தேக்கமடைந்துள்ளன.

தீபாவளி நெருங்குவதால் உற்பத்தியாளர்களுக்கு சிக்கல்

வர்த்தகம் சுணக்கமடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தீபாளிக்கு வெறும் 20 நாள்களே உள்ள நிலையில் வெளி மாநிலங்களில் இருந்து வர்த்தகர்கள் வந்தாலும் தேக்கமடைந்துள்ள பின்னலாடைகளை குறைவான விலைக்கு வாங்கிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, திருப்பூரைப் பொருத்தவரையில் தற்போது உள்நாட்டு வர்த்தகம் சரிந்தே காணப்படுகிறது.
 
 - ஆர். தர்மலிங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com