உலகத் தரம் வாய்ந்த பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும் பொன்னேரி

நீண்ட காலமாகவே மாநிலத்தின் முக்கிய தொழில் கேந்திரமாக வட சென்னைப் பகுதி இருந்து வந்துள்ளது.
உலகத் தரம் வாய்ந்த பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும் பொன்னேரி

நீண்ட காலமாகவே மாநிலத்தின் முக்கிய தொழில் கேந்திரமாக வட சென்னைப் பகுதி இருந்து வந்துள்ளது. பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை, தண்டையார்பேட்டையில் மெட்டல் பாக்ஸ், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரயில்வே யார்டு, மணலியில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, சென்னை உரத் தொழிற்சாலை, திருவொற்றியூரில் எம்.ஆர்.எஃப். டயர் தொழிற்சாலை, கிளாஸ் ஃபேக்டரி, என்ஃபீல்டு, கார்பரண்டம், எண்ணூரில் அசோக் லேலண்ட் நிறுவனம், எண்ணூர் ஃபவுண்டரீஸ், கோத்தாரி உரத் தொழிற்சாலை என வடசென்னையில் எங்கு பார்த்தாலும் கனரக தொழிற்சாலைகள் நிரம்பி வழிகின்றன.
 இது தவிர ஏராளமான இரும்பு தொழிற்சாலைகள், எண்ணூர், வல்லூர், வடசென்னை உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் தமிழகத்தின் முக்கிய எரிசக்தி உற்பத்தி மண்டலமாக இருந்து வருகிறது.
 இந்நிலையில் வடசென்னையின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப் பூண்டி உள்ளிட்ட பகுதிகள் எதிர்காலத்தில் பெறும் வளர்ச்சி எவ்வாறாக இருக்கும்?
 12 ஆயிரம் ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த புதிய நகரம்
 தில்லியில் ஒரு புதுதில்லி, மும்பையில் ஒரு நவி மும்பை (புதிய மும்பை) இருப்பதுபோல சென்னையிலும் புதிய சென்னை ஒன்று உருவாகுமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. தமிழக அரசு இதற்கான முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டாலும், அவை போதுமான இலக்கை எட்டவில்லை.
 உதாரணமாக, மணலி புதுநகர் துணை நகரத் திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும் இன்றும் அந்த திட்டம் சுமார் 25 சதவீத இலக்கைக் கூட எட்டவில்லை. காரணம் துணை நகரங்கள் என்பது வெறும் குடியிருப்புத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டதுதான். மணலி புதுநகரிலிருந்து சற்று வேறுபட்ட நிலையில் அமைக்கப்பட்ட திட்டம்தான் மறைமலைநகர்.
 இங்கு தொழிற்சாலைகளுக்காக நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால் தற்போது பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில்தான் பா.ஜ.க. கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நூறு பொலிவுறு நகரங்களில் ஒன்றாக (ஸ்மார்ட் சிட்டி) பொன்னேரி அறிவிக்கப்பட்டது.
 பொன்னேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட மாஸ்டர் பிளான்படி சுமார் 12 ஆயிரம் ஏக்கரில் புதிய நகர் உருவாக்கப்படும். இதில் சுமார் 4,500 ஏக்கர் அரசு நிலமாகவும், சுமார் 2,700 ஏக்கர் துறைமுக தொழில்கள் சார்ந்த பகுதியாகவும், சுமார் 5,200 ஏக்கர் கடலோர ஒழுங்காற்று மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியாகவும் இருக்கும்.
 இதன்படி மீஞ்சூர் முதல் கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரியும் திட்டம்தான் பொன்னேரி பொலிவுறு நகர திட்டம் ஆகும்.
 இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது தொடக்கத்தில் சுமார் 5 லட்சம் பேர் வசிக்கும் வகையிலும், அடுத்த இருபது ஆண்டுகளில் சுமார் 80 லட்சம் பேர் வசிக்கும் வகையிலும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

பொருளாதார மண்டலமாக உருவெடுக்கும் பொன்னேரி
 பொலிவுறு நகர திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் அரசு அறிவித்தபடி இத்திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் கூட பொன்னேரி பொருளாதார மண்டலமாக உருவெடுப்பதில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
 பொன்னேரிக்கு மிக அருகேயுள்ள காட்டுப்பள்ளியில், அதானி, எண்ணூர் காமராஜர் என இரண்டு சர்வதேச துறைமுகங்கள் ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இவற்றைச் சார்ந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்கள் இப்பகுதியில் உள்ளன.
 மஹிந்திரா குழுமம், ஜப்பான் நாட்டின் சுமிட்டோமோவுடன் இணைந்து பொன்னேரியில் சுமார் ரூ. 950 கோடி செலவில் தொழிற்பூங்காவை அமைத்து வருகிறது. கும்மிடிப்பூண்டி பகுதியில் ஏற்கெனவே சிப்காட் அமைக்கப்பட்டு சிறப்புடன் இயங்கி வருகிறது.
 இந்நிலையில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை விசாகப்பட்டினம் ஆகிய தொழில்வழிச் சாலைகள் பொன்னேரியில் தொடங்குகிறது. ஏற்கெனவே புழல்- தாம்பரம் முதல் வெளிவட்டச் சாலை, மீஞ்சூர்-வண்டலூர் இரண்டாம் வெளிவட்டச் சாலை ஆகியவை பொன்னேரியுடன் இணைக்கின்றன.
 இதன் மூலம் தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து நாட்டின் எந்தப் பகுதிக்கும் தங்கு தடையின்றிச் செல்லும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை விரைவில் பொன்னேரி பெற உள்ளது.
 இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறிந்துதான் ஆந்திர மாநிலத்தின் முதல்வர்களாக இருந்த சந்திரபாபு நாயுடு, ராஜசேகர ரெட்டி ஆகியோர் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக எல்லையையொட்டி கூடூரில் ஸ்ரீ சிட்டி என்ற தொழில் நகரத்தை உருவாக்கினர்.
 இந்நிலையில் ஸ்ரீ சிட்டியை விட பலமடங்கு வளர்ச்சியடைந்த புதிய சென்னை நகரமாக பொன்னேரி உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.


 - முகவை சிவக்குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com