பண்டிகை கால கடன்: சலுகைகளை வாரி இறைக்கும் வங்கிகள்...

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகின்றன.
பண்டிகை கால கடன்: சலுகைகளை வாரி இறைக்கும் வங்கிகள்...

பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பல்வேறு சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு அசத்தி வருகின்றன.
 பொருளாதார மந்த நிலையை அகற்றி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வரி குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசும், "ரெப்போ' வட்டி குறைப்பை ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் பொருள்கள் வாங்கும் திறனை அதிகரிக்கும் வகையில் தேவையான அளவு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வங்கிகளை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வலியுறுத்தியுள்ளன.
 இன்னும் ஒரு படி மேலே சென்று, "ரெப்போ' வட்டி குறைப்பின் பலன்களை பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக அளிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ஆனாலும், இன்னும் சில வங்கிகள் அதற்கான முன்முயற்சியைத் தொடங்கியதாக தெரியவில்லை.
 வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் அதிக அளவில் கடன் வசதிகளை செய்து தரும்போது அவர்களிடம் பணப்புழக்கம் பெருகி வாங்கும் சக்தியை அதிகரிக்கும். அதன் சுழற்ச்சியாக, பொருளுக்கான தேவை உயர்ந்து, உற்பத்தி நடவடிக்கைகள் சூடுபிடிக்கும் என்பதுடன் வேலைவாய்ப்புகளும் பெருகும். அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்பது மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் கணிப்பு.
 இந்த நிலையில், பண்டிகை காலம் தொடங்கியுள்ளதையடுத்து, பல நகரங்களில் கடன் திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் பணிகளை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கிகள் கார் கடனை வாடிக்கையாளர்களுக்கு ""பூஜ்யம் கட்டணத்தில்'' வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளன. தங்களது வங்கிகளில் சம்பளக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தனிநபர் கடனை எந்தவித ஆவணங்களும் இன்றி வழங்குவதாக எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கிகள் அறிவித்துள்ளன.
 அதேபோன்று, ""டீமேட்'' வடிவில் பங்குகளை வைத்திருக்கும் பரஸ்பர நிதி முதலீட்டாளர்களுக்கு டிஜிட்டல் லோன் என்ற சிறப்பு சலுகையை ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதைத்தவிர, வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் சில வகையான கிரெடிட் கார்டுகளுக்கு எதிராக கடன் வழங்கும் திட்டத்தையும் ஹெச்டிஎஃப்சி அறிவித்துள்ளது.
 வங்கிகள் சில்லறை மற்றும் சிறிய வர்த்தக கடன்களுக்கான வட்டி விகிதங்களை அக்டோபர் 1-ஆம் தேதி முதல் "ரெப்போ' வட்டி விகிதத்துக்கு இணையாக குறைக்க வேண்டியது கட்டாயம் என ரிசர்வ் வங்கி ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதன்பயனாக, பெரும்பாலான வங்கிகள் கடனுக்கான தங்களது வட்டி விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. மேலும் சில வங்கிகள் வட்டி தள்ளுபடி சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.
 அந்த வகையில், எஸ்பிஐ வங்கி, டிஜிட்டல், வலைதளம், யோநோ செயலி மூலம் கார் கடன் கோரி விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 0.25 சதவீத வட்டி சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதே சலுகையை, பேங்க் ஆஃப் பரோடாவும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
 ஹெச்டிஎஃப்சி வங்கி, ரூ. 5 லட்சத்துக்கும் மேல் தங்க நகைக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இதே சதவீத அளவுக்கு வட்டி சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
 நுகர்வோர் சாதனங்களை வாங்க நீண்டகாலம் திட்டமிட்டிருந்தவர்களுக்கு தற்போது நல்ல செய்தி. கிரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வட்டி இல்லா கடனைப் பெற்று அதனை எளிய தவணை முறையில் செலுத்தலாம் என வங்கிகள் அறிவித்துள்ளன. அதுமட்டுமின்றி, குறிப்பிட்ட சில பொருள்களை வாங்குவோருக்கு கூடுதல் தள்ளுபடி அளிப்பதுடன், கேஷ்-பேக் மற்றும் கிஃப்ட் வவுச்சர் உள்ளிட்ட சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு வாடிக்கையாளர்களை வங்கிகள் வசப்படுத்தி வருகின்றன. குறிப்பிட்ட சில மின்னணு தயாரிப்புகளுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 15 சதவீதம் வரை கேஷ்-பேக் சலுகையை அறிவித்துள்ளது.
 இருசக்கர வாகன கடன் மற்றும் வீட்டுக் கடன் பெறுவோர் அரசு பணியாளராக இருந்தால் அவர்களுக்கு பரிசீலனை கட்டணத்திலிருந்து முழு விலக்களிப்பதாக ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகள் அறிவித்துள்ளன. வீட்டுக் கடன் பெறும் நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் பரிசீலனை கட்டணத்தில் 50 சதவீதம் வரை தள்ளுபடி தருகின்றன வங்கிகள்.

 இதுபோன்ற சலுகை அறிவிப்புகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், வங்கிகள் சத்தமின்றி சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்து வருவது வாடிக்கையாளர்களிடையே மனக் கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கு வங்கிகள் 4 சதவீத வட்டியை வழங்கி வந்தன. ஆனால், பெரும்பாலான வங்கிகள் குறைந்த மதிப்புடைய சேமிப்புகளுக்கு அந்த வட்டி விகிதத்தை 3.5 சதவீதமாக நிர்ணயித்தன. ஆனால் , இன்று அந்த வட்டி விகிதத்தையும் வங்கிகள் குறைக்கத் தொடங்கி விட்டன. அதற்கு, எஸ்பிஐ பிள்ளையார் சுழி போட்டுவிட்டது. சேமிப்பு கணக்கில் ரூ.1 லட்சம் வரை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தை 3.50 சதவீதத்திலிருந்து 3.25 சதவீதமாக எஸ்பிஐ குறைத்துள்ளது. இது, நவம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அந்த வங்கி தெரிவித்துள்ளது.
 சேமிப்பு கணக்கு மட்டுமின்றி, குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களையும் 0.10 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை எஸ்பிஐ குறைத்துள்ளது. வட்டி வருவாயை மட்டுமே நம்பி அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 4 கோடி மூத்த குடிமக்களுக்கு இந்த அறிவிப்பு பேரிடியாகவே இருக்கும்.
 நாட்டின் மிகப்பெரிய வங்கியாக விளங்கும் எஸ்பிஐ-யை பின்பற்றி இதர வங்கிகளும் வட்டி குறைப்பில் ஈடுபடும்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இன்னும் கணிசமாக அதிகரிக்கும் என்பதே தற்போதைய கவலை!
 -அ.ராஜன் பழனிக்குமார்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com