முட்டை உற்பத்தி அதிகரிப்பால் திணறும் கோழிப்பண்ணைத் தொழில்

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பொருளாகக் கூறப்படுவது பாலும், முட்டையுமே. விலை உயர்வு கேட்டு போராடிய பால் உற்பத்தியாளர்களுக்கு, தமிழக அரசு கொள்முதல் விலையை அதிகரித்தபோதும்,
முட்டை உற்பத்தி அதிகரிப்பால் திணறும் கோழிப்பண்ணைத் தொழில்

உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பொருளாகக் கூறப்படுவது பாலும், முட்டையுமே. விலை உயர்வு கேட்டு போராடிய பால் உற்பத்தியாளர்களுக்கு, தமிழக அரசு கொள்முதல் விலையை அதிகரித்தபோதும், தீவன விலையேற்றத்துக்குத் தகுந்த விலை உயர்வு இல்லை என்ற குறை அவர்களிடத்தில் உள்ளது.
 அதே தீவனப் பிரச்னை முட்டை உற்பத்தியாளர்களிடமும் ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகளாக கோழிப்பண்ணைத் தொழிலில் எவ்வித பிரச்னையையும் சந்திக்காத பண்ணையாளர்கள், நிகழாண்டில் தீவனங்கள் கிடைக்காமலும், உற்பத்திக்கு மேலாக அவற்றின் விலையேற்றம் இருப்பதாலும், மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
 அரிசி, குருணையைப் போட்டு வளர்க்கும் வீட்டுக் கோழிகளாக இருந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், லட்சக்கணக்கான கோழிகளை ஒரே இடத்தில் வைத்து, அவை தினமும் முட்டையிடும் வகையில் அதற்கான சத்து மிகுந்த தீவனங்களை அளித்தால் மட்டுமே எதிர்பார்த்த உற்பத்தியையும், தரத்தையும், லாபத்தையும் பண்ணையாளர்களால் ஈட்ட முடியும்.
 30 ஆயிரம் கோழிப் பண்ணைகள்: முட்டை உற்பத்தியும் வேளாண் சார்ந்த தொழிலே. ஹைதராபாத், விஜயவாடா, பார்வாலா, பெங்களூரு, மைசூரு, மும்பை, ஹோஸ்பெட், தில்லி, கொல்கத்தா, நாமக்கல் உள்பட நாடு முழுவதும் 30 ஆயிரம் கோழிப் பண்ணைகளில் 200 கோடிக்கும் மேலாக முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகளை விற்பனை செய்வதற்காக, தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு 23 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இக் குழு நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையிலேயே பண்ணையாளர்கள் வியாபாரிகளிடம் முட்டையை விற்பனை செய்வர். தற்போதைய சூழலில் முட்டை விலை நிர்ணயம் அனைத்து மண்டலங்களிலும் தினசரி அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 நாமக்கல் மண்டலம்: தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களுக்கும், நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1,100 கோழிப் பண்ணைகளில் உள்ள ஐந்து கோடி கோழிகளில் இருந்து தினமும் உற்பத்தியாகும் 4 கோடி முட்டைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. இவை மட்டுமின்றி, ஓரிரு வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. ஆரம்பத்தில் அதிகளவில் ஏற்றுமதி செய்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு கேரளம், கர்நாடகப் பகுதிகளில் பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நாமக்கல் மண்டலத்தில் இருந்து முட்டைகள் ஏற்றுமதியாவது பெருமளவில் தடைபட்டுள்ளது.
 உற்பத்தி அதிகரிப்பால் தவிக்கும் பண்ணையாளர்கள்: தீவனம் விலை குறைவாக இருக்கும்போது முட்டை விலை அதிகரித்துக் காணப்படும். தீவனம் விலையேறும்போது, முட்டை விலை சரிந்து காணப்படும் என்ற நிலை உள்ளது. ஆனால், நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழில் உருவான 50 ஆண்டுகளில், நிகழாண்டில் தீவனங்களின் விலையேற்றம் அதிகரிக்க, முட்டை விலை கிடுகிடுவென சரிந்து வருகிறது. நாமக்கல் மட்டுமன்றி, பிற மாநிலங்களிலும் கோழிப் பண்ணைகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விற்பனைக்காக முட்டைகளை அனுப்பிய இடங்களில் பலர் சொந்தமாக பண்ணைகள் அமைத்து, முட்டையை விற்கின்றனர். இது பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பொருந்தும். நாமக்கல்லில் இருந்து ஈரான், உக்ரைன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியான நிலையில், தற்போது அங்கேயே உற்பத்தி அதிகம் நடைபெறுவதால், முட்டையை அனுப்ப முடியாத நிலை உள்ளது.
 தீவனங்கள் விலை கிடுகிடு: கோழிகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரம் கிலோ தானியம் மற்றும் பிண்ணாக்கு வகைகளை தீவனமாக இட வேண்டும். குறிப்பாக, மக்காச் சோளம், கோதுமை, கம்பு உள்ளிட்டவை 550 கிலோ என்ற அடிப்படையிலும், சோயாப் பிண்ணாக்கு, சூரியகாந்தி பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு, பொடிகற்கள், தவிடு உள்ளிட்டவை சேர்ந்து 450 கிலோ என்ற அடிப்படையிலும் தீவனமாக இட வேண்டும். இவ்வாறான தீவனங்கள் அளித்தால்தான் எதிர்பார்க்கும் முட்டை உற்பத்தியைப் பெற முடியும். கடந்த ஆண்டு, 75 கிலோ எடை கொண்ட மக்காச்சோளம் ரூ.1,360-ஆக இருந்தது. நிகழாண்டில், ரூ.1,960-ஆக உள்ளது. ரூ.600 அதிகரித்துள்ளது. ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வீதம் அதிகப்படியான செலவாகிறது. ஆனால், முட்டை விலை அதிலிருந்து குறைவாக இருக்கிறது என்பது பண்ணையாளர்களின் கருத்தாக உள்ளது.
 ஆந்திரம், கர்நாடகத்தில் மக்காச்சோளம் அதிகம் விளைந்த நிலையில், வறட்சியால் அங்கு உற்பத்தி சரிந்துள்ளது. இதனால், பிகார் மாநிலத்தில் இருந்து மக்காச்சோளத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் ஆளாகியுள்ளனர். பெரிய பண்ணையாளர்கள் வாங்கி வந்து பயன்படுத்தும் சூழலில், சிறிய பண்ணையாளர்கள் கடன் வாங்கி தீவனத்தை கொள்முதல் செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்வதற்கான வரி அதிகம் உள்ளதால், அவற்றை வாங்குவதற்கு பண்ணையாளர்கள் தயங்குங்கின்றனர்.

தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம்: வியாபாரிகள், புரோக்கர்கள் கேட்கும் விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் நிலையில் நாமக்கல் பண்ணையாளர்கள் இருக்கின்றனர். தேங்கியிருக்கும் முட்டைகளை எடுத்துச் சென்றால் போதும் என அவர்களிடத்தில் கெஞ்சி வரவழைக்கும் நிலை உள்ளது. அதற்குரிய பணமும் முழுமையாகக் கொடுப்பதில்லை. தீவனத்துக்குப் பணம் வேண்டுமே என முட்டையை அனுப்புகின்றனர். கர்நாடகத்தில் பணத்தை முழுமையாகக் கொடுத்தால்தான் முட்டை வழங்கப்படும் என அங்குள்ள பண்ணையாளர்கள் கறாராகச் சொல்கின்றனர். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை.
 தீவனங்கள் விலையேற்றத்தால் கோழிப் பண்ணைத் தொழில் பாதிப்படையக் கூடாது என்பதற்காக, பிகாரில் இருந்து மக்காச் சோளமும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து கோதுமையும் 50 ஆயிரம் டன் என்ற அளவில் கோடிக்கணக்கில் முன்பணம் செலுத்தி, ரயில் மூலமாகக் கொண்டு வந்து வழங்குகிறோம். கடந்த ஆண்டு ஒரு கிலோ மக்காச் சோளம் ரூ.18-க்கு விற்ற நிலையில், தற்போது ரூ.27-க்கு விற்கிறது. இதனால் ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வீதம் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பண்ணையாளர்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இதில் பாதிக்கப்படுவது அதிகளவில் சிறிய பண்ணையாளர்கள்தான். செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் முட்டை விற்கும் பண்ணையாளர்கள் ரசீது போட்டு விற்பனை செய்யுங்கள். ரூ.3.50 விலை என்றால் அதில் இருந்து ஒரு காசு கூட குறைக்காமல் அனைத்து பண்ணையாளர்களும் ஒற்றுமையாக விற்க முன்வாருங்கள். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு விலையைக் குறைத்தால், 6 மாதங்களில் கோழிப்பண்ணைத் தொழில் அழிவுப் பாதைக்குச் சென்றுவிடும் என்றார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.) நாமக்கல் மண்டலத் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ்: பிற மண்டலங்களின் முட்டை விலை அடிப்படையில், நாமக்கல் மண்டலத்திலும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தனியாக சங்கம் வைத்திருப்பவர்கள், விலையை நிர்ணயிக்கிறார்கள் என்றால், அந்த விலைக்கே விற்க வேண்டியது தானே? என்.இ.சி.சி.யை ஏன் குறை சொல்ல வேண்டும்? தீவனங்கள் விலையேற்றம் என்பது இன்னும் இரண்டு மாதங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அதன்பின் எல்லாம் சரியாகிவிடும். இறக்குமதி வரி அதிகம் இருப்பதால் வெளிநாடுகளில் இருந்து மக்காச் சோளம் இறக்குமதி செய்ய முடியாது. அதன் விலை, பிற மாநில விலையைக் காட்டிலும் அதிகம். தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டியினர் பிகாரில் இருந்து ரயிலில் கொண்டு வந்து விநியோகிப்பதை வரவேற்கிறேன் என்றார்.

நாமக்கல் மண்டல முட்டை உற்பத்தியாளர்கள் சங்க இணைச் செயலாளர் தர்மலிங்கம்: பிற மாநிலங்களில், பண்ணையாளர் நிர்ணயம் செய்யும் விலையைத்தான் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவும் நிர்ணயிக்கிறது. இங்கு தான் வேறுபாடு உள்ளது. ஒரு முட்டை ரூ.3.50 என்றால், வியாபாரி ரூ.3.30-க்கு வாங்குகிறார். கடைகளில் விற்பனைக்கு செல்லும்போது ரூ.4-க்கு போகிறது. இதனால், இரண்டு முட்டை வாங்கலாம் என்று செல்லும் நுகர்வோரும், விலையைப் பார்த்து ஒரு முட்டையோடு நிறுத்திக் கொள்கிறார். இதனால், பண்ணையாளர்கள் தான் நஷ்டப்படுகின்றனர். பண்ணையாளர் வியாபாரிக்கு கொடுக்கும் ரூ.3.30 என்ற விலையை என்.இ.சி.சி. நிர்ணயித்துவிட்டால் எவ்வித பிரச்னையுமில்லை. இதுபோன்ற சிக்கல்களால் தான் நாமக்கல் மண்டலத்தில் கோழிப் பண்ணைத் தொழில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வருகிறது என்றார்.
 
 காலியாகும் கோழிக் கூண்டுகள்

நிகழாண்டில் ஏற்பட்ட தீவனங்கள் விலையேற்றத்தால் கூடுதலாக கோழிகளை வளர்க்க முடியாத சூழல் உள்ளது. இதனால் வயதான கோழிகளை இறைச்சிக்குக் கொடுத்துவிட்டு, குஞ்சுகளை விடாமல் கூண்டுகளைக் காலியாக வைத்திருக்கின்றனர். உற்பத்தி செய்த முட்டைகளை, தாங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு வியாபாரிகள் வாங்க மறுப்பதால், தேக்கமடைவதைக் காட்டிலும் விற்றுத் தீர்ந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ரூ.4.50-க்கு விற்பனை செய்ய வேண்டிய முட்டையை ரூ.3.50-க்கு மைனஸ் விலையில் கொடுக்க வேண்டிய கட்டாயம் பண்ணையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் 6 மாதங்களில் பண்ணைத் தொழில் அழிந்து போகும் என்ற குமுறலும் அவர்களிடையே உள்ளது.
 
 - எம்.மாரியப்பன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com