சுடச்சுட

  
  etf


  தங்க ஈ.டி.எஃப். திட்டங்கள் சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ரூ.145.29 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வரும் அதேவேளையில், தங்கத்தின் விலை அதிகபட்ச ஏற்றத்தை கண்டு வருகிறது. இதையடுத்து, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு மேற்கொள்வதையே அதிக பாதுகாப்பானதாக கருத தொடங்கியுள்ளனர்.
  அதனை எடுத்துக் காட்டும் விதத்திலேயே கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தங்க ஈ.டி.எஃப். திட்டங்கள் ரூ.145.29 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளன. கடந்த ஒன்பது மாதங்களில் இத்திட்டங்களில் இந்த அளவுக்கு முதலீடு மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறை.
  இறுதியாக, கடந்தாண்டு நவம்பரில் இத்தகைய திட்டங்களில் ரூ.10 கோடி முதலீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, தங்க ஈ.டி.எஃப். திட்டங்களிலிருந்து முதலீடு வெளியே எடுக்கப்பட்டு வந்தது.
  அதன்படி,  நடப்பாண்டு ஜூலையில் ரூ.17.66 கோடியும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.45 கோடியும் ஈ.டி.எஃப். திட்டங்களிலிருந்து வெளியேறியுள்ளது.
  கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பரில் தங்க ஈ.டி.எஃப். திட்டங்களில் ரூ.474 கோடி முதலீடு மேற்கொள்ளப்பட்டதே இதுவரையில் சாதனை அளவாக கருதப்படுகிறது.
  தங்க நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஜூலை இறுதியில் ரூ.5,080 கோடியாக இருந்தது. தங்கம் சார்ந்த திட்டங்களுக்கு தற்போது வரவேற்பு பெருகி வருவதையடுத்து  தங்க நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி ரூ.5,799 கோடியாக ஏற்றம் கண்டுள்ளது என பரஸ்பர நிதிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
  தங்க ஈ.டி.எஃப். திட்டங்களுடன் ஒப்பிடும்போது பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்கள் அதிக வருவாய் தருவதையடுத்து சில்லறை முதலீட்டாளர்களின் கவனம்  கடந்த சில ஆண்டுகளாக அத்தகைய திட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
  அதன் எதிரொலியாக, தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக, கடந்த 2018ஆம் ஆண்டிலும் தங்க ஈ.டி.எஃப் திட்டங்களிலிருந்து முதலீட்டாளர்கள் ரூ.571 கோடியை வெளியே எடுத்தனர். இது, 2017இல் ரூ.730 கோடியாகவும், 2016இல் ரூ.942 கோடியாகவும், 2015இல் ரூ.891 கோடியாகவும், 2014இல் ரூ.1,651 கோடியாகவும், 2013இல் ரூ.1,815 கோடியாகவும் காணப்பட்டது.
  கடந்த 2012இல் ஈ.டி.எஃப். திட்டங்கள் ரூ.1,826 கோடி முதலீட்டை ஈர்த்தன. அதன் பிறகு, இத்தகைய திட்டங்களுக்கு வரவேற்பானது இறங்குமுகமாகவே காணப்படுகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai