பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு

சாதகமற்ற பொருளாதார புள்ளிவிவரங்களால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 470 புள்ளிகள் குறைந்ததுடன், நிஃப்டி ஏழு மாதங்களில்
பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிவு


சாதகமற்ற பொருளாதார புள்ளிவிவரங்களால் பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 470 புள்ளிகள் குறைந்ததுடன், நிஃப்டி ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது.
வரி வசூலில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலையால் அதன் இலக்கை எட்ட வாய்ப்பில்லை என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவியது. 
பொருளாதார மந்த நிலை நீண்ட காலம் நீடிக்கும் என்ற எண்ணத்தால் முதலீட்டாளர்கள் ஆபத்தான சவால்களை தவிர்க்கும் விதத்தில் பங்குச் சந்தையில் செயல்பட்டனர். 
அமெரிக்க மத்திய வங்கி பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கும் வகையில்,  வட்டி விகிதத்தை மேலும்     குறைப்பதில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் என்ற நிலைப்பாடு சர்வதேச முதலீட்டாளர்களிடையே எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, அந்நிய முதலீடுகளும் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து அதிக அளவில் வெளியேறின.
சாதகமற்ற உள்நாட்டு விவகாரங்கள் தவிர,  இதுபோன்ற சர்வதேச நிலவரங்களும் இந்தியப் பங்குச் சந்தைகளின் பெரும் பின்னடைவுக்கு காரணமாகியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மும்பை பங்குச் சந்தையில், எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு, வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், மருந்து, தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 2 சதவீதம் வரை குறைந்தன. தொலைத்தொடர்புத் துறை குறியீட்டெண் 0.17 சதவீதம் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள, யெஸ் வங்கி பங்கின் விலை 15.54 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இதைத் தவிர,  இன்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 3.59 சதவீதம் வரை சரிந்தன.
மேலும், டாடா ஸ்டீல், மாருதி, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டெக் மஹிந்திரா, ஓஎன்ஜிசி, வேதாந்தா, பஜாஜ் பைனான்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், டிசிஎஸ் பங்குகளும் 3.66 சதவீதம் வரை விலை குறைந்தன.
 அதேசமயம், டாடா மோட்டார்ஸ், எச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகளின் விலை மட்டும் 1.97 சதவீதம் வரை உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 470 புள்ளிகள் சரிந்து 36,093 புள்ளிகளாக நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 135 புள்ளிகள் குறைந்து 10,704 புள்ளிகளாக நிலைத்தது. 
நடப்பாண்டு பிப்ரவரி 19-ஆம் தேதிக்குப் பிறகு நிஃப்டி இந்த அளவுக்கு குறைந்தது இதுவே முதல்முறை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com