கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் நிறுவன வரிச்சலுகை: எதிர்பார்ப்பில் எம்.எஸ்.எம்.இ.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவானதே.
கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் நிறுவன வரிச்சலுகை: எதிர்பார்ப்பில் எம்.எஸ்.எம்.இ.

தற்போது பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் துறை மீதான அரசின் கவனம் எம்.எஸ்.எம்.இ. மீதும் திரும்ப வேண்டும் என்பது அந்தத் துறையினரின் கோரிக்கையாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு என்பது மிகவும் குறைவானதே. மத்திய அரசின் புள்ளிவிவரத்தின்படி கடந்த 2016-17-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தியில் 31.80 சதவீதம் இந்த நிறுவனங்களின் உற்பத்தியை சார்ந்தே உள்ளன. அதேபோல், நாட்டின் மொத்த ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு 48.10 சதவீதமாகும். நாடு முழுவதும் 3.50 கோடிக்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றின் மூலம் சுமார் 11.10 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 6.70 லட்சம் பதிவு பெற்ற குறுந்தொழில் நிறுவனங்களும், 88,355 சிறு தொழில், 2,306 நடுத்தர தொழில் நிறுவனங்களும் உள்ளன.

நாட்டின் பொருளாதாரத்துக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு அளித்தல் போன்ற அனைத்துக்கும் ஆணிவேராக விளங்கும் எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள், உயர் மதிப்பு ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.க்கு பிறகு பெரும் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கின. பல்வேறு நெருக்கடிகளுக்கும் ஆளான இந்தத் தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை கடந்த 2017-18 ஆம் நிதியாண்டில் மூடப்பட்டதாக தமிழக அரசு சட்டப் பேரவையில் தெரிவித்தது.
தமிழகத்தின் தொழில் நகரம் கோவை என்ற பெயரை கோவைக்கு பெற்றுக்கொடுத்ததில் பெரும் பங்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கே உள்ளது. அந்த வகையில் பம்ப்செட், இயந்திர உதிரிபாகங்கள், பவுண்டரி, கிரைண்டர், மோட்டார் தயாரிப்பு என பல்வேறு தொழில்கள், இந்த தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பெரு நிறுவனங்களின் பணிகளை செய்து கொடுக்கக் கூடிய ஜாப் ஆர்டர் தொழில்கள் என லட்சக்கணக்கானோருக்கு வாழ்வளிப்பதாக எம்.எஸ்.எம்.இ. உள்ளது.

இவை நொடிந்து வருகின்றன என்பதை அறிந்த பிரதமர் மோடி, கடந்த ஏப்ரல் மாதம் கோவையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூட குறு, சிறு தொழில் நிறுவனங்களின் தேவைகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டோம் என்று ஆறுதல் அளித்துச் சென்றார். ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்துள்ள தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களில் ரூ.1 கோடி வரை பிணையமில்லாத கடன், கடனுக்கான வட்டிச் சலுகை, ஏற்றுமதிக்கான வட்டிச் சலுகை 3-இல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்படும், பொதுத் துறை நிறுவனங்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகள் மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டாலும் அவை செயல்பாட்டுக்கு வந்தபாடில்லை என்கின்றனர் சிறு, குறு தொழில்முனைவோர்கள்.

இந்த நிலையில், தற்போது பெரு நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் துறை மீதான அரசின் கவனம் எம்.எஸ்.எம்.இ. மீதும் திரும்ப வேண்டும் என்பது அந்தத் துறையினரின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, ஆட்டோமொபைல் துறைக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கவும், அந்நிறுவனங்களுக்கு ஜாப் ஆர்டர் செய்து கொடுக்கவும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள் கோவையில் உள்ளன. ஆனால் ஆட்டோமொபைல் துறைக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. நிர்ணயிக்கப்பட்டதால் வாகனங்களின் விலை 40 சதவீதம் வரை உயர்ந்தது. அதனால் வாகனங்களின் விற்பனை வெகுவாக சரிந்துவிட்டது.

பெரிய நிறுவனங்கள் எப்போதும் ஒரு ஆண்டுக்கான ஆர்டரை அந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடுத்துவிடுவார்கள். அதன்படி ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆர்டரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் ரத்து செய்துவிட்டனர். இதனால் 90 சதவீத குறுந்தொழில்கூடங்கள் பகுதியளவு மட்டுமே செயல்படுகின்றன. ரூ.500 கோடிக்கும் மேற்பட்ட சரக்குகள் தேங்கியுள்ளன. இந்த நிலையிலும் கூட பங்குச் சந்தையை கணக்கில் கொண்டு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே மத்திய அரசு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அதிகமான பேருக்கு வேலை வழங்கும், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குறு, சிறு தொழில்களை அரசு கண்டுகொண்டதாகவே தெரியவில்லை என்றார்.

ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதில் இருந்தே குறு, சிறு நிறுவனங்களுக்கு நெருக்கடி தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் கோவை மாவட்ட பம்ப்செட், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தின் (கோப்மா) தலைவர் மணிராஜ். விவசாயம் அத்தியாவசியத் தேவை என்பதால்தான் அந்தத் துறைக்கு சலுகைகள் பல வழங்கப்படுகின்றன. ஆனால் விவசாயத்துக்கு பெரிதும் உதவக் கூடியது பம்ப்செட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதுதான் இங்கு முரணாக உள்ளது. 5 சதவீத வாட் வரியுடன் இருந்தது இந்தத் துறை. ஆனால் ஜி.எஸ்.டி.யில் மூலப் பொருள்களுக்கு 18 முதல் 28 சதவீத வரியும், அதைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பம்ப்செட்டுகளுக்கு 12 சதவீத வரியும் விதிக்கப்பட்டது. சிறு, குறு தொழில்கள் மீதான புரிதல் இல்லாததாலேயே இந்தத் தவறு நடைபெற்றுள்ளது.

பம்ப்செட்டுகளுக்குத் தேவையான பல்வேறு பொருள்கள் ஜாப் ஆர்டர்கள் மூலம் செய்து வாங்கப்படுகின்றன. ஜாப் ஆர்டர்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதனால் வேலையிழப்பு ஏற்பட்டு தொழில் நசிந்து வருகிறது. அனுபவமிக்க தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் வேலை வரும்போது செய்வதற்கு முடியாது என்பதால் வராத்தில் 2, 3 நாள்களுக்கு ஊதியமில்லா விடுமுறை அளித்து தக்கவைத்து வருகின்றனர்.

தினசரி ரூ.50 கோடி மதிப்பில் விற்பனையாகி வந்த பம்ப்செட்டுகள் தற்போது வெறும் ரூ.5 கோடி அளவுக்கே விற்பனையாகின்றன. தொழிலில் நிலவும் கடுமையான போட்டி, விவசாயிகள் எண்ணிக்கை குறைவது, கட்டுமானத் தொழில் முடங்கியிருப்பது போன்ற பல காரணங்களால் மோட்டார், பம்ப்செட் தொழில் ஸ்தம்பித்துள்ளது. குறு, சிறு, தொழில்கள், ஜாப் ஆர்டர்களுக்கு சலுகை வேண்டும் என்று முதலாவது ஜி.எஸ்.டி. கூட்டத்தில் இருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், தற்போது நடைபெற்ற 37-ஆவது கூட்டத்தில்தான் என்ஜினீயரிங் ஜாப் ஆர்டர்கள் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகள் மீது கரிசனம் காட்டும் அரசு எங்கள் மீது கருணையாவது காட்ட வேண்டும் என்றார் அவர்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான வரியை 35 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாகக் குறைத்ததைப் போலவே எங்களுக்கும் 25 சதவீத வரி குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்கிறார் கொடிசியாவின் தலைவர் ஆர்.ராமமூர்த்தி. பொருளாதாரத்தை சரி செய்வதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு அமல்படுத்தியிருப்பதை வரவேற்கிறோம். அதேபோன்ற சலுகை எங்களுக்கும் தேவைப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்கள் தனி உரிமையாளர் நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள் மட்டுமே என்பதால் இதையும் அரசு பரிசீலிக்க வேண்டும். ஜாப் ஆர்டர்களுக்கு 12 சதவீதம் வரி என்பதும் சுமை தரக்கூடியதுதான். அதை 5 சதவீதமாகக் குறைக்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com