மந்த நிலையை சுயமாக எதிர்கொள்ளும் முனைப்பில் மோட்டார் வாகனத் துறை

மோட்டார் வாகனத் துறை மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் நிராகரித்ததையடுத்து மந்த நிலையை தனது சொந்த பலத்திலேயே எதிர்கொள்ள அத்துறை நிறுவனங்கள்
மந்த நிலையை சுயமாக எதிர்கொள்ளும் முனைப்பில் மோட்டார் வாகனத் துறை

மோட்டார் வாகனத் துறை மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் நிராகரித்ததையடுத்து மந்த நிலையை தனது சொந்த பலத்திலேயே எதிர்கொள்ள அத்துறை நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.

பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோல்களில் ஒன்றாக மோட்டார் வாகனத் துறை உள்ளது. வாகன விற்பனையை மட்டும் கணக்கில் கொண்டே பொருளாதார நடவடிக்கைகளின் ஏற்ற தாழ்வுகளை கணித்துச் சொல்லும் வல்லுநர்களும் உண்டு.

இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த இத்துறையின் வளர்ச்சியானது கடந்த சில மாதங்களாகவே மிகவும் பின்னடைவைக் கண்டு வருவது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமற்ற அம்சமாகவே பார்க்கப்படுகிறது. 

கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக கார் விற்பனை ஏப்ரல் மாதத்தில் 16 சதவீதம் சரிந்தது வாகன தயாரிப்பு நிறுவனங்களை அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் ஜூலையில் கார் விற்பனை 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியை சந்தித்து மோட்டார் வாகன துறையையே புரட்டிப் போட்டு விட்டது.
இந்த மந்த நிலையிலிருந்து மீண்டு வரும் வகையில் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட 28 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என அனைத்து நிறுவனங்களும் ஒருமித்த குரலில் மத்திய அரசை கேட்டுக் கொண்டதுடன் சமச்சீரான வரி விகிதத்தை வலியுறுத்தின.

தற்போதைய நிலையில், 60 சதவீத மோட்டார் வாகன உதிரிபாகங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் நிலையில், 40 சதவீத பாகங்கள் 28 சதவீத வரி அடுக்கிலேயே இருந்து வருவது இத்துறை நிறுவனங்களுக்கு பெரும் நிதி சிக்கலை ஏற்படுத்தியது. அதன் காரணமாகவே, அந்நிறுவனங்கள் அத்தகையை கோரிக்கையை அரசிடம் தொடர்ந்து எழுப்பி வந்தன.

இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்களை நிர்ணயிக்கும் அதிகாரமிக்க அமைப்பான ஜிஎஸ்டி கவுன்சில் வாகன தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கைகளை  முற்றிலும் நிராகரித்து விட்டது. இது, இத்துறையினரிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவையடுத்து, வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மந்த நிலையை சுயமாகவே எதிர்கொள்ள ஆயத்தமாகி விட்டன. அதற்கு அந்நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருப்பது பண்டிகை கால விற்பனையை மட்டுமே.

அரசு கைவிட்டாலும் மோட்டார் வாகன துறை தனது சொந்த பலத்தில் தேவையை அதிகரிக்கும் வழிமுறைகளை காண வேண்டும் என்கிறார் இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா. 

 எங்களது முக்கிய கோரிக்கைகளை ஜிஎஸ்டி கவுன்சில் ஏற்றுக் கொள்ளாத போதிலும், 4 மீட்டருக்கும் குறைவான 10-13 இருக்கைகள் கொண்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தீர்வை குறைக்கப்பட்டது ஓரளவுக்கு நிம்மதியை தந்துள்ளது.

வரும் பண்டிகை காலத்தில் நுகர்வோர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டு வாகன விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் அவர்.  

பொதுவாகவே வாகன விற்பனை சரிவுக்கு, ஊரகப் பகுதிகளில் பணப்புழக்கம் குறைந்து போனது, வங்கிகள் கடன் அதிக அளவில் கிடைக்காதது ஆகியவையே முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது இத்துறையில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே வல்லுநர்களின் கணிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com