பங்குச் சந்தைகளில் தொடர் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 1075 புள்ளிகள் அதிகரிப்பு சென்செக்ஸ் 1075 புள்ளிகள் அதிகரிப்பு

மத்திய அரசின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
பங்குச் சந்தைகளில் தொடர் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 1075 புள்ளிகள் அதிகரிப்பு சென்செக்ஸ் 1075 புள்ளிகள் அதிகரிப்பு


மத்திய அரசின் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளின் எதிரொலியால் இந்தியப் பங்குச் சந்தைகளில் வாரத்தின் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. முதலீட்டாளர்கள் நிதி, எஃப்எம்சிஜி, வங்கி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளை போட்டி போட்டு வாங்கியதையடுத்து சென்செக்ஸ் இரண்டு மாதங்களில் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,075 புள்ளிகள் அதிகரித்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெரு நிறுவனங்களுக்கான வரியை குறைக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன் எதிரொலியாக, அன்றைய தினமே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,921 புள்ளிகள் உயர்வைக் கண்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 569 புள்ளிகள் உயர்ந்தது.
 இருநாள்கள் விடுமுறைக்குப் பிறகும் அதே உற்சாகம் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்திலும் தொடர்ந்தது. 
பெருநிறுவன வரி குறைப்பு நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்கும் என்பதுடன், பொருள்களின் விலை குறைந்து தேவையும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிறுவனங்கள் ஈட்டும் அதிக லாபத்தை பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வடிவில் வழங்கும் அல்லது  மூலதன செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில், பொறியியல் பொருள்கள், வங்கி, நிதி, எஃப்எம்சிஜி, எண்ணெய்-எரிவாயு, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட் துறை குறியீட்டெண்கள் 6.55 சதவீதம் வரை அதிகரித்தன.
அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டெண்கள் 3.29 சதவீதம் வரை குறைந்தன.
சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள பஜாஜ் பைனான்ஸ், எல் அண்டு டி, ஏஷியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி, மாருதி மற்றும் எஸ்பிஐ நிறுவன பங்குகள் 8.70 சதவீதம் வரை விலை அதிகரித்தன. 
அதேசமயம், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட், என்டிபிசி, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் பங்குகள் 4.97 சதவீதம் வரை விலை குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 1,426 புள்ளிகள் வரை அதிகரித்த போதிலும், இறுதியில் 1,075 புள்ளிகள் ஏற்றம் பெற்று 39,090 புள்ளிகளாக நிலைபெற்றது. ஜூலை 17}க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவு இது.
தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 326 புள்ளிகள் உயர்ந்து 11,600 புள்ளிகளாக நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com